Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.சி.சி. ஆட்ட நடுவர்களின் பாரபட்ச போக்குகள்!

Advertiesment
ஐசிசி ஆட்ட நடுவர்களின் பாரபட்ச போக்குகள் இந்திய கிரிக்கெட் ஐசிசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கங்கூலி இன்ஸமாம் உல் ஹக் சத்யராஜ்
, புதன், 15 ஜூலை 2009 (13:00 IST)
webdunia photoWD
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பணபலமும், செல்வாக்கும் பெருகியிருக்கலாம், ஐ.சி.சி.யின் முக்கிய முடிவுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பங்கு அதிகமிருப்பதாக தற்போது பேசப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் ஆட்ட விதிகள், கிரிக்கெட் உணர்வு என்று வரும்போது ஆசியப் பகுதி வீரர்கள் அதிகம் தண்டிக்கப்படுகின்றனர், ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிகம் தண்டிக்கப்படுவதில்லை. இது கிறிஸ் பிராட் உள்ளிட்ட ஐ.சி.சி. ஆட்ட நடுவர்கள் பலரின் பாரபட்ச போக்கை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது.

ஆஸ்ட்ரேலியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே அளவுக்கதிகமாக விளம்பரப்படுத்தப்படும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணி வீரரகளும் ஒழுக்க விதிகளையும், கிரிக்கெட் உணர்வு குறித்த மரபுகளையும் பலமுறை மீறினர். ஆனால் ஐ.சி.சி. ஆட்ட நடுவரான நியூஸீலாந்தைச் சேர்ந்த ஜெஃப் குரோவ் இது பற்றி எந்த ஒரு கவனிப்புமின்றி வாளாவிருந்தார்.

கடைசி நாள் ஆட்டத்தில் ஓவர்களை விரைவில் வீசி வெற்றி பெற வாய்ப்பு தேடி ஆஸ்ட்ரேலிய அணி முயன்று கொண்டிருக்க, சம்பந்தமில்லாமல் மைதானத்திற்குள் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இரண்டு மூன்று முறை உடற்கோப்பு பயிற்சியாளரையும், 12-வது வீரரையும் இங்கிலாந்து அணி நிர்வாகம் களத்தில் இறக்கி நேர விரயம் செய்துள்ளது. இது குறித்து பாண்டிங் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டும் ஐ.சி.சி. ஆட்ட நடுவர், கள நடுவர்கள் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையே இந்தியாவோ, பாகிஸ்தானோ, இலங்கையோ செய்திருந்தால்... அவ்வளவுதான் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து ஊடகங்கள் ஐ.சி.சி.யை கிழித்திருக்கும். ஆனால் இப்போது அந்த ஊடகங்கள் கப்சிப்.

இங்கிலாந்து அணியின் காலவிரயப் போக்கு குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூட 'பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருந்தது' என்று எழுதியுள்ளார். ஆனால் ஐ.சி.சி. ஆட்ட நடுவருக்கு இங்கிலாந்தின் உத்தி சிறப்பாக தெரிந்தது போலும்.

webdunia
webdunia photoWD
இதே கடைசி தினத்தில் பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் அவுட் இல்லாத ஒன்றை நாட் அவுட் என்று தீர்ப்பளித்ததற்கு ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து முனகல் வசையில் ஈடுபட்டார். மேலும் அன்றைய தினத்தில் அளவுக்கு அதிகமாக ஆஸ்ட்ரேலிய வீரர்கள் அவுட் கேட்டு முறையீடு செய்தனர். இவை எதனையும் ஐ.சி.சி. ஆட்ட நடுவர்களும், நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை.

நடுவர் தீர்ப்பை எதிர்த்து கங்கூலி, பாகிஸ்தான் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் ஆகியோர் நடந்து கொண்ட போது இருவருக்கும் கடுமையான எச்சரிக்கைகளை ஐ.சி.சி. ஆட்ட நடுவரும் கள நடுவர்களும் செய்ததை இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இந்த பாரபட்சம்?

இதே 5ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடும், ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும் வசைமாரியில் ஈடுபட்டதோடு, ஒருவரையொருவர் இடித்துக் கொண்டனர். உடல் ரீதியான தொடர்பு கூடாது என்று கிரிக்கெட் விதியே இருக்கிறது. ஆனால் இருவரும் தண்டிக்கப்படவில்லை. எச்சரிக்கை கூட விடுக்கப்படவில்லை.

webdunia
webdunia photoWD
கடந்த முறை ஆஸ்ட்ரேலியா, இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது கௌதம் கம்பீருக்கும் ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் உடல் ரீதியாக மோதிக் கொண்டனர். அதில் கௌதம் கம்பீருக்கு இரண்டு போட்டிகள் தடை விதித்து தீர்ப்பளித்தார் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராட்.

ஏன் ஸ்டூவர்ட் பிராட் அல்லது பீட்டர் சிடில் மீது ஒரு எச்சரிக்கைக் கூட விடுக்கப்படவில்லை?

ஆனால் துபாயில் உள்ள ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளதுதான் மிகப்பெரிய தமாஷ். "முதல் டெஸ்ட் போட்டியில் நடத்தை மீறல் குறித்தோ அல்லது வேறு விவகாரங்கள் குறித்தோ எந்த வித மீறலும் நிகழவில்லை" என்று கூறியுள்ளார்!

மற்றொரு மோதலில் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வானிடம் பீட்டர் சிடில் விதி மீறல் செய்தார். அதாவது மூன்று பவுன்சர்களை வீசி அவரைக் காயப்படுத்தினார். இது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி என்பதை ஒப்புக் கொள்வோம். ஆனால் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு வீரரின் அருகில் சென்று கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார் பீட்டர் சிடில். இது தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஐ.சி.சி.ஆட்ட நடுவருக்குத் தெரியவில்லை.

webdunia
webdunia photoWD
இதையே ஹர்பஜன் செய்திருந்தால்...?

அதே போல் மிட்செல் ஜான்சனும், பீட்டர்சனும் ஒரு மோதலில் ஈடுபட்டனர். இவையெல்லாமே ஐ.சி.சி. நடத்தை விதி மீறல்களே. ஆனால் ஈடுபட்டது இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலிய வீரர்கள், விளையாடப்படுவது ஹை-வோல்டேஜ் ஆஷஸ் தொடர், இதனால் நடவடிக்கை இல்லை.

இவ்வாறெல்லாம் களத்தில் மோசமாக நடந்து கொண்டாலும் இரு அணித் தலைவர்களும் எங்களுக்குள் மோதல் எதுவும் இல்லை. இது சகஜம்தான் என்று கூறுகின்றனர்.

webdunia
webdunia photoWD
சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா நடித்த ஒரு திரைப்படத்தில் சத்யராஜும் வடிவேலுவும் ஒருவரையொருவர் மாறி மாறி கேவலப்படுத்திக் கொள்ள, கோவை சரளா அது பற்றி வடிவேலுவிடம் கோபப் பார்வை வீசுவார். அப்போது வடிவேலு, "நாங்க சின்ன வயசிலேர்ந்து பிரெண்ட்ஸ், அப்பொதிருந்தே நான் அவன் குடும்பத்தை கேவலமா பேசுவேன், அவன் என் குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசுவான், இதை நாங்க ஒரு விளையாட்டாவே எடுத்துக்குறது" என்று கூறுவார்.

அது போல் பரபஸ்பர கேவலப்படுத்தலை இரு அணிகளும் ஒரு 'விளையாட்டாவே' எடுத்துக் கொள்கிறார்கள் போலும்!

அணித் தலைவர்கள் என்னவேண்டுமானாலும் விளக்கம் கொடுத்து விட்டுப் போகட்டும், கிரிக்கெட் ஆட்டத்தை அதன் உணர்வுடனும், விதிகளுக்கு இணங்கவும் நடத்துவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக கூறிக் கொள்ளும் ஐ.சி.சி. இந்த போக்கை எப்படி பாரபட்சத்துடன் பார்க்கிறது என்று புரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil