Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2010இல் கிரிக்கெட் உலகம் - ஒரு பார்வை

Advertiesment
2010 கிரிக்கெட்
, வியாழன், 30 டிசம்பர் 2010 (18:43 IST)
2010ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த ஆண்டாகும். குறிப்பாக நமக்கு நினைவுக்கு வருவது இந்தியா தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்தது. ஆஸ்ட்ரேலிய அணியின் சீர்குலைவு, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளின் எழுச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்று 2010ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகம் நிகழ்வுகளும் சுவையான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களையும் கொண்ட ஆண்டாக உள்ளது.

இந்தியா

2010ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை தொடங்கியது. அந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்று வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரைத் தொடங்கியது.

ஜூன் மாதம் 2010-இல் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று ஆசிய சாம்பியன் பட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பெற்றது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும்.

ஆனால் அதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி தழுவி வெளியேறியது ஒரு பின்னடைவாகும். அதில் இங்கிலாந்து வெற்றிபெற்று அதுவே அந்த அணிக்கு ஒரு உத்வேகமாக உருவெடுத்தது.

ஜூலை ஆகஸ்டில் இந்தியா மீண்டும் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கச் சென்றது. அங்கு ஒரு டெஸ்ட் போட்டியை இலங்கை வெல்ல முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்து ஓய்வு அறிவித்தார். ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் வி.வி.எஸ். லஷ்மணின் அபார சதத்துடன் இந்தியா 264 ரன்கள் வெற்றி இலக்கை அபாரமாகத் துரத்தி தொடரை சமன் செய்தது.

பிறகு ஆஸ்ட்ரேலிய அணி இங்கு வந்தது அதில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இதில் மிகக்குறைவான வெற்றி இலக்கை இந்தியா துரத்துவதில் சிக்கல் ஏற்பட்டு பிறகு வி.வி.எஸ். லஷ்மண் தனது அபார ஆட்டத்தின் மூலமும் இஷாந்தின் மன உறுதியுடனும் இந்தியா வெற்றி பெற்றது. பிறகு அடுத்த டெஸ்டிலும் வென்று முதன் முதலாக ஆஸ்ட்ரேலிய அணிக்கு தொடர் முழுதும் தோல்வி ஏற்படச் செய்தது இந்தியா.

முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுடன் முதல் டெஸ்டை வெற்றி பெற்றது. பிறகு 2-வது டெஸ்ட் போட்டியின் பரபரப்பான கணங்களில் ஹஷிம் அம்லா இந்திய வெற்றியைத் தடுத்து விடுவார் என்று நினைத்திருக்கையில், கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் ஹர்பஜன் சிங் மோர்னி மோர்கெல் விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை 1- 1 என்று சமன் செய்தது இந்த ஆண்டின் மறக்க முடியாத தொடர்களில் ஒன்று.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்கும் முயற்சி மட்டுமல்லாமல் தொடரையே முதல் முறையாக வெல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. டர்பன் டெஸ்ட் வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணி 2010ஆம் ஆண்டை சிறபாக முடித்துள்ளது. கேப்டவுன் டெஸ்டில் வென்று அடுத்த ஆண்டை சாதனையுடன் துவங்கும் இந்தியா என்று எதிர்பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த உலக சாதனை 200 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை நிகழ்த்தியது, விரேந்திர சேவாக் ஐ.சி.சி. சிறந்த பேட்ஸ்மென் விருது பெ'ற்றது. இலங்கைக்கு எதிராக ஒரே நாளில் 284 ரன்கள் குவித்து சாதனை புரிந்தது, கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் 50-வது டெஸ்ட் சதத்தை எடுத்து உலகிற்கு இந்த சாதனையை வீழ்த்த இன்னொருவர் பிறந்து வரவேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் அறிவித்தது ஆகியவை இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டிலும் ஒரு தன்னிகரற்ற மைல் கல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. திராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்களை பிடித்து அந்தச் சாதனையையும் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த ஆண்டு 2010.

