மால்கம் நாக்ஸ் கூறியது...
கிரிக்கெட் வீரர்களிடையே நிறவெறி இல்லை, இதனை அனுமதிக்க முடியாது என்றெல்லாம் தவளைக் கூச்சல் எழுப்பும் ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட தற்போதைய வீரர்கள் ஸ்டீவ் வாஹ், ஆலன் பார்டர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், தேச வெறி, வெள்ளை மேட்டிமை நிறவெறி ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் ஆகியோர் மால்கம் நாக்ஸ் என்ற சிட்னி மார்னிங் ஹெரால்ட் முன்னாள் கிரிக்கெட் பிரிவு தலைமை நிருபர் விடுத்த எச்சரிக்கைக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்?
இலங்கை வீரர்களை கறுப்புப் பன்றிகள் என்று வர்ணித்த டேரன் லீமேன் விவகாரம் குறித்து மால்கம் நாக்ஸ் கார்டியன் பத்திரிக்கையில் எழுதும்போது வேக் அப் ஆஸ்ட்ரேலியா, ரேசிசம் இஸ் எ ப்ராப்லம் என்று எழுதினார். டேரன் லீ மேன் விவகாரத்தில் அவர் கூறியுள்ள மற்றொரு கருத்து இப்போது சைமன்ட்ஸை வில்லனாக திரித்தகாகக் கூறும் டிம் மேயின் கருத்தோடு ஒப்பு நோக்கத்தக்கது.
டேரன் லீ மேன் விவகாரத்தில் அப்போதைய ஆஸ்ட்ரேலிய வீரர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா, "சூடான தருணத்தில் தவறாக கூறிய வார்த்தை, மற்றபடி அவர் உலகம் முழுதும் ஒரு அருமையான நபர் என்றே பார்க்கப்பட்டுள்ளார்" என்று கூறினர். அந்த தருணத்தில் இலங்கை அதிக உணர்ச்சிவசப்பட்டது என்றும், ஆண்மையற்று புகார் தெரிவித்தனர் என்றும் பாதிக்கப்பட்ட இலங்கை வீரர்களை வில்லனாக சித்தரித்ததை மால்கம் நாக்ஸ் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி எப்போது அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அங்குள்ள பத்திரிக்கை வர்ணனையாளர்கள் மைதானத்தில் இலங்கை வீரர்கள் "பிதற்றுகின்றனர்" என்றும், "அகண்ட வாய்களுடன் மிகப்பெரிய சிரிப்புகளுடன் குதியாட்டம் போடுபவர்கள்". குரங்குக் கூச்சல் போடுபவர்கள் என்றும், "மிகப்பெரிய அகண்ட சிரிப்புடைய கறுப்பு நீக்ரோக்கள்" என்றும் வர்ணித்துள்ளதையும் மால்கம் நாக்ஸ் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோவார்டிடம் உள்ள நிறப் பாகுபாட்டையும் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்ட்ரேலியாவில் நிறவெறி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நயவஞ்சகாமாக, மறைந்திருந்து கள்ளத் தனமாக செயல்படுகிறது என்று கடுமையாக சாடியுள்ளார் மால்கம் நாக்ஸ் என்ற ஆஸ்ட்ரேலியர்.
சிட்னியில் ஒவ்வொரு முறையும் இந்தியா விளையாடும்போதும் இந்திய தேசிய கொடிகள் அளவுக்கு அதிகமாக பறப்பதற்கு காரணம் அங்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்திய மாணவ கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த "வெள்ளை" அணியில் இடம் இல்லாததே காரணம் என்று நேரில் சிலரிடம் பேசிய போது எழுந்த கருத்தாக மால்கம் நாக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிட்னியில் என்ன மோசடி செய்தாவது வெற்றியை சாதித்து விடவேண்டும் என்பதோடு இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதியில் தோற்றுப் போவதை ஒரு போதும் வெள்ளை ஆஸ்ட்ரேலிய வீரர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதும் இப்போது தங்கு தடையின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் தங்களது நயவஞ்சக வெள்ளை மேட்டிமையையும் நிறவெறியையும் மறைத்துக் கொள்ள ஹர்பஜனை நிறவெறியாளர் என்று முத்திரை குத்த விரும்பியுள்ளதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சிட்னியில் சென்று அந்த தொலைபேசி எண் புத்தகத்தை திறந்தால் லீ என்ற பெயரையே அதிகம் காணலாம். ஆனால் காஸ்பரோவிச், டி வெனிடோ, சைமன்ட்ஸ் ஆகிய பெயர்கள் ஆஸ்ட்ரேலிய வெள்ளை, நிற, தேச வெறி அணியில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல் இடம்பெறுவதற்கே ஏதோ பன்மைவாதத்தை பெரிதும் செயல்படுத்துவதாக முடி சிலிர்ப்புகிறது ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள்.
