Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக் கோப்பை கிரிக்கெட்:நியூஸீலாந்தின் வாய்ப்புகள் மங்கலாகவே உள்ளன

Advertiesment
உலகக் கோப்பை கிரிக்கெட்
, புதன், 9 பிப்ரவரி 2011 (18:13 IST)
webdunia photo
FILE
பொதுவாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் நியூஸீலாந்து அணிக்கு இந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் மிகவும் மங்கலாகவே உள்ளன.

கடந்த 3 மாதங்களாக அந்த அணி சாதாரண அணிகளிடம் கூட தோல்விகளைத் தழுவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அந்த அணி கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

மனோதிடம் இல்லாமை, பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் ஆக்ரோஷம் இல்லாமை, இதனால் எந்த வித சவாலும் கொடுக்காமல் எதிரணியிடம் சரணடைந்து வருகிறது நியூஸீலாந்து.

பொதுவாக கிரிக்கெட் நிபுணர்களகூறும் ஒரு கூற்றை நியூஸீலாந்து மீது இப்போது நாம் ஏற்றிக் கூறலாம். அதாவது அந்த அணி தோல்வி எனும் கெட்டப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது.

2007-இல் அசத்திய நியூஸீலாந்து!

ஆனால் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அந்த அணி அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி அரையிறுதிக்குள் நுழைந்தது, இது இந்தியா, பாகிஸ்தான் போன்ற பலமான அணிகள் துவக்கத்திலேயே வெளியேறியதால் நிகழ்ந்தது. மேலும் ஸ்டீபன் பிளெமிங் என்ற தலை சிறந்த கேப்டன் அந்த அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்ந்தார்.

சி-பிரிவில் ஆடிய நியூஸீலாந்து முதல் போட்டியில் இங்கிலாந்தை அதிர்ச்சி வெற்றி பெற்றது. ஷேன் பாண்ட் நன்றாக வீசி 10 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இங்கிலாந்து 209 ரன்களையே எடுத்தது. துரத்திய நியூஸீலாந்து 19/3 என்ற நிலையிலிருந்து ஸ்டைரிஸ் (87), ஓரம்(63) ஆகியோரது ஆட்டத்தின் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அடுத்ததாக கென்யாவை மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக கனடாவுக்கு எதிராக 363 ரன்கள் குவித்து நியுஸீலாந்து வெற்றி பெற்றது.

சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய அணியை பாண்ட் 177 ரன்களுக்குச் சுருட்டினார். ஓரம் 3 விக்கெட், வெட்டோரி 3 விக்கெட். இலக்கைத் துரத்திய அந்த அணி ஸ்டைரிஸ் மீண்டும் 80 ரன்கள் எடுக்க பிளெமிங் 45 ரன்கள் எடுக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

webdunia
webdunia photo
FILE
பிறகு வங்கதேசத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பந்தாடியது. பிறகு அயர்லாந்தையும் வெளியேற்றியது. கடைசியில் இலங்கையிடம் தோல்வி தழுவியது. தென் ஆப்பிரிக்காவை அடுத்த சூப்பர் 8 போட்டியில் எதிர்கொண்ட நியூஸீலாந்து அனைவரையும் திகைக்க வைக்கும் விதத்தில் வெற்றிபெற்றது. பலமான தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 193 ரன்களையே எடுக்க முடிந்தது. பாண்ட் மீண்டும் 2 விக்கெட்டுகள், மெக்மில்லன் 3 விக்கெட்டுகள்.

இலக்கைத் துரத்திய போது ஸ்டைரிஸ் மீண்டும் 56 ரன்களையும் கேப்டன் பிளெமிங் 50 ரன்களையும் எடுக்க எளிதான அதிர்ச்சி வெற்றியை பெற்றது. ஏற்கனவே அரையிறுதி உறுதி பெற்ற நிலையில் அந்த அணியை ஆஸ்ட்ரேலியா 215 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது.

பிறகு அரையிறுதியில் இலங்கையிடம் தோற்று வெளியேறியது.

2011 உலகக் கோப்பையில் நியூஸீலாந்து

இந்த உலகக் கோப்பையில் ஸ்டைரிஸ் உள்ளார் ஆனால் அவ்வளவாக ஃபார்மில் இல்லை. ஓரம் உள்ளார் காயமடைந்த நிலையில் களமிறங்குகிறார். வெட்டோரியின் தலைமையில் தாக்கம் இல்லாமல் போய்விட்டது. மெக்மில்லன் இல்லை, பாண்ட் இல்லை. ஒட்டுமொத்தமாக இது வரை 62 உலகக் கோப்பை போட்டிகளில் 35-இல் வென்று 26-இல் தோல்வி தழுவியுள்ளது நியூஸீலாந்து.

