Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேவாகின் ஆட்டம் பற்றித் தெரியாத ஸ்ட்ராஸ்

Advertiesment
இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ்
, புதன், 2 மார்ச் 2011 (16:43 IST)
webdunia photo
FILE
இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் அன்று இந்தியாவுடன் அவரே நம்ப முடியாத இன்னிங்ஸை விளையாடியிருக்கலாம், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மன் என்பதிலும் ஐயப்பாடு இல்லை. ஆனால் அவர் கிரிக்கெட் பற்றி பேசும்பொழுது சிக்கல்கள் வந்துவிடுகின்றன.

அவர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தனது பெங்களூரு இன்னிங்சுக்குப் பிறகு தனது ஆட்டத்தைப் பற்றி அவரே உயர்வாகப் பேசியுள்ளார். இது ஒரு விந்தையான விஷயம் (98 சதங்களை எடுத்துள்ள சச்சின் டெண்டுல்கர் கூட தனது எந்த ஒரு தனிப்பட்ட இன்னிங்ஸ் பற்றித் தானே பெரிதாக பேசிக்கொண்டதில்லை) என்றாலும், தனக்கு ஒரு நாள் போட்டிகளில் சில ஷாட்கள் ஆட கைகூடிவிட்டது என்பதற்காக சேவாகின் ஆட்டம் ஏதோ பந்து ஸ்விங் ஆகும் ஆட்டக்களங்களில் எடுபடாது என்ற தொனியிலும், ஸ்விங் ஆகாத ஆட்டங்களில் அவரது கால் நகர்த்தாது அடித்து நொறுக்கும் ஆட்டம் எடுபடும் என்ற தொனியிலும் பேசியிருப்ப்து, சேவாகின் ஆட்டம் பற்றி ஸ்ட்ராசுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதையே எடுத்துரைத்துள்ளது.

அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது துவக்கத்தில் களமிறங்காவிட்டாலும், கடுமையாக ஸ்விங் ஆகிக் கொண்டிருந்த ஆட்டக்களத்தில் 105 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை அதிரச் செய்தவர் சேவாக்.

கங்கூலி கேப்டனான பிறகு மிகவும் அபாரமாக அவர் எடுத்த முடிவு சேவாகை துவக்க வீரராகக் களமிறக்கியதுதான், அப்போதும் இங்கிலாந்துக்கு எதிராகத்தான் அவர் களமிறக்கப்பட்டார். அதில் ஒரு முறை படு வேகமாக அவர் அரை சதம் எடுத்ததும், அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் 106 ரன்களை விளாசியதும் ஸ்ட்ராசுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, ஏனெனில் அப்போது ஸ்ட்ராஸ் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. இதனால் மைதானத்தில் சேவாகின் கால் நகர்த்தும் உத்திகள் பற்றி அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

துணைக்கண்ட களங்களில் ஸ்விங் ஆகாது, எனவே இங்கு சேவாக் காலை நகர்த்தாமல் விளாசுவதில் பெரும் வெற்றி கண்டு வருகிறார் என்ற தொனியில் பாராட்டுவது போல் இடித்துரைத்துள்ள ஸ்ட்ராசுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை.

அவர் அயல்நாடுகளில் வைத்திருக்கும் பேட்டிங் சராசரி 50.48 என்பது! அவர் எடுத்துள்ள 22 சதங்களில் 10 சதங்கள் அயல்நாட்டு மண்ணில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia
PTI
வேகப்பந்து வீச்சுக்கு பெயரெடுத்த ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சேவாகின் சராசரி 48.36. ஆஸ்ட்ரேலிய மண்ணில் 7 டெஸ்ட் போட்டிகளில் 833 ரன்களை 59.50 என்ற சராசரியில் பெற்றுள்ளார் சேவாக்! இந்த அளவிற்கு சராசரி எந்த இங்கிலாந்து விளையாட்டாளர்களுக்காவது இருக்கிறதா? தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50.23 என்ற சராசரி வைத்துள்ளார். இன்றைய கிரிக்கெட் உலகில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சிற்கு இணையானதாக வேறு பந்து வீச்சு சேர்க்கையை நாம் மதிப்பிட முடியாது.