"வெள்ளை இன முழுமை குறித்து நாம் வெட்கப்படுவதற்கு பதிலாக அதனை ஒரு கர்வமாக பேணி காக்கிறோம்" என்று மால்கம் நாக்ஸ் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஆஸ்ட்ரேலிய அணிக்குள் வர முடியாத இந்திய-ஆஸ்ட்ரேலியர்கள் குறித்து நாக்ஸ் கட்டுரை எழுதியபோது, அவரை பத்திரிக்கை நிர்வாகம் கடுமையாக வசை பாடியதோடு, தொந்தரவுகளையும் கொடுத்ததாம்.
ஆனால் ஆஸ்ட்ரேலிய வீரர்களிடம் நிறவெறி இருந்ததை தன் கண்ணால் நேரில் கண்டதாக மால்கம் நாக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இந்தியாவிற்கு ஆஸ்ட்ரேலியா பயணம் மேற்கொண்டபோது, உள் நாட்டவர்களை நீக்ரோக்கள் என்று அழைத்ததை நேரில் கண்டிருக்கிறார் மால்கம் நாக்ஸ்.
ஜாம்ஷெட்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்ஃபாரத்தில் படுத்து உறங்கும் நடைபாதை வாசிகளை ஆஸ்ட்ரேலிய வீரர்கள் தங்களது காலால் தட்டி எழுப்பி புகைப்படம் எடுத்துக் கொள்வார்களாம். இந்த வீரர்கள் பெயரை அவர் வெளியிடவில்லை. ஆனால் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்களிடையே உள்ள அழிக்க முடியாத நிறவெறி மேட்டிமையை மால்கம் நாக்ஸ் ஜனவரி 20, 2003ம் ஆண்டு கார்டியன் இதழில் அம்பலப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெள்ளை நிறவெறி, மடமையை "கலாச்சாரமாக" அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் புரிந்து கொள்ளாததே வேறுபாடுகளுக்கு காரணம் என்று ஸ்டீவ் வாஹ், ஆலன் பார்டர் போன்றவர்கள் நிறவெறிக்கு புதிய கலாச்சார சாயம் பூசி நமக்கெல்லாம் அல்வா கொடுக்க முயன்றுள்ளனர்.
இதுபோன்று நிறவெறியையே ஒரு கலாச்சாரவாதமாக திரித்து வரும் போக்கு தற்போது ஆஸ்ட்ரேலியாவில் இருந்து வருவதை தற்கால பிரிட்டிஷ் சமூகவியலாளர்கள் ஆய்வு செய்து எடுத்துரைத்துள்ளனர்.
இனவெறி எனும் காலாவதியான பழமை நோக்கிலிருந்து இன்னமும் விடுபடாத காரணத்தினால்தான், தோல்வி அவர்களைத் தொற்றும் போதெல்லாம் ஏற்படும் தாழ்வுணர்ச்சி காரணமாக அடுத்தவர் மீது இனவெறி புகார்கள் அடுக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை, இங்கு சாதிப் பற்று, மதப்பற்று, மொழிப்பற்று என்று பல்வேறு பற்றுகளுடன் அதீதமான கிரிக்கெட் பற்றும் உண்டே தவிர, நிறவெறி என்று எதுவும் இல்லை. பேனாவை எடுக்கும் வெள்ளையர் அனைவரும் இதனை அனுபவப்பூர்வமாக புரிந்து கொள்ளவது நல்லது.