Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் - பாலிவுட் பெருங்கூத்து!

ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் - பாலிவுட் பெருங்கூத்து!
, புதன், 9 ஏப்ரல் 2008 (15:52 IST)
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக ஊடகங்களால் நம்பவைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் எனும் இருபதுக்கு 20 கிரிக்கெட் என்ற பாலிவுட் பெருங்கூத்து இம்மாதம் 18ஆம் தேதி துவங்குகிறது.

44 நாட்களில் மொத்தம் 59 போட்டிகளாக இந்த கூத்து அரங்கேற்றப்படுகிறது. இந்த போட்டித் தொடருக்காக புகைப்படங்கள், செய்திகள், உள்ளிட்ட அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.7,000 கோடி அளவில் பி.சி.சி.ஐ. இதில் பணம் பண்ணியுள்ளது. இனி அணிகளை ஏலம் எடுத்துள்ள பெரு முதலாளிகள் எப்படியாவது கவர்ச்சி காட்டி இந்த தொடரை லாபம் மிக்கதாக மாற்றி கொள்ளை அடிக்க வேண்டும்!

இதற்கு எதையாவது அடகு வைக்கவேண்டாமா? கிரிக்கெட் ஆட்டம்தான் இவர்கள் வைக்கப்போகும் அடகு!

சிறிது காலத்திற்கு முன் நம் சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் முன்னணி வீரர்கள் நெருக்கமான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்கள் குறித்து ஐ.சி.சி.யின் எதிர்கால கிரிக்கெட் பயணத் திட்டம் பற்றி கடும் விமர்சனம் வைத்தனர்.

ஆனால் தற்போது... ஐ.பி.எல்.-இல் விளையாட தங்கள் உடல் தகுதியைப் பற்றியும் கவலைப்படாமல் இந்திய அணியின் மூத்த வீரர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் உடற் பயிற்சியாளர் ஜான் க்ளோஸ்டர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முன்பெல்லாம, சரியான உடல் தகுதி இல்லாவிட்டாலும் மூச்சைப் பிடித்துக் கொண்டு விளையாடி வந்த வீரர்கள், இப்போது சிறு காயம் என்றாலும் உட்கார்ந்து கொள்கின்றனர். காரணம்? ஐ.பி.எல்.-இல் விளையாட உடற்தகுதியுடன் இருப்பது அவசியமாயிற்றே!

இன்னொரு திடுக்கிடும் ஆய்வும் ஆஸ்ட்ரேலியாவில் தற்போது நடைபெற்றுள்ளது. தற்போது ஆஸ்ட்ரேலிய கிர்க்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களில் முக்கால்வாசிப் பேர் சர்வதேச கிரிக்கெட்டையே இந்த ஐ.பி.எல்.லிற்காக விட்டு விட தயாராகியுள்ளார்களாம். சிட்னி மார்னிங் ஹெரால்ட் இன்று காலை வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், 47 விழுக்காடு தேசிய அணி வீரர்களும், 49 விழுக்காடு உள் நாட்டு அணி வீரர்களும் ஐ.பி.எல்., ஐ.சி.எல்-லிற்காக சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆப்பு வைக்கவே இந்த ஐ.பி.எல் பாலிவுட் கவர்ச்சிக் கன்னிகள் தோன்றியுள்ளனர்.

இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றால் அடுத்த முறை இந்த தொடரை நடத்துவதற்கு இன்னமும் 4 ஆண்டுகள் பிடிக்கலாம் என்று லலித் மோடி ஓ'வென்று கதறிய பிறகு, ஐ.சி.சி.யின் புதிய தலைவர் லோர்காட், ஏன் கவலை? எதிர்காலப் பயணத் திட்டத்தை ஐ.பி.எல்.இற்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

பண முதலைகளான இந்திய பாலிவுட் நடிகர்கள், நிறுவனங்கள், பி.சி.சி.ஐ. ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் நெருக்கடியைப் பாருங்கள்.

எனவே ஐ.பி.எல். போட்டிக்காக சர்வதேச பயணத்திட்டத்தை மாற்றி அமைத்தால் என்னவாகும்? ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து,கென்யா, யு.ஏ.இ. அணிகளுக்கு எதிராக தொடர்களை அமைக்கலாம். அப்போது எந்த அணியின் மூத்த வீரர்களின் உதவியும் கூட இல்லாமல் இரண்டாம் தர மூன்றாம் தர அணிகளை அனுப்பி தொடரை நடத்திக் காட்டலாம்.

1983 ஆம் உலகக் கோப்பை முதல் சர்வதேச கிரிக்கெட்டிற்கு நுழைந்த ஜிம்பாப்வே, 2003இல்அரையிறுதி நுழைந்த கென்யா, 2007இல் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளை மண்ணைக் கவ்வ வைத்த வங்கதேசம் ஆகிய அணிகளின் கிரிக்கெட் நிலவரமோ நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதனை வளர்க்க ஐ.சி.சி.யிடம் எந்த ஒரு திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பி.சி.சி.ஐ. ஏற்கனவே அள்ளிச் சென்ற பண மூட்டை தொடரான ஐ.பி.எல்-ற்கு ஐ.சி.சி. ஜன்னல் திறக்கிறது!

ஜிம்பாப்வேயுடனான இந்திய அணியின் தொடரை நேற்று பி.சி.சி.ஐ. கைவிட்டுள்ளது. இதற்கான நியாயமான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இது போன்று ஐ.சி.சி. எதிர்காலப் பயணத்திட்டத்தையே பி.சி.சி.ஐ. வடிவமைக்கும் போக்கு விரைவில் வந்து விடும். யார் கொழிப்பார்கள்? பி.சி.சி.ஐ., இந்திய பாலிவுட் வட்டாரங்கள், அணிகளை ஏலம் எடுக்கும் இந்திய முதலாளிகள். இந்திய வீரர்கள் ஆகியோர்களே.

அகமதாபாத் டெஸ்டில் இந்திய அணி தோற்றதற்கு ஐ.பி.எல். தான் காரணம் என்று சுனில் கவாஸ்கர் எழுதியிருந்தார். அது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதே!

சரி! இந்த போட்டிகள் எவ்வாறு நடைபெறும் என்று யோசித்தோமானால் பெரும் பாலிவுட் கூத்தாகவே அமையும். ஏனெனில் நடிகை பிரீத்தி ஜிந்தா ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகள் முடியும் வரை பாலிவுட் படப்பிடிப்பை நிறுத்துவது நல்லது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படியென்றால் என்ன? பாலிவுட், கோலிவுட் நடிகர் நடிகை கும்பல்கள் ஏற்கனவே ஐ.பி.எல். அணிகளுக்கு விளம்பரதாரர்களாக ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்சிற்கு விளையாடும் தோனி தடேலென ஒரு சிக்சரை அடித்தால் பெவிலியனிலிருந்து அரைகுரை ஆடையுடன் ஒரு நடிகை உடனடியாக மைக்கை தூக்கி வந்து தோனிக்கு முன்னால் நீட்டுவார். அவர் ஏதாவது உளறுவார்...

பிரட் லீ ஒரு விக்கெட் எடுத்து விட்டு உடனே பெவிலியன் திரும்பி ஏதாவது விளம்பரத்தில் நடித்து விட்டு அடுத்த ஓவருக்கு வருவார். இதெல்லாம் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஏற்கனவே பாலிவுட்டில் முழு மூச்சுடன் இயங்கும் செட்மேக்ஸ் டி.வி. இந்த நேரடி ஒளிபரப்பிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இடையிடையே ஏதாவது நடன நிகழ்ச்சிகள் இருக்கும், தோனி, பிரீத்தி ஜிந்தாவுடன் நடனம் ஆடுவார், யுவ்ராஜ்சிங் ஷாருக்கானுடன் ஏதாவது கேலிக்கூத்து சேட்டைகள் செய்வார்...

கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் உலகத்திற்குள் நுழைய, கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட சிறந்த முகாந்தரங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். குளிர்பானங்களை ஏந்திய படி யாராவது கவர்ச்சி நடிகை வருவார். வீரர்களிடம் ஏதாவது அசட்டுத் தனமான உரையாடலை நிகழ்த்துவார்... ஹூம்! கிரிக்கெட்டை முன் வைத்து பெரும் கவர்ச்சிக் கூத்து காத்திருக்கிறது.

முடிந்தவுடன் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு இந்தியா தயாராகும். ஆனால் வீரர்களோ பாலிவுட் கவர்ச்சி நடிகைகளின் கனவில் மிதப்பார்கள். அடி மேல் அடி... உதை மேல் உதை இந்திய அணிக்கு காத்திருக்கிறது.

பிரிட்டிஷ் காலனியாதிக்க காலக் கட்டத்தில் பிரிட்டிஷாரின் கடும் வரிச் சுமையை எதிர்த்து அந்த அதிகாரிகளுடன் கிரிக்கெட் போட்டியை நடத்தி இந்திய கிராமம் ஒன்று வெற்றி பெற்ற ஒரு சிறு வரலாற்று தகவலை வைத்து வெளிவந்த அமீர் கானின் "லகான்" திரைப்படம் நம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது.

ஆனால் இன்றோ பெரும் முதலாளிகள், பாலிவுட் நடிக, நடிகைகள் வரி ஏய்ப்பு செய்ய கிரிக்கெட்டை ஆயுதமாக மாற்றி விட்டனர். இந்தியா ஒளிர்கிறது!!!

ஐ.பி.எல். மறு மலர்ச்சியல்ல! கிரிக்கெட்டின் பெரும் வீழ்ச்சி!

Share this Story:

Follow Webdunia tamil