Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆஸ்ட்ரேலிய பாசம்

Advertiesment
நடுவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆஸ்ட்ரேலிய பாசம் மொஹாலி டெஸ்ட் கிரிக்கெட்
, திங்கள், 4 அக்டோபர் 2010 (17:22 IST)
மொஹாலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சற்று முன் 2-வது இன்னிங்ஸில்கவுதம் கம்பீருக்கு பேட்டில் பட்டுச் சென்ற பந்துக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தார் நியூஸீலாந்தின் கோமாளி நடுவர் பில்லி பௌடன். இந்தத் தீர்ப்பும் பில்லி பௌடனின் வேறு சில நடவடிக்கைகளும் கடந்த முறை இந்திய அணி ஆஸ்ட்ரேலியா சென்ற போது நடைபெற்ற சர்ச்சைக்குரிய சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நடுவர்கள் தங்கள் ஆஸ்ட்ரேலிய பாசத்தை வெளிப்படுத்துவதை நினைவூட்டுவதாய் உள்ளது.

இதில் பயங்கரம் என்னவெனில் ரீ-ப்ளேயில் பார்த்தப் போது பந்தும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தாக இருந்தது! கம்பீரின் மட்டையின் உள் விளிம்பில் படாவிட்டாலும் அதனை நாம் அவுட் என்று கூற முடியாது. ஆனால் எந்த வித தயக்கமுமின்றி அவுட் கொடுக்கிறார் கோமாளி பௌடன்.

முதல் இன்னிங்சில் தோனி கேட்ச் கொடுக்க அதனை வாட்சன் பிடித்தார். ஆனால் வாட்சனுக்கே அது தரையில் பட்டு வந்தது போல் இருந்ததால் சந்தேகத்தை தெரிவித்தார்.

3-வது நடுவரிடம் சென்றபோது, அவரும் சரியாக தெரியாத, எந்த முடிவுக்கும் வரவியலாத ரீ-பிளேயை வைத்துக் கொண்டு அவுட் என்று தீர்மானிக்கிறார்.

இன்று காலை சைமன் கேடிச், ஹர்பஜன் சிங் பந்தில் நேராக கால்காப்பில் வாங்கினார் ஆனால் நடுவர் அதனை அவுட் தரவில்லை. முதல் இன்னிங்ஸில் கவுதம் கம்பீருக்கு மிட்செல் ஜான்சன் பந்தில் தயக்கமில்லாமல் எல்.பி.டபிள்யூ. கொடுக்கும் நடுவர், இன்று காலை மைக் ஹஸ்ஸிக்கு, இஷாந்த் வீசிய பந்து (கிட்டத்தட்ட கம்பீருக்கு மிட்செல் வீசிய பந்து போன்றதுதான்) நேராக கால்காப்பில் பட்டது. ஆனால் நேராக ஸ்டம்புகளைத் தாக்கும் அந்த பந்துக்கு எல்.பி.டபிள்யூ. மறுத்தார் நடுவர்.

அனைத்திற்கும் மேலாக நடுவர்களின் ஆஸ்ட்ரேலிய பாசம் வெளிப்பட்டது எப்போது எனில், இஷாந்த் ஷர்மா பாண்டிங்கை வீழ்த்தி விட்டு அடுத்த பந்தே மைக்கேல் கிளார்க்கிற்கு ஒரு பந்தை வீச அதனை அவர் மிட்விக்கெட் திசையில் சேவாகிடம் கேட்ச் கொடுத்தார்.

கிளார்க்கும் பெவிலியன் நோக்கி நடையைக்கட்டத் துவங்கினார். அப்போதுதான் பில்லி பௌடனின் ஆஸ்ட்ரேலிய பாசம் வெளிப்பட்டது. பெவிலியன் போகவிருந்தவரை நிறுத்தி, இரு! இஷாந்த் வீசியது நோ-பாலா என்று பார்த்துச் சொல்கிறேன் பிறகு போகலாம் என்றார்.

