Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வித்தியாசமானது ஸ்ட்ராஸ் தலைமை இங்கிலாந்து அணி!

Advertiesment
உலகக் கோப்பை
, வியாழன், 3 பிப்ரவரி 2011 (16:47 IST)
webdunia photo
FILE
இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் களமிறக்கப்பட்ட இங்கிலாந்து அணியை விடவும் இந்த முறை களமிறக்கப்படும் இங்கிலாந்து அணி அதன் தலைவர் ஸ்ட்ராஸின் தன்னம்பிக்கையை தன்னுள் கொண்டுள்ள அணியாகும். நல்ல திறமையான பேட்ஸ்மென்கள், பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்களைக் கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல சாதகமான அணி என்று நிபுணர்களால் கருதப்படுகிறது.

முந்தைய உலகக் கோப்பைகள்:

1975ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வரும் இங்கிலாந்து இது வரை 59 உலகக் கோப்பை போட்டிகளில் 36-இல் வென்று 22-இல் தோல்வி தழுவியுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இந்த ஒரு ஆட்டம் பாகிஸ்தானுக்குச் சாதகமாக 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையைத் திருப்பியது என்றால் அது மிகையாகாது. ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற அந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 76 ரன்களுக்குச் சுருண்டது. இலக்கை சுலபமாக எட்டி இங்கிலாந்து வெற்றி பெற வேண்டியது ஆனால் குறைந்த பட்ச ஓவர்கள் வீசுவதற்கு முன்பே மழை வந்ததால் ஆளுக்கு ஒரு பாயிண்ட் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தால் அதன் அரையிறுதி வாய்ப்பே பறிபோயிருக்கும்!

இந்தியாவில் நடைபெற்ற முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் 1987ஆம் ஆண்டு கேட்டிங் என்ற திறமையான கேப்டன் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இறுதியில் ஆஸ்ட்ரேலியாவுடன் தோல்வி தழுவியது. அதுவும் கேட்டிங்கின் ஒரு மோசமான, பொறுப்பற்ற ஸ்டோக்கினால் தோல்வி ஏற்பட்டது.

1992ஆம் ஆண்டு இந்த அணி தென் ஆப்பிரிக்காவுடன் அரையிறுதியில் தோல்வி தழுவியிருக்கும். ஆனால் டக் வொர்த் லூயிஸ் முறையின் அபத்தத்தினால் தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக வெளியேற நேரிட்டு இங்கிலாந்து வெற்றி பெற்று இறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி தழுவியது.

இங்கிலாந்து அணிக்கு மரியாதையான உலகக் கோப்பை என்பது இத்துடன் முடிந்தது என்றே கூறவேண்டும். 1996, 1999, 2003 ஆகியவற்றில் இங்கிலாந்து சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் செய்து விட முடியவில்லை.

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் கிறிஸ் கெய்ல் வாட்டி வதைக்க 300 ரன்களை மேற்கிந்திய அணி குவிக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து கெவின் பீட்டர்சனின் அதிரடி சதத்தினாலும் மைக்கேல் வானின் அதிரடி 79 ரன்களாலும், கடைசியில் நிக்சன் என்பவரின் 39 ரன்களாலும் வெற்றி கரமாக இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றது.

அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் 154 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது. அடுத்த போட்டியில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தியது. அடுத்ததாக அயர்லாந்தையும் வீழ்த்தியது. ஆனால் அரையிறுதிக்கு இலங்கை, நியூஸீலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலிய அணிகளே தகுதி பெற்றன.

ஆனால் ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் 5-இல் வென்று 4-இல் தோல்வி தழுவியது இங்கிலாந்து. சுமாரான ஒரு உலகக் கோப்பை என்று கூறலாம்.

ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் மற்றும் துணைக்கண்டத்தில் இங்கிலாந்து

1971ஆம் ஆண்டு முதல் 2011 தற்போது வரை 548 ஒரு நாள் போட்டிகளில் 264இல் வெற்றி பெற்று 261-இல் தோல்வி தழுவியுள்ளது.

இதன் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் எடுத்துப் பார்த்தால் இந்தியாவுடன் 70 போட்டிகளில் 30-இல் மட்டுமே வென்றுள்ளது 38 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுடன் 44 போட்டிகளில் 23-இல் தோல்வி தழுவி 18-இல் வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீசுடன் 82 போட்டிகளில் 37-இல் வென்று 41-இல் தோல்வி தழுவியுள்ளது. எனவே பி-பிரிவில் உள்ள முக்கிய அணிகளுக்கு எதிராக தோல்விகளே அதிகம் பெற்றுள்ளது இங்கிலாந்து.

இந்தியாவில் விளையாடிய 45 போட்டிகளில் 19-இல் வென்று 26-இல் தோல்வி தழுவியுள்ளது. இலங்கையில் விளையாடிய 15 போட்டிகளில் 5-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 68 போட்டிகளில் 38-இல் வென்று 28-இல் தோல்வி தழுவியுள்ளது. பாகிஸ்தானில் விளையாடிய 25 போட்டிகளில் 13இல் வென்று 12-இல் தோற்றுள்ளது.

எனவே புள்ளிவிவரங்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக இல்லை. எனினும்...

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 2006ஆம் ஆண்டு முதல் (இடையில் இல்லாமல்) 2011ஆம் ஆண்டு வரை 54 போட்டிகளில் தலைமை வகித்ததில் 24இல் வெற்றி பெற்று 29-இல் தோல்வி தழுவியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் நாசர் ஹுசைன், மைக்கேல் வான் ஆகியோர்களே இங்கிலாந்தை அதிக போட்டிகளில் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

இந்த அணியின் வித்தியாசம் என்னவெனில் ஸ்ட்ராஸின் தலைமையில் ஒரு அணியாகத் திரண்டு எழுந்து ஆஸ்ட்ரேலியாவை ஒரு-நாள் தொடர் ஒன்றில் வீழ்த்தியதோடு, பாகிஸ்தானையும் வீழ்த்தியது. தற்போது ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான தோல்விகளை விட்டு விடுவோம். ஏனெனில் இந்தியாவின் ஆட்டக்களங்கள் வேறு, ஆஸ்ட்ரேலியாவின் ஆட்டக்களங்கள் வேறு.

இந்த முறை ஸ்ட்ராஸுக்குத் தக்க துவக்க வீரரை தேர்வு செய்யாமல் போனது இங்கிலாந்தின் பெரிய தவறாகும். விக்கெட் கீப்பர் பிரையரை துவக்கத்தில் களமிறக்குவது சரியல்ல.

மற்றபடி ஜொனாதன் டிராட்டின் சமீபத்திய ஃபார்ம், கெவின் பீட்டர்சனின் மிகப்பெரிய வரம்பு மீறிய ஆட்டம், ஸ்ட்ராஸின் அதிரடித் துவக்கம், இயன் பெல், காலிங்வுட் ஆகியோரது பேட்டிங், இயான் மோர்கன் என்ற நடுக்கள அதிரடி வீரர் என்று இங்கிலாந்து பேட்டிங் பலமகாவே உள்ளது. ஆல்ரவுண்டர் இடத்திற்கு டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளனர்.

பந்து வீச்சில் கிரேம் ஸ்வானின் ஆஃப் ஸ்பின் இந்த முறை இந்திய ஆட்டக்களங்களில் பெரிய அளவுக்கு இங்கிலாந்துக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவர் தவிர ஜேம்ஸ் ஆண்டர்சன் சோபிப்பது கடினம். டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், யார்டியின் இடது கை சுழற்பந்து லுக் ரைட்டின் ஆல்-ரவுண்ட் திறமை ஆகியவற்றினால் ஒரு சிறந்த அணியாக இங்கிலாந்து விளங்குகிறது.

ஸ்ட்ராஸ், இயன் பெல் துவக்கத்தில் களமிறங்க, டிராட், பீட்டர்சன், இயான் மோர்கன், காலிங்வுட், பிரெஸ்னன், பிராட், ஸ்வான், யார்டி, என்ற அணியைக் களமிறக்கினால் பலம் நிறைந்த அணியாக இங்கிலாந்து இருக்கும். யார் விக்கெட் கீப்பர் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? டிராட் விக்கெட் கீப்பிங் செய்வார். இல்லையென்றால் மேட் பிரையரை அணியில் சேர்த்தால் ஜேம்ஸ் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி விட வேண்டும். பேட்டிங் வரிசையை தொந்தரவு செய்யக் கூடாது.

இந்திய ஆட்டக்களங்களில் 2 ஸ்பின்னர்கள் நிச்சயம் கைகொடுக்கும். பிராட், பிரெஸ்னன் ஆகியோர் வேகப்பந்திற்கு உள்ளனர். இதில் யாராவது சோடை போகும்போது பீட்டர்சனையும், காலிங்வுட்டையும் பந்து வீச அழைத்து ஒரு மாற்றைக் காண்பிக்கலாம்.

ஆனால் இந்தப் பிரிவில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஏன் மேற்கிந்திய அணியே சவாலாக இருக்கும். காலிறுதியில் இலங்கையை எதிர்கொண்டால் கடினம். ஆஸ்ட்ரேலியா, அல்லது பாகிஸ்தான் என்றால் இங்கிலாந்துக்கு சற்றே வாய்ப்புகள் கூடும். ஏனெனில் ஆஸ்ட்ரேலியாவுடன் அதிகம் விளையாடியுள்ளதால் இந்திய தட்பவெப்பத்தில் கிரேம் ஸ்வானை வைத்து வென்று விடலாம்.

எனவே காலிறுதி முட்டுக் கட்டையைக் கடந்து விடும் திறமையான அணிதான் இங்கிலாந்து, அப்படி காலிறுதியில் வெற்றி பெற்று விடும் எனில் ஏன் இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வெல்ல முடியாது? பொறுத்திருந்து பார்ப்போம்.

அணி விவரம் : ஸ்ட்ராஸ் (கேப்டன்), பிரையர்(வி.கீ.), ஆண்டர்சன், அஜ்மல் ஷாஜாத், இயன் பெல், கிரேம் ஸ்வான், பிரெஸ்னன், டிம் டிரெட்வெல், பிராட், ஜொனாதன் டிராட், காலிங்வுட், லுக் ரைட், இயான் மோர்கன், மைக்கேல் யார்டி, கெவின் பீட்டர்சன்.

Share this Story:

Follow Webdunia tamil