செப்டம்பர் 9ஆம் தேதியென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நினைவுகள் வந்து போகும். ஆனால் தீவிர சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு இந்த நாள் சச்சின் தனது முதல் ஒரு நாள் சதத்தை எடுத்ததுதான் நினைவுக்கு வரும்.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்ட்ரேலியா பங்கு பெற்ற சிங்கர் தொடர் கிரிக்கெட் போட்டியில் செப்டம்பர் 9ஆம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் சச்சின் தனது 78-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவின் அச்சுறுத்தும் பந்து வீச்சிற்கு எதிராக தன் முதல் சதத்தை எடுத்தார்.ஆனால் அப்போது உலக கிரிக்கெட்டிற்குத் தெரியாது இவர் செய்யப்போகும் பேட்டிங் சாதனைகளை முறியடிப்பது சாத்தியமற்றது என்று.முதன் முதலாக அவர் 70 போட்டிகளை விளையாடிய பிறகுதான் நியூஸீலாந்துக்கு எதிராக நியூசீலாந்தில் ஒரு நாள் போட்டிகளில் துவக்க வீரராகக் களமிறங்கினார்.அந்தப் போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்களை விளாசிய டெண்டுல்கர் துவக்கத்தில் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திக்ழந்தார். ஷார்ஜாவில் ஒரு போட்டியில் அப்போதுதான் வாசிம் அக்ரமை ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் அடித்து அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்தார்.
அதன் பிறகே கொழும்புவில் இந்த சிங்கர் தொடர் நடைபெற்றது. ஆஸ்ட்ரேலிய அணிக்கு டெய்லர் கேப்டன், இந்திய அணிக்கு அசாருதீன் கேப்டன். ஆஸ்ட்ரேலிய அணியில் பந்து வீச்சில் கிளேன் மெக்ரா, க்ரெய்க் மெக்டர்மாட், ஷேன் வார்ன், டிம் மே, ஸ்டீவ் வாஹ் ஆகியோர் பந்து வீச்சில் இருந்தனர்.பகலிரவு ஆட்டமான இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. மனோஜ் பிரபாகரும் சச்சினும் களமிறங்கினர். பிரபாகர் 20 ரன்கள் எடுப்பதற்குள் சச்சின் தன் அரைசதத்தைக் கடந்து விட்டார்.கிரெய்க் மெக்டர்மாட்டின் ஒரு பந்தை மேலேறி வந்து மிட் விக்கெட் திசையில் ஹை-பிளிக் செய்து சிக்சருக்கு விரட்டினார் சச்சின். ஆஸ்ட்ரேலிய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கிளென் மெக்ரா வீசிய அனைத்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியேயான் பந்துகளையும் மிட் விக்கெட் திசையில் புல் ஷாட் ஆடினார் சச்சின்.
கிளென் மெக்ரா 6 ஓவர்கள் வீசி 41 ரன்களுக்கு வெளுக்கப்பட்டார். ஒரு முறை கிளென் மெக்ரா தொப்பியை நடுவரின் கையிலிருந்து கோபத்தில் ஆவேசமாகப் பிடுங்கிச் சென்றதும் நினைவிருக்கிறது. 20 வயது விடலைப்பையன் நம்மை இந்த உரி உரிக்கிறாரே என்று அவருக்கு ஒரே ஆத்திரம். ஷேன் வார்னுக்கும் அடி விழுந்தது.
சச்சின் டெண்டுல்கர் 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 100 ரன்கள் எடுத்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு 110 ரன்களில் மெக்டர்மாட் பந்தில் பவுல்டு ஆனார். அப்போது இந்தியா 211/4 என்று ஆனது.
இவரது பள்ளிப்பருவ தோழனான வினோத் காம்ப்ளி 47 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஆகவே 211 ரன்களில் சச்சின் 110 காம்ப்ளி 43 ரன்கள் சித்து 24, அசாருதீன் 31 கபில் உள்ளிட்ட மற்ற வீரகள் சோபிக்கவில்லை இதனால் இந்தியா 211/3 என்ற நிலையில் சச்சின் ஆட்டமிழந்த பிறகு 246 ரன்களுக்குச் சுருண்டது.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்ட்ரேலியா 47.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பிரபாகர் அபாரமாக வீசி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ராஜேஷ் சவுகான் 2 விக்கெட்டுகளையும் கபில்தேவ், ராஜு, கும்ளே தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு நடந்த இந்தியா,பாகிஸ்தான் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இலங்கை அணி பாகிஸ்தானையும் ஆஸ்ட்ரேலியாவையும் வீழ்த்தியது.
இறுதியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. அதுவும் மழையால் பாதிக்கப்பட்டு 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் இலங்கை 98 ரன்களே எடுத்தது. இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
சச்சின் டெண்டுல்கரின் முதல் சதம் இந்தியாவுக்கு கொழும்புவில் கோப்பையை பெற்றுத் தந்ததால் செப்டம்பர் 9ஆம் தேதி சச்சினுக்கும், இந்திய கிரிக்கெட்டிற்கும், சச்சின் ரசிகர்களுக்க்கும் மறக்க முடியாத ஒரு தினமாகும்.