ஆனால் அது நோ-பாலாக அமைந்தது. நடுவருக்கு எந்த வீரரையும் தீர்ப்பில் சந்தேகமிருந்தால் மீண்டும் பேட் செய்ய அழைக்க விதிமுறைகளில் இடமுண்டு என்பதை ஒப்புக் கொள்வோம். நோ-பாலை வீசும்போதே பார்க்கவேண்டியதுதான் நடுவரின் முதற்படி கடமையாகும். அதில் கோட்டை விட்ட பில்லி பௌடன் கிளார்க் ஆட்டமிழந்தவுடன் அது நோ-பாலாக இருக்கக்கூடும் என்று 3-வது நடுவரை அணுகுவது தெளிவாக அவரது ஆஸ்ட்ரேலிய பாசத்தையே காண்பிக்கிறது.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆடி வரும் இந்தியா வந்தவுடனேயே நாட்-அவுட்டை அவுட் கொடுத்தால் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட், சேவாக் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். லக்ஷ்மண் முதுகு வலி காரணமாக பேட்டிங் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் இந்தியாவின் வெற்றியை பில்லி பௌடன் பறித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

எப்போதுமே ஆஸ்ட்ரேலியா விளையாடினால் அது கடினமாக இருக்கும், அவர்கள் போட்டித் திறம் வாய்ந்தவர்கள், கடைசி வரை போராடுவார்கள், எதிரணியினரை எளிதில் வெற்றியடையச் செய்து விட மாட்டார்கள் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு.

இவையெல்லாம் உண்மைதான் என்று நாம் ஒப்புக் கொண்டாலும் அதற்கு பெரிதும் உதவுவது ஆஸ்ட்ரேலிய பாசம் மிக்க நடுவர்களே என்பதை நாம் எளிதில் நிரூபிக்க முடியும்.

நடுநிலை நடுவர்கள் இல்லாத போது டேரல் ஹேர், ஹார்ப்பர், மோசடி நடுவர் ஸ்டீவ் ரேண்டால் ஆகியோரை வைத்து எதிரணியினரின் வெற்றி வாய்ப்புகளை தங்களின் வெற்றியாக ஆஸ்ட்ரேலியா மாற்றியுள்ளதை நாம் காட்டமுடியும்.

நடுநிலை நடுவர்கள் வந்த பிறகு மேற்கிந்திய அணியின் ஸ்டீவ் பக்னர், தென் ஆப்பிரிக்காவின் ரூடி கர்ட்ஸன், நியூஸீலாந்தின் பில்லி பௌடன், நடுவர் திறனே இல்லாத அசோக டி சில்வா ஆகியோரின் ஆஸ்ட்ரேலிய பாசத்தினால் சில வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

ஆஸ்ட்ரேலியா விளையாடினால் கடைசி வரை போராடுவார்கள், உலகிலேயே அது சவால் நிறைந்த அணி என்றெல்லாம் கூறுபவர்கள் 3வது நடுவரிடம் மேல் முறையீடு செய்யும் முறை வந்த பிறகு ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து கடைசியாக பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் தோல்வி தழுவினர் என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கவேண்டும்.

ஆனால் இன்றைய நிலைமைக்கு நாம் இந்தியாவையும் குறை கூறவேண்டும். தொடருக்கு முன்பே 3-வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யும் முறை வேண்டுமா என்று கேட்டதற்கு இந்தியா வேண்டாம் என்று கூறியது.

ஆனால் ஆஸ்ட்ரேலியா தயங்குவதில்லை. இருந்தாலும் நடுவர்கள் பொதுவாகவே ஆஸ்ட்ரேலியா விளையாடினால் முன்பு ஸ்டீவ் வாஹ், இப்போது ரிக்கி பாண்டிங், ஆகியோரிடம் 'நல்ல பெயர்' எடுப்பதில் செலுத்தும் கவனத்தை ஆட்டத்தில் செலுத்துவதில்லை.

அதனால்தான் இந்த 3ஆம் நடுவர் முறையே வந்தது. இப்போது நாம் மீண்டும் ஒரு கோரிக்கையை எழுப்புவது உசிதம். இந்தியா, ஆஸ்ட்ரேலியா மோதுகிறதா, ஒரு நடுவர் ஆஸ்ட்ரேலியாவிலிருந்தும் ஒரு நடுவர் இந்தியாவிலிருந்தும் நியமிக்கப்படவேண்டும்.

குறைந்தது ஒருதலைபட்சமான பாசமாவது இரு அணிகளுக்கும் சமமாகக் கிடைக்குமே!

Share this Story:

Follow Webdunia tamil