இங்கிலாந்து

2010ஆம் ஆண்டு இங்கிலாந்தின் எழுச்சி ஆண்டு என்றால் அது மிகையாகாது. ஆஸ்ட்ரேலியாவில் ஆஷஸ் தொடரை 5- 0 என்று தோற்று பிறகு இந்தியாவில் ஒருநாள் டெஸ்ட் தொடர் இரண்டையும் இழந்து கெவின் பீட்டர்சன் தலைமையில் பிரச்சனைகள் எழ ஸ்ட்ராஸ் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

அப்போது முதல் இங்கிலாந்து ஒரு அணியாக பலமாக உருப்பெற்று வருகிறது. ஜொனாதன் டிராட் என்ற தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென், கிரகாம் ஸ்வான் என்ற சிறந்த ஆஃப் ஸ்பின்னர், ஆண்டர்சனின் வேகம், ஸ்டீவ் ஃபின் என்ற மெக்ரா ரக பந்து வீச்சாளரின் வருகையும் அவரது வெற்றியும் ஸ்டூவர்ட் பிராடின் பந்து வீச்சு அற்புதமும் பயனுள்ள பேட்டிங்கும் இங்கிலாந்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3- 1 என்று வெற்றி பெற்ற பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்ட்ரேலியாவை ரிக்கி பாண்டிங் தலைமையில் மீண்டும் மண்ணைக் கவ்வச் செய்தது என்று இங்கிலாந்து வளர்ச்சிப்பாதையில் அதுவும் ஒரு டெஸ்ட் அணியாக மட்டுமின்றி ஒருநாள், இருபது ஓவர் கிரிக்கெட் என்று அனைத்துத் தரப்பிலும் சிறந்து விளங்கச் செய்துள்ளார் ஸ்ட்ராஸ்.

முத்தாய்ப்பாக பால் காலிங்வுட் தலைமையில் மேற்கிந்திய தீவுகளில் இருபது ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்று முதன் முதலில் ஒரு உலகக் கோப்பையை வென்ற சாதனையை நிகழ்த்தியது இங்கிலாந்து.

ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலிய அணிகளை மண்ணைக்கவ்வச் செய்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்ட்ரேலிய மண்ணில் 1986ஆம் ஆண்டுக்குப்பிறகு ஆஷஸ் தொடரைக் கைப்பற்றும் நிலைக்கு வந்துள்ளது முன்னேறியுள்ளது இங்கிலாந்து.

அடுத்த ஆண்டு இந்த அணி இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்போம் என்று ஸ்ட்ராஸ் சூளுரைத்துள்ளார். இதுவும் ஸ்ட்ராஸ் தலைமையின் கீழ் நடக்காது என்று கூற இடமில்லை.

2010ஆம் ஆண்டு ஒருநாள், இருபது ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என்று அனைத்துத் தரப்பிலும் இங்கிலாந்து ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. ஒரு காலத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தினால் பெருமை என்று இருந்தது. அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய அணியை வீழ்த்தினால் பெருமை என்று மாறியது இன்று இங்கிலாந்தை வீழ்த்துவது பெருமை என்ற நிலைக்கு அந்த அணி வளர்ந்துள்ளது. 2010 இங்கிலாந்தின் எழுச்சி.

தென் ஆப்பிரிக்கா

2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு கலவையான ஒரு ஆண்டாக அமைந்தது. இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அந்த அணி மீண்டும் தோல்வி தழுவி வெளியேறியது. அதன் பிறகு இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று 2-வது டெஸ்ட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் தோல்வி தழுவியது. பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டிலும் இந்தியாவிடம் 1- 2 என்று தோல்வி தழுவியது.

ஆனால் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட அணிகளில் பெரிய அளவுக்கு தோல்விகளை தழுவாமல் தொடரை டிரா செய்து வரும் மரபை ஸ்மித்தும் இந்த ஆண்டில் தொடர்ந்தார்.

அந்த அணியில் ஹஷிம் அம்லா என்ற ஒரு மகத்தான 3ஆம் நிலை வீரரின் எழுச்சி இந்த ஆண்டில்தான் நிகழ்ந்தது. துவக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்காக தேர்வு செய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டார். பிறகு கிப்ஸ் போன பிறகு இவரை மீண்டும் கொண்டு வந்தனர். இன்று அவர் விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அங்கு மிகப்பெரிய வெற்றிகளைச் சாதித்தது. டெஸ்ட் தொடரில் 3 டெஸ்டில் 2-இல் வெற்றிபெற்றதோடு, ஒரு நாள் தொடரில் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று வெஸ்டிண்டீசுக்கு அதிர்ச்சியளித்தது.

நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அபுதாபியில் விளையாடிய தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற முடியாமல் போனது பாகிஸ்தான் டிரா செய்தக்டு. ஒரு நாள் தொடரைக் கைப்பற்றினாலும் முழு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை அதிலும் 3- 2 என்றே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற முடிந்தது. டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் போன்ற வீரர்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முடியாமல் போனது அந்த அணிக்கு ஒரு பின்னடைவுதான்.

இப்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில் செஞ்சூரியனில் பெற்ற வெற்றியை டர்பனில் கோட்டை விட்டு இந்த ஆண்டை தோல்வியுடன் முடித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. பலமான் அணியாக இருந்தும் அதன் திறமைக்கேற்ப விளையாடாத ஒரு அணியாக தென் ஆப்பிரிக்கா திகழ்கிறது.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. இது தோல்வியினால் அல்ல. இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்ததால் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணிக்கு இது ஒரு சராசரியான் ஆண்டு.

ஆஸ்ட்ரேலியா

2010ஆம் ஆண்டை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டின் வீழ்ச்சியின் துவக்கம் என்றே கூறிவிடலாம். பாகிஸ்தானுக்கு எதிராக் டெஸ்ட் தொடரை 3- 0 என்று கைப்பற்றிய ஆஸ்ட்ரேலியா அதன் பிறகு பலமிழந்த பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு தன் சொந்த மண்ணில் அந்த அணியை ஒரு நாள் தொடரில் 5- 0 என்று வீழ்த்தியது.

உடனேயே மேற்கிந்திய அணிக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொண்ட ஆஸ்ட்ரேலியா 4- 0 என்று கைப்பற்றி தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. மார்ச்சில் நியூஸீலாந்து சென்று அங்கு டெஸ்ட் தொடரில் 2- 0 என்று வெற்றி பெற்ற ஆஸ்ட்ரேலியா அதே தொடரில் ஒருநாள் தொடரையும் 3- 2 என்று கைப்பற்றியது.

இங்கிலாந்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தொடரை 1- 1 என்று சமன் செய்தது. ஆனால் அதுவல்ல விஷயம் மிகவும் குறைந்த ரன் எண்ணிக்கையில் அவுட்டாகும் அணியாக ஆஸ்ட்ரேலியா மாறத் தொடங்கியது.

இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் தோல்வி தழுவியது ஆஸ்ட்ரேலியா, பிறகு இந்தியா வந்து பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி தழுவி மண்ணைக் கவ்வியது. மேலும் ஒருநாள் தொடரில் ஒரே போட்டியையும் கோட்டை விட்டு முழு தோல்வியுடன் நாடு திரும்பியது ஆஸ்ட்ரேலியா.

இந்த மனோநிலையில் இங்கிலாந்தை எதிர்கொண்ட ஆஸ்ட்ரேலியா ஆஷஸ் கோப்பையை மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என்ற வெறியுடன் களமிறங்கி பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய முன்னிலை பெற்றது. ஆனால் பந்து வீச்சு மோசம் தொடர இங்கிலாந்து 517 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று டெஸ்ட் போட்டியை டிரா செய்தது.

அடிலெய்டில் பேட்டிங் ஆட்டக்களத்தில் தோல்வி தழுவிய ஆஸ்ட்ரேலியா, மீண்டும் பந்து வீச்சு ஆட்டக்களமான பெர்த்தில் மிட்செல் ஜான்சன் பந்து வீச்சு மூலம் எழுச்சி பெற்று இங்கிலாந்தை வீழ்த்தி சமன் செய்தது. மீண்டும் கர்வமான பேச்சு, என்று பழைய பாணியில் திரும்பிய பாண்டிங் தலைமை ஆஸ்ட்ரேலியா மெல்போர்னில் முதல் நாள் ஆட்டத்திலேயே 98 ரன்களுக்குச் சுருண்டது. ஆனால் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 160 ரன்களை அன்றே குவித்து ஆஸ்ட்ரேலியாவின் முகத்தில் கரியைப் பூசியது. பிறகு மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றது.

ஆஸ்ட்ரேலியாவின் வீழ்ச்சி என்று கூறக்காரணம் என்னவெனில் ஆஸ்ட்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு டெஸ்ட் தொடரில் இருமுறை இன்னிங்ஸ் தொல்வியை அந்த அணி சந்தித்ததேயில்லை என்பதுதான்.