புள்ளிவிவரங்கள் ஒரு புறம் இருக்கட்டும். கால்களை நகர்த்தி ஒன், டூ, த்ரீ, ஃபோர் என்று கவர் டிரைவ் கற்றுக் கொண்டு விளையாட வரும் பல டெஸ்ட் கிரிக்கெட் துவக்க வீரர்களைக் காட்டிலும் சேவாக் களமிறங்கினால் நடுங்கும் பந்து வீச்சாளர்களே இன்றைய உலகில் அதிகம்.

webdunia
webdunia photo
FILE
சேவாகைப் பொறுத்தவரை இது லார்ட்ஸ், இது ஜமைக்கா, இது பெர்த் என்றெல்லாம் கிடையாது. "பந்தைப் பார் அடி" என்ற கொள்கையை உடையவர் சேவாக்.

அதிகம் குழப்பமில்லாத, இரைச்சலில்லாத மனம் படைத்தவர் சேவாக் என்று இயன் சாப்பல் சுட்டிக்காட்டியதை இங்கு குறிப்பிட முடியும். எப்படி மெக்ரா அனைத்துப் பிட்ச்களிலும் சிறந்த பந்து வீச்சாளரோ, சேவாக் அனைத்து பிட்ச்களிலும் சிறந்த பேட்ஸ்மென். மெக்ராவிடம் ஒருமுறை கேட்டபோது "அனைத்தையும் எளிமையாக வைத்துக் கொள்கிறேன் அதுதான் வெற்றியின் ரகசியம்" என்றார். ஆனால் உடனேயே 'எளிதாக வைத்துக் கொள்வது என்பது கடினமானது" என்றார்.

சேவாகின் பேட்டிங்கும் அப்படியே, அவரைப்போன்று அவர் மட்டும்தான் விளையாட முடியும், வேறு யாராவது அது பார்ப்பதற்கு எளிதாக இருக்கிறது என்று காப்பி அடித்தால் அதோகதிதான். ஏனெனில் பார்ப்பதற்கு எளிதாக இருப்பது விளையாடுவதற்கு கடினமானது. அந்த மாதிரியான கடினமான உத்தியை அவர் இயல்பாக விளையாடுகிறார் அவ்வளவே.

எனவே ஒரு புறம் சேவாக் காலை நகர்த்தாமல் விளாசுகிறார் என்று ஸ்ட்ராஸ் கூறினாலும், காலை நகர்த்தி 'காபிபுக்' ஸ்டைலில் ஆடுவதே ஸ்விங் ஆகும் ஆட்டக்களங்களில் சிறந்தது என்ற ஒரு பாரம்பரியவாத மனோநிலையில் பேசியதாகவே நமக்குத் தெரிகிறது.

காலை நகர்த்தாமால் ஸ்விங் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது என்கிற வாதமெல்லாம் சேவாகிடம் எடுபடாது. ஆனால் அவர் அப்படி ஒன்றும் காலை நகர்த்தாதவரும் அல்ல.

கங்கூலி தலைமையில் ஆஸ்ட்ரேலியாவுக்கு 2003- 04 ஆம் ஆண்டு சென்றபோது அடிலெய்டில் இந்தியா வெற்றி பெற்ற அதிர்ச்சியிலிருந்து ஆஸ்ட்ரேலியா மீள முடியாத நிலையில் மெல்போர்னில் சேவாக் முதல் நாள் தேனீர் இடைவேளைக்கு சற்று பிறகு 195 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததை இன்று வரை ஆஸ்ட்ரேலியாவில் அயல் நாட்டு வீரர் விளையாடிய மிகப்பெரிய இன்னிங்ஸாகவே மதிக்கப்படுகிறது. பெர்த்தில் ஒரு முறை ராய் பிரெடெரிக்ஸ் ஆடிய ஆட்டத்துடன் சேவாகின் இந்த ஆட்டத்தை கிரிக்கெட் பண்டிதர் பீட்டர் ரிபாக் ஒப்பிட்டிருந்தார்.

