தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகளில் அணித் தேர்வில் தேவையில்லாத பரிசோதனைகளை செய்து வருகிறார் தோனி. இதனால் சுலபமாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றுள்ளது இந்திய அணி.இது போன்ற சோதனைகளை செய்வதற்கு என்ன அடிப்படை இருக்கிறது என்பது புரியவில்லை. ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற அணியில் மாற்றம் செய்வதற்கு என்ன தேவை எழுந்தது என்பதுதான் புரியவில்லை.
தோனியின் அணுகுமுறைகள் இந்திய அணியை அபாரமாக சீரழித்த கிரெக் சாப்பலையே நினைவூட்டுகிறது. சாப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற உடனேயே அணித் தேர்வு, களமிறங்கும் வரிசை முறை ஆகியவை தாறுமாறாக மாற்றி அமைத்து பரிசோதனைகளை செய்து பார்த்தார்.
அப்போது ஒரு பேட்ஸ்மெனையோ அல்லது ஒரு பந்து வீச்சாளரையோ கூடுதலாக விளையாடச் செய்யலாம் என்ற ஐ.சி.சி.-யின் அபத்த விதி நடைமுறையில் இருந்ததால் ராகுல் திராவிட் தலைமையில் 17 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றது.
அந்த விதியை ரத்து செய்தவுடன் மலேசிய முத்தரப்பு ஒரு நாள் தொடர், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றில் இந்தியா படுதோல்விகளை சந்தித்தது. கிரெக் சாப்பல் பயிற்சியின் போது முதல் நிலையில் களமிறங்கும் வீரர் யார் என்றே தெரியாது. திடீரென பத்தான், திடீரென தோனி அல்லது ரெய்னா அல்லது அனுபவமற்ற ஒரு வீரர் என்று களமிறக்கப்பட்டனர்.
இந்த கோளாறுகளில் சேவாக், ஹர்பஜன், இர்பான் பத்தான் ஆகியோரது ஆட்டம் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கங்கூலியை படுத்திய பாட்டில் அவர் ஆட்டத்திலா கவனம் செலுத்த முடியும்? உலகக் கோப்பை வந்தது. வீழ்ந்தோம். ஒரு அணியை கட்டமைக்கிறேன் என்று சூளுரைத்து வந்த கிரேக் சாப்பல், அணியை 'திறம்பட' கட்டுடைத்தார்.
மீண்டும் மறு கட்டுமானம் தொடங்கியது. அசட்டுத் தனமான பரிசோதனைகளுக்கு முற்றிப் புள்ளி வைத்து அணி வெற்றிகளை ஈட்டியது. ஆனால்...
தற்போது கிரெக் சாப்பலின் ஆவி நமது ஒரு நாள் அணித் தலைவர் தோனியை பீடித்துள்ளது என்று தோன்றுகிறது. 5 பந்து வீச்சாளர்களைக் கொண்டு ஆடுகிறேன் என்று 203 ரன்களை எடுக்க முடியாமல் தோற்றோம். ஆனால் இது போன்ற பரிசோதனை திலகங்களால் களபலி ஆவது கங்கூலியும், சேவாகும்தான். சாப்பல் காலக் கட்டம் போலவே முதல் பலி கங்கூலி, பிறகு அணியில் வைத்திருந்தே ஆட விடாமல் செய்து ஒழிக்கப்படும் சேவாக். சாப்பல் வழியை தொடர்கிறாரா தோனி என்பதை ரசிகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.இன்று அடிலெய்டில் நடைபெறும் ஒரு நாள் தொடரிலும் 5 பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறார். அதனால் சேவாக் மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுள்ளார்.5
பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு யுவ்ராஜ் சிங்கை பந்து வீச அழைக்கிறார். இன்றும் அதே வேலையை செய்தார். அன்றும் ஆஸ்ட்ரேலியாவிடம் இதே வேலையைச் செய்தார்.முனாஃப் படேல் என்பவர் ஒன்றுக்கும் உதவ மாட்டார் என்று சுனில் காவஸ்கர் உட்பட அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிரசாத் மற்றும் ஃபில்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் ஆகியோர் கூறியும் தோனியின் பரிசோதனை தொடர்கிறது.ஸ்ரீசாந்த் போன்ற ஆக்ரோஷமான வீரர்கள் காரணமில்லாமல் ஓரம் கட்டப்படுகின்றனர். ஸ்ரீசாந்த் ஏன் அணியில் இல்லை என்று கேட்டால், அடுத்தடுத்து போட்டிகளில் பந்து வீசினால் அவர் காயமடைகிறார் என்கிறார்.இர்ஃபான் பத்தானை கிரெக் சாப்பல் காலக் கட்டம் போலவே 3 ஆம் இடத்தில் களமிறக்கி சோதிக்கிறார். இர்ஃபான் பத்தான் மூன்றாம் நிலையில் இறங்கி ஆட முடியுமென்றால், சேவாக் 8 ஓவர்கள் பந்து வீசவும் முடியும். பிரவீண் குமாரை ஏன் திடீரென அணியில் சேர்த்துள்ளீர்கள் என்று கேட்டால், பின் களத்தில் பேட்டிங் ஆடுவார் என்கிறார்.எவ்வளவு சூட்சமங்கள்! பின் களத்தில் ரன் எடுக்கும் பத்தானை மூன்றாம் நிலையில் களமிறக்கி, பிரவீண் குமாரோ, முனாஃப் படேலோ வீசும் ஒரு 8 ஓவரை வீசக்கூடிய சேவாகை உட்கார வைக்கிறார். சேவாக் பேட்டிங் தேவையில்லை, பிரவீண் குமார் பின்னால் பேட்டிங் ஆடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுளார், ஆனால் பத்தான் 3 ஆம் இடத்தில் களமிறங்குவார்.இதுதான் தோனியின் விளங்காத முரண்பாடுகள் கொண்ட அணித் தேர்வு கோட்பாடு. சரி பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டியதுதான் என்பதை ஒப்புக்கொள்வோம். எந்த நேரத்தில் அதனை செய்யவேண்டும் என்ற வரைமுறை உள்ளது.இன்று இலங்கையை வீழ்த்தினால்தான் இந்திய அணி இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், பிரவீண் குமார், முனாஃப் படேல் ஆகியோரை வைத்துக் கொள்ளலாமா என்பதே நம் கேள்வி. சேவாக், ஸ்ரீசாந்த், இன்னும் சொல்லப்போனால் சுரேஷ் ரெய்னாவையும் உள்ளே கொண்டு வந்து பலமான பேட்டிங் வரிசையை களமிறக்கவேண்டும். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை திறம்படவே செய்கின்றனர்.
பேட்டிங்தான் சரிந்து வருகிறது. அப்போது பேட்டிங் பலத்தை கூட்டாமல் மேலும் ஒரு பந்து வீச்சாளரை சேர்ப்பது என்ன தர்கம் என்று புரியவில்லை. 5 வீச்சாளர்களை வைத்துக் கொண்டு யுவ்ராஜ் சிங்கின் பலவீனமான பந்து வீச்சை நம்புகிறார்.அணி நிர்வாகிகள் தோனியிடம் அமர்ந்து பேசி அவரை பீடித்திருக்கும் சோதனை நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் சாப்பல் பயிற்சியின் போது நடந்த அதே சீர்கேடுகள் மீண்டும் அரங்கேறும் அபாயம் உள்ளது.இதற்கு பின்னால் விளம்பர வருவாய் நோக்கம் உள்ளதோ என்று சந்தேகம் எழுகிறது. விளம்பரத்தில் கங்கூலி, திராவிட், சேவாக் இடங்களை பிடிப்பதற்கான முயற்சிகளின் (இது தொடர்பான செய்தியை பார்க்கவும்) வெளிப்பாடாகக் கூட இந்த கூத்தாட்டங்கள் இருக்கலாம்... என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. போக போக தெரியும்... உண்மை!