ரிக்கி பாண்டிங் துர் நடத்தை, அபராதம் செலுத்தியது, சைமண்ட்ஸ் மேலும் கிரிக்கெட் ஆட முடியாமல் போனது. நல்ல துவக்க வீரர் அமையாதது. என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்ட்ரேலியா சரியத் தொடங்கிய ஆண்டு இது என்று கூறலாம்.

இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட், மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட்டில் இன்றும் இந்த அணியை அசைத்துக் கொள்ளமுடியாது என்றே கூறிவிடலாம்.

ஆஸ்ட்ரேலியாவுக்கு மோசமான நினைவுகளைக் கொடுக்கும் ஆண்டுதான் 2010.

இலங்கை

சர்வதேச கிரிக்கெட் உலகில் 1983ஆம் ஆண்டு நுழைந்த ஒரு அணி அதற்குள் உலகக் கோப்பையைக் கைப்பற்றி, முத்தையா முரளிதரன் என்ற மிகப்பெரிய மேதையையும், ஜெயசூரியா என்ற உலகின் தலை சிறந்த ஒரு நாள் பேட்ஸ்மெனையும் கொடுத்த அணியாக வளர்ந்துள்ளக்டு. 27 ஆண்டுகால கிரிக்கெட்டிற்குள் உலக சாம்பியனாகவும், இரண்டு உலகக் கோப்பைகளில் ஒன்றில் அரையிறுதி வரையிலும் ஒன்றில் இறுதிக்குள் நுழைவதும் சாதாரண விஷயமல்ல.

அந்த அணிக்கு 2010ஆம் ஆண்டு வெற்றி தோல்விகளுடன் கலவையாக இருந்தாலும் அந்த அணி பேரிய அளவில் அடிமட்டத்திற்கு சென்றதான காலக்கட்டம் ஏறக்குறைய இல்லை என்றே கூறலாம். சீரான ஒரு அணியாகத் திகழ்கிறது இலங்கை.

இந்த ஆண்டில் இலங்கை அதிக போட்டிகளை விளையாடாமல் போனது ஒரு விதத்தில் அந்த அணியின் வளர்ச்சியைத் தடுத்து விட்டது என்றே கூறலாம்.

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை தங்கள் சொந்த மண்ணில் 1௧ என்று சமன் செய்தது. அது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரு டெஸ்டை சச்சின் தனது அபார இரட்டைச் சதத்தின் மூலம் டிரா செய்தார்.

இந்தத் தொடரில்தான் முரளிதரன் எனும் அற்புதன் ஓய்வு பெற்றார். குறிப்பாக முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 800 என்ற மைல்கல்லை எட்டும் நிலையில் இருந்தார். அந்தக் கனவுடன் முதல் டெஸ்டை விளைஆடிய முரளிதரன் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 800 என்ற யாரும் எளிதில் உடைக்க முடிஅயத சாதனையை நிகழ்த்தி அந்த டெஸ்டிலும் இலங்கையை வெற்றிபெறச் செய்து திருப்திகரமான டெஸ்ட் என்ற நிறைவுடன் ஓய்வு பெற்றார் அவர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம் அல்லது மற்ற அணிகளின் அதிர்ஷ்டம் முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதுதான்.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திஆவுக்கு எதிராக தோல்வி தழுவியது இலங்கை. ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் வென்றது. இந்தியா, இலங்கை, நியூஸீலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் இந்தியாவை இறுதியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பிறகு ஆஸ்ட்ரேலியாவுக்குச் சென்று இருபது ஒவர் கிரிக்கெட் ஒன்றிலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்ற இலங்கை இருபது ஓவர் கிரிக்கெட்டில் மலிங்கா, மேத்யூஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் தோல்வியிலிருந்து வெற்றியாக மாற்றி ஆஸ்ட்ரேலியாவுக்கு அதிலும் ஆப்பு வைத்தனர்.

அதன் பிறகான ஒரு நாள் தொடரில் முதன் முதலாக் ஆஸ்ட்ரேலிய மண்ணில் 2- 1 என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை ஒருநாள் தொடரை வென்றது.

கடைசியாக மேற்கிந்திய அணி இலங்கைக்கு வந்தபோது மழையால் முழுத் தொடரும் பாதிக்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்டில் கிறிஸ் கெய்ல் முச்சதம் கண்டு இலங்கையை தோல்வியுறும் நிலைக்குத் தள்ளினார். ஆனால் அந்தத் தொடரில் இலங்கையின் பலவீனம் வெளிப்பட்டது.