இந்த இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்கு முன் சேவாக் காலை நகர்த்தாமல் ஆடியிருந்தால் ஸ்விங்கிற்குப் பலியாகியிருப்பார். ஆனால் காலை நன்றாக பயன்படுத்தியே அவர் அன்று கவர் டிரைவ்களையும் ஆன் டிரைவ்களையும் விளாசினார்.

இந்தத் தொடருக்கு முன்பாகவே சேவாக் நியூஸீலாந்தில் மோசமான ஆட்டக்களத்தில், அதாவது சீரற்ற பவுன்ஸ், 18 டிகிரி வரை ஸ்விங் ஆகும் பந்துகள் என்ற நிலையிலும் ஒருநாள் போட்டியில் இரண்டு நம்ப முடியாத சதங்களை எடுத்தார் சேவாக். அது போன்ற காட்டுத்தனமான ஸ்விங்கை இங்கிலாந்தின் பேட்டிங் சாதக ஆட்டக்களங்களில் காண முடியாது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மென்களசச்சின், ராகுல், லஷ்மண் உட்பட அனைவரும் தட்டுத் தடுமாறினர் என்பது வேறு கதை.

அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவுடன் மீண்டும் அங்கு சென்று மோதிய போது அடிலெய்டில் 152 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அதில் ஒரு இரண்டு மணி நேர ஆட்டத்தில் சேவாக் பவுண்டரியே எடுக்கவில்லை. நன்றாக காலைப் போட்டுத்தான் அப்போதும் ஆடினார். சேவாக் என்றால் காலை நகர்த்தாதவர் என்பது ஆங்கிலேய ஊடகங்கள் வெளிப்படுத்திய கிரிக்கெட் அறியாமைக் கூற்றாகும். அதைத்தான் தற்போது ஸ்ட்ராஸ் கூறியுள்ளார்.

சேவாகின் இன்னொரு சிறப்புத் தன்மை என்னவெனில், வலைப்பயிற்சியில் பொதுவாக பேட்ஸ்மென்கள் பந்துகளை அடித்து நொறுக்கியே பயிற்சி மேற்கொள்வர். ஆனால் பயிற்சியில் சேவாக் உத்தி வேறு மாதிரியனது. அவர் ஷாட்களை ஆடாமல் தடுப்பாட்டத்தையே பயிற்சி செய்கிறார். ஆட்டங்களில் அதற்கு நேர் மாறாக துல்லியமாக பந்தை கணித்து அடித்து ஆடுகிறார். ஆக பயிற்சியின்போது பந்துகளின் போக்கை அவர் கணித்து விடுகிறார் என்பதே உண்மை.

மேலும் கிரிக்கெட்டில் உத்தி என்பது ரன் எடுப்பதற்கான ஒரு வழிமுறையே. உத்தியே கிரிக்கெட் ஆகாது. ரன்களே கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு அணியை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது. எனவே சேவாகின் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் எதிரணியிடமிருந்து எவ்வளவு வேகத்தில் வெற்றியையும், மனோ திடத்தையும் பறித்து விடுகிறது என்பதுதான் முக்கியமே தவிர, அவர் காலைப் போட்டு ஆடுகிறாரா, அல்லது காலைப்போடாமல் விளாசுகிறாரா என்பதெல்லாம் கிரிக்கெட் அகாடமிக் தனமான பேச்சே தவிர வேறில்லை.

எனவே, ஸ்ட்ராஸ் தான் ஆடிய ஆட்டத்தைப் பற்றி தானே புகழ்ந்து கொள்ளட்டும் அதற்காக 'இது ஒன்றும் பெரிய விஷயமில்லை சேவாக் இப்படித்தான் இது போன்ற பிட்ச்களில் வெற்றிகரமாகத் திகழ்கிறார்' என்ற தொனியில் கூறி சேவாகின் ஆட்டம் பற்றிய தனது அறியாமையை வெளியிட்டிருக்கவேண்டியத் தேவையில்லை.

Share this Story:

Follow Webdunia tamil