மூத்தோர்களே விலகுங்கள்; இளைஞர்களுக்கு வழி விடுங்கள்!
, திங்கள், 30 ஜனவரி 2012 (11:20 IST)
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, பேப்பரில் பலம் வாய்ந்த இந்திய அணி பாதாளத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் மூத்த வீரர்களான சச்சின், டிராவிட், லஷ்மண் போன்றோர் தங்களது ஆட்டத்தின் மீது உண்மையான சந்தேகம் கொண்டு விலகிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிடுவதை பரிசீலிக்கவேண்டும்.உண்மையில் இந்திய கிரிக்கெட்தான் என் உயிர் மூச்சு என்று இவர்கள் பேசி வந்தது உண்மையானால் இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதுதான் அவர்கள் இந்திய கிரிக்கெட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.இவர்களைக் கொண்டு 8 டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ச்சியாக அயல்நாட்டு மண்ணில் மண்ணைக் கவ்வியது இந்திய அணி. இவர்கள் இல்லாமல் இன்னும் ஓரிரு தொடர்களை இழக்கட்டும்! பரவாயில்லை. குறைந்தது இந்த அளவுக்கு தேறும் இளம் வீரர்கள் யார் என்பதையாவது நாம் பார்த்து விடலாம்.சீரியசாக சில விஷயங்களை யோசிப்பதை விடுத்து வீரர்கள் தங்கள் பழம்பெருமைகளைப் பேசி வருவதும், நாங்களும் இங்கே 2- 0 என்று ஜெயித்தோம் என்று பிதற்றி வருவதும் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்யாது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் 'ஒன்றுமே நடந்து விடவில்லை" இதே வீரர்கள்தான் நம்மை பெருமைக்கு இட்டுச்சென்றனர் என்றெல்லாம் கொம்பு சீவி விடுவதும் உறுதியாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை படுகுழியில் தள்ளும் முயற்சிகளே!இவர்கள்தான் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுகின்றனரே! பிறகு என்ன? இது சீரியஸ் கிரிக்கெட், இதில் இவர்கள் பங்கு முடிந்து விட்டது. சச்சின் 100, 100 என்று கனவு கண்டு இரண்டு மூன்று தொடர்களாக இந்திய அணியைச் சரியச் செய்துள்ளார். சேவாக் உடல் சமநிலை இல்லை. ஷாட் ஆடுவதற்கு முன்பும், பின்பும் அவரது பேலன்ஸ் சரியில்லை. ஹூக் , புல் ஷாட்களை ஆடாமல் நீண்ட நாட்களுக்கு ஓட்ட முடியாது, எனவே அவர் பின்னால் களமிறங்கவேண்டும், லஷ்மன் கிரீஸில் நின்ற படியே குப்பை கொட்டுகிறார். கம்பீரை அழைத்து ஒழுங்காக ஷாட் பிட்ச் பந்துகளை விளையாடும் வரை அணியில் இடமில்லை என்று கூறிவிடவேண்டும். தோனியை அழைத்து ஓய்வு பெற்ற மூத்த கேப்டன்கள் அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டவேண்டும். மேலும் கேப்டன் பேட்டிங் செய்வதும் அவசியம் என்பதையும் அவருக்கு அறிவுறுத்தவேண்டும்.அவர் நல்ல கிரிக்கெட் வீரர்தான் சொன்னால் கேட்டு மீண்டும் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபிக்கும் மனோபலம் அவரிடம் உள்ளது.
கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்த தரத்திற்கு தான் தயார் என்பதை நிரூபித்துவிட்டார். அது போலத்தான் பிறரும், ஓரிரு டெஸ்ட் போட்டிகள் திணறல் இருக்கும் அதன் பிறகு அவர்கள் உருப்படியான வீரர்களாக மாறுவார்கள். அவர்களின் வழியை செங்கல் பெயர்ந்து விழுந்த குட்டிச் சுவர்களும், மகான் வீரர்களும் மறித்து வருவது நியாயமல்ல.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பழம்பெருமைகளிலும் ஸ்பான்ஸர் நிறுவனங்களின் செல்லப்பிள்ளைகளையும் அணியில் வைத்துக் கொண்டே தீருவது என்ற முடிவைக் கைவிடவேண்டும்.மேலும் அயல்நாடுகளில் அவர்களுக்குச் சாதகமாக பச்சைப் பசுந்தரை களத்தை அமைக்கின்றனர். அதனால் அவர்கள் இங்கு வரும்போது குண்டும் குழியுமான பிட்சைப் போட்டு நாம் பதிலடி கொடுக்கவேண்டும் என்ற மனோ நிலை சிறுபிள்ளைத் தனமானது.சச்சின் டெண்டுல்கர் தலைமை வகித்த போது ஆஸ்ட்ரேலியாவிடம் 3- 0 என்று உதை வாங்கித் திரும்பினார். அப்போது தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் 2 டெஸ்ட் தொடர்களை விளையாட வந்திருந்தது. ஸ்ரீகாந்த் பிட்ச் தயாரிப்பு ஆலோசகராக இருந்தார்.சச்சின், ஸ்ரீகாந்தை அழைத்து தனக்கு முதல் ஓவரிலிருந்தே பந்துகள் திரும்பவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை ஸ்ரிகாந்த் ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளார். ஆனால் என்னவாயிற்று பந்துகள் திரும்பின, ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறும் நிக்கி போயே 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவை தோல்வியுறச்செய்தார்!அதுதான் எப்போதும் நடக்கும், இதெல்லாம் தீர்வேயல்ல. உண்மையில் நம் 'மகான்' வீரர்களின் ஆட்டம் முடிந்து விட்டது என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்வதும், புதிய வீரர்களை அறிமுகம் செய்து அவர்கள் சிறப்பாக விளையாட நல்ல சூழலை அமைத்துத் தருவதும்தான் பி.சி.சி.ஐ.யின் பணியாக இருக்க முடியும்.மூத்த வீரர்களும் 'இன்னும் நாங்கள் கேமை எஞ்ஜாய் செய்கிறோம்' என்று கூறினால் 'நீங்கள் எஞ்ஜாய் செய்கிறீர்கள் நாங்கள் உங்கள் ஆட்டத்தை எஞ்ஜாய் செய்யவில்லை' என்று அவர்களிடம் கூறுவதுதான் முறை.கிரிக்கெட் என்பது வெறும் பேட்டிங் மட்டுமல்ல. 40 வயது வரை ஒருவர் ரன் எடுக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபீல்டிங் என்று ஒன்று இருந்து வருகிறதே! அதற்கு நியாயம் செய்யுமா வயது? லஷ்மண் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுதும் முக்கியத் தருணங்களில் கேட்ச்களைக் கோட்டை விட்டு இஷாந்த், அஷ்வின் வயிற்றெரிச்ச்லைப் பெற்றார். டிராவிடின் கேட்சிங் திறமையும் போய்விட்டது. சச்சின் பாதுகாப்பாக டீப் திசையில் பீல்ட் செய்து வருகிறார். எனவே இவர்கள் தீவிரமாக வேறு பாதையை பற்றி யோசிப்பது நல்லது.முதலில் இந்தத் தொடரில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஒரு நேர்மையான விசாரணையும், அந்த விசாரணையின் முடிவை வெளிப்படையாக அறிவிப்பதும் நேர்மையாக அதற்கான திருத்தங்களைக் கொண்டு வருவதுமே தீர்வாக இருக்க முடியும்.இதனை விடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு அயல்நாட்டுத் தொடர் இல்லை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும், அடுத்த வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்தத் தோல்விகளை மறந்து விடுவார்கள் என்ற மனோநிலையையும் நிர்வாகமும் வீரர்களும் கொண்டிருந்தால் அது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மூடுவிழாவாக அமையும் என்பதில் ஐயமில்லை.