ஆனால் பொதுவாக அந்த அணி ஜெயசூரியா, முரளிதரன் ஆகியோர் இல்லாத போதும் மாற்று வீரர்களைக்கொண்டு சிறப்பாகவே விளையாடுகின்றனர்.

பொதுவாக இலங்கை அணி அதிகமாக போட்டிகளை விளையாடுவதில்லை. நெரிசலான கிரிக்கெட் பயணங்களை மேற்கொள்வதில்லை. அதுதான் அந்த அணி சீரான முறையில் இயங்கி வருவதற்குக் காரணமா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

ஆஸ்ட்ரேலியாவில் பெற்ற ஒரு நாள் தொடர் வெற்றியின் நினைவில் இலங்கைக்கும் 2010 ஓரளவுக்கு நல்ல ஆண்டாகவே அமைந்துள்ளது.

மற்ற அணிகளும் ஆட்டங்களும்

மேற்கூறிய 5 அணிகள்தான் உலகத் தரவரிசையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 5 இடங்களில் உள்ளன. மற்ற அணிகளில் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் மீது அதிக குறை கூற முடியாது என்றாலும் சூதாட்டச் சர்ச்சையில் சிக்கி அந்த அணி அதில் மூழ்கிவிட்ட ஒரு அணியாகப்போனது.

இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் வெற்றி, ஆஸ்ட்ரேலியாவுடன் ஒரு டெஸ்ட் வெற்றி, தென் ஆப்பிரிக்காவை வெல்ல விடாமல் டிரா செய்து தடுத்தது. ஒரு நாள் போட்டிகளில் தொடர்களை இழந்தாலும் சவாலான ஆட்டங்களை விளையாடியது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் அவ்வளவு ஓட்டை ஆகிவிடவில்லை. கிரிக்கெட் அல்லாஅத விஷயங்களின் தாக்கம், மோசமான நிர்வாகம் சூதாட்டத் தரகர்கள், நிழலுலக தாதாக்களின் தாக்கம் ஆகியவற்றினால் அந்த ஆசிப், ஆமிர், சல்மான் பட் ஆகிய சிறந்த வீரர்களை இன்று இழந்துள்ளது.

இளம் விக்கெட் கீப்பர் ஒருவர் சூதாட்டக்காரர்களின் மிரட்டலுக்குப் பயந்து ஓய்வுஏ அறிவித்து விட்ட்டார்.

எனவே அந்த அணி சூதாட்டச் சர்ச்சையில் அமிழ்ந்துள்ளது. அதிலிருந்து அந்த அணி வெளியே மீள்வது கடினம் என்றே தோன்றுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சில பல தனி வீரர் ஆட்டத்திறன் தவிர ஒரு அணியாக அது ஒன்றையும் இந்த ஆண்டு சாதித்து விடவில்லை. கிறிஸ் கெய்லின் முச்சதம் மட்டுமே அதற்கு கிடைத்த சிறந்த இந்தா ஆண்டின் பரிசு. மோசமான அணியில் சிக்கி கேமர் ரோச் போன்ற அச்சுறுத்தும் பழைய பாணி வேகப்பந்து வீச்சாளர்களின் எதிர்காலமும் பாழாகி வருவதைத் தவிர மேற்கிந்திய கிரிக்கெட்டில் எந்த வித முன்னேற்றமும் இல்லை.

இதற்கு வெளியே வங்கதேசம் அபாரமாக வந்து கொண்டிருக்கிறது. நியூஸீலாந்தை 4- 0 என்று வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது வங்கதேசம், இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் ஒருநாள் போட்டியில் இரு வெற்றிகளைப் பெற்றது. தமீம் இக்பால், ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹஸனின் சிறப்பான ஆட்டங்கள், அப்துல்லாவின் ஆல்ரவுண்ட் திறமை என்று அந்த அணி மெதுவே இலங்கை போல் உருவாகி வருகிறது.

சுருக்கமாக இந்த அணிக்கும் 2010 எதிர்கால வெற்றிக்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஆண்டாக உள்ளது.

ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டுமென்றால் 2010 மகேந்திர சிங் தோனிக்கு ஒரு கேப்டனாக சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. டெஸ்ட் தொடரை இழக்காமல் வெற்றி பெற்று வருவது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது, ஆஸ்ட்ரேலியாவை தொடர் முழுதும் வீழ்த்தியது. இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் சாதனையை தொடர்வது என்று 2010ஆம் ஆண்டு தோனிக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil