ஹைதராபாத் டெஸ்ட்: விறுவிறுப்பாக இருக்கும்
, வியாழன், 11 நவம்பர் 2010 (17:11 IST)
“அகமதாபாத் விக்கெட்டைப் போல இது செத்தக்களமாக இருக்காது. பந்து நன்கு எழும்பும், அதே வேளையில் இரண்டாவது, மூன்றாவது நாளில் நன்கு திரும்பும்” என்று ஹைதராபாத்திலுள்ள இராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதான ஆட்டக்களத்தைப் பார்த்த நியூ ஸீலாந்து அணியின் துணைத் தலைவர் ராஸ் டெய்லர் கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும்.5
நாட்களும் டெஸ்ட் போட்டி நடைபெற வேண்டு்ம் என்கிற விளம்பரதாரர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் ஆட்டக்களங்கள் அமைக்கப்படும் இந்நாளில், பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான விறுவிறுப்பான ஆட்டத்திற்கு வழிவகுக்கும் இப்படிப்பட்ட ஒரு ஆட்டக்களத்தில்தான் நாளை இந்தியா - நியூ ஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.22
ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது ஆந்திர கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசப் பயணத்தில் தொடரை இழந்த தோல்வியால் துவண்டு வந்த நியூ ஸீலாந்து அணி, டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் முதல் இடத்திலுள்ள இந்திய அணியை அகமதாபாத் டெஸ்ட்டில் திணறடித்ததால் உற்சாகம் பெற்று, புத்துணர்வுடன் நாளை களமிறங்கப்போகிறது.இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் போட்டி நிச்சயம் ஒரு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நியூ ஸீலாந்து அணியின் கிரிஸ் மார்ட்டினின் ஸ்விங் வீச்சிற்கு இந்த ஆட்டக்களம் மிகச் சாதகமாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. அகமதாபாத் போன்ற செத்தக்களத்திலேயே சிறப்பாக வீசியவருக்கு, சாதகமான இந்த ஆட்டக்களம் நன்கு உதவும். எனவே இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு மார்ட்டின் பெரும் சவாலாக இருப்பார். ஆனால் மறுமுனையில் இவருக்கு இணையாக ஆட்டக்களத்தின் தன்மையை உணர்ந்து பந்து வீசக்கூடிய வீச்சாளர் வேண்டும். இந்திய அணியைப் பொறுத்தவரை, பூவா தலையா வென்று முதலில் களமிறங்கினாலோ அல்லது களமிறக்கப்பட்டாலோ அது முதல் 30 ஓவர்களை நிதானித்து ஆடி, விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் நின்றாடினால் பிறகு நல்ல எண்ணிக்கையை எட்ட முடியும். வங்க தேச தொடரில் பெற்றத் தோல்விக் கறையைத் துடைத்தெறிய வேண்டும் என்ற முனைப்பில் உள்ள நியூ ஸீலாந்து அணி, இந்த டெஸ்ட்டில் தன்னை முழுமையாக நிலை நிறுத்த நிச்சயம் முயற்சிக்கும் என்பதால், முதலில் களமிறங்கினால் நிதானித்து ஆடுவது இந்திய அணிக்குப் பயனளிக்கும்.ஆனால், இந்த கோட்பாடெல்லாம் இன்றைய உலகின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரராகத் திகழும் வீரேந்திர சேவாக்கிற்கு பொருந்தாது என்பதைக் கூறத் தேவையில்லை. அவருக்கு ஆட்டக்களம், எதிரணி, சிறந்த வீச்சாளர் என்று ஏதுமில்லை. எனவே அவருடைய துணிச்சலாக விளாசல் இந்த டெஸ்டிலும் கைகொடுத்தால் அது இந்தியாவிற்கு மீண்டும் ஒரு சிறப்பான துவக்கத்தை அளிக்கும் எனபதில் சந்தேகமில்லை.இந்திய அணியின் வேகப் பந்து வீச்சும் சொல்லிக்கொள்ளக் கூடிய அளவிற்கு இல்லை. ஜாகீர் கானின் மித வேகப் பந்து வீசசைத் தவிர்த்து பார்த்தால், இந்தியாவின் வேக பந்து வீச்சு பெரும் சவாலாக தெரியவில்லை.ஆனால், ஹர்பஜன், பிரக்யான் ஓஜா ஆகியோர், களம் சுழற்பந்திற்கு சாதகமான நிலைக்கு வரும்போது எதிரணிக்கு பெரும் சவாலாக இருப்பார்கள். இவர்களோடு, சேவாக், சச்சின் சேரும்போது ஒரு பலமான சுழற்பந்துத் தாக்குதலை கொடுக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளது.இந்தியாவின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை, வெங்கட் சாய் லக்ஷ்மணின் ஆட்டம் அவரது மாநில மண்ணில் பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை. முதலில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்து, 500 ரன்கள் அளவிற்கு முதல் இன்னிங்சில் இந்தியா குவித்துவிடுமானால், டெஸ்ட் போட்டி அதற்கு சாதகமாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை மழை மிரட்டிக் கொண்டிருக்கிறது. வருணன் வழிவிட்டால் நல்ல டெஸ்ட் போட்டி ஒன்றை ரசிக்கும் வாய்ப்புக் கிட்டும்.