2010/11 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 27 ஒருநாள் போட்டிகளில் 8-இல் மட்டுமே வென்று 17 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. இதில் கடைசியாக பாகிஸ்தானுடன் பெற்ற 2 வெற்றிகளும் அடங்கும். வங்கதேசத்தில் தொடரை முழுதும் இழந்தது, இந்தியாவுக்கு எதிராக தொடரை முழுதும் இழந்தது. இந்திய, வங்கதேசம், இலங்கையில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தோல்விகள் நியூஸீலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பையில் வாய்ப்புகள் ஏறக்குறைய இல்லை என்றே கூற வைக்கிறது. ஆசியாவில் விளையாடிய 146 ஒரு நாள் போட்டிகளில் நியூசீலாந்து 43-இல் மட்டுமே வெற்றி பெற்று 96 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. இந்தப்பகுதி ஆட்டக்களங்களில் இந்த அணி தர்ம அடி வாங்கியுள்ளதை இது எடுத்துரைக்கிறது.

டேனியல் வெட்டோரி தலைமையில் இதுவரை 76 போட்டிகளை விளையாடியுள்ள நியூசீலாந்து 37-இல் வென்று 31-இல் தோற்றுள்ளது.

இந்த முறை அந்த அணி இந்திய ஆட்டக்களங்களில் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம்மை துவக்கத்தில் களமிறக்கினால் ஏதாவது பிரேக் த்ரூ செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய இவரும், ராஸ் டெய்லரும் அணியின் இப்போதைய பலங்கள். வெட்டோரியின் சுழற்பந்து ஒரு பலம் அவ்வளவே.

webdunia
webdunia photo
FILE
அணியின் ஃபீல்டிங் மற்றெந்த அணிகளைக் காட்டிலும் பலம் வாய்ந்தது. நேதன் மெக்கல்லத்தின் சிக்கன பந்து வீச்சும், பின்னால் களமிறங்கி ஆடும் அதிரடி ஆட்டங்களும் பலம் சேர்க்கிறது. ஜேகப் ஓரம் உள்ளார் ஆனால் அவரது ஃபார்ம் ஒன்றும் கூறிக்கொள்ளும் படியாக இல்லை. ஆனால் பிரெண்டன் மெக்கல்லம், மார்டின் கப்தில் துவக்கத்தில் களமிறங்க ஒண்ணாம் நிலையில் ஓரத்தைக் களமிறக்கி ஒரு அதிர்ச்சியை முயன்று பார்க்கலாம். பேட்டிங் பவர்பிளேயில் ராஸ் டெய்லர், வெட்டோரியின் ஆட்டம் கைகொடுக்கலாம். இறுதியில் கைல் மில்ஸின் பேட்டிங்கும் அந்த அணிக்கு கைகொடுக்கும். ரைடர் ஒரு நல்ல ஃபீல்டர் மற்றும் அதிரடி துவக்க வீரர். ரைடர், மெக்கல்லம் துவக்க சேர்க்கை பலனளிக்கலாம்.

அதே போல் ஜேம்ஸ் பிராங்கிளினின் சமீபத்திய ஆட்டங்களும் இந்த அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே அணியில் சில ஆச்சரிய எக்ஸ்-காரணிகள் உள்ளன. வெட்டோரி அதனை திறமையாகப்பயன் படுத்தி எதிரணியினரின் சிந்தனைக்கு அதிர்ச்சியளித்தால் நியூஸீலாந்து அணியும் தன் பங்கிற்கு இங்கு ஏதாவது செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

அந்த அணிக்கு இப்போது தேவை புதிய திறமைகள் அல்ல. திறமைகள் நிறையவே உள்ளன. ஆனால் மனோதிடம் தேவை. ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான், இலங்கை என்று கடினமான அணிகளிடம் தோற்றுப்போனாலும் ஜிம்பாப்வே, கனடா, கென்யா போன்ற அணிகளுக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெறவேண்டும் என்ற மனோநிலையில் களமிறங்குவது அவசியம்.

ஏனெனில் ஜிம்பாப்வே, கென்யா, கனடா அணிகள் எவ்வாறான தயாரிப்பில் உள்ளன என்று ஒருவருக்கும் தெரியாது. இதில் ஒரு போட்டியில் நியூசீலாந்து தோற்றாலும் காலிறுதி வாய்ப்பு பறிபோகாது இருந்தாலும் இந்த அணிகளை மட்டும் வென்று காலிறுதிக்குள் வந்தால் உடனே தோற்று வெளியேற வேன்டியதுதான்.

ஆனால் இந்த உலகக் கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ள விதம் இந்த அணிக்கும் காலிறுதியில் அதிர்ச்சி வெற்றி பெற ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. எல்லாம் அணியின் திறமைகளை திறம்படப் பயன்படுத்தும் வெட்டோரியின் கையில் உள்ளது.

நியூசீலாந்து அணி விவரம்: வெட்டோரி (கேப்டன்), ஹாமிஷ் பென்னெட், ஜேம்ஸ் பிராங்கிளின், மார