20-20 உலகக் கோப்பையில் இந்திய அணி பெற்ற வெற்றி குருட்டாம்போக்காக கிடைத்த வெற்றி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று 20-20 ஃப்யூட்டர் கோப்பைக்கான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி கூறினார்.
மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
இந்த வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணித் தலைவர் தோனி, இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 20-20 உலகக் கோப்பையில் கிடைத்த வெற்றி குருட்டுப்போக்காக கிடைத்த வெற்றி அல்ல என்பதை நிரூபித்துள்ளோம் என்றார்.
துவக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் தனது ஆபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் வெகு சிறப்பாக இருந்தது. இதையே அடுத்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த வெற்றி, எங்களது தன்னம்பிக்கையை மேலும் உயர்த்துவதாக அமையும். இந்த அணி, பேட்டிங்கிலும், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கிலும் கைதேர்ந்து உள்ளது என்றார் தோனி.
கெளதம் கம்பீருக்கு தனது வாழ்த்துக்களையும் தோனி தெரிவித்துக் கொண்டார்.
இந்திய அணி இதேப்போன்ற அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தும் என்று தோனி உறுதி அளித்தார்.
ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட கெளதம் கம்பீர் பேசுகையில், ஒரு நாள் போட்டிகளில் தனது ஆட்டத்திறன் உயர்ந்திருப்பதை உணர்ந்துள்ளதாகக் கூறினார்.
இந்தியா-ஆஸ்ட்ரேலியா 20-20 போட்டியில் தங்கள் அணி தோல்வி அடைந்ததற்கு, ஆஸி பந்து வீச்சாளர்கள் கூடுதல் ரன்களை அளித்ததே காரணம் என்று அணித் தலைவர் ரிக்கி பான்டிங் கூறினார்.
இந்த போட்டியில் ஆஸி. வீரர்கள் 24 கூடுதல் ரன்களை அளித்தனர். இந்திய பந்து வீச்சாளர்களோ 9 கூடுதல் ரன்களை மட்டுமே அளித்தனர்.
20-20 கிரிக்கெட் போட்டிக்கும் ஏற்றவாறு தங்களது அணியினர் தயாராகிக் கொள்வார்கள் என்றும் ரிக்கிப் பான்டிங் தெரிவித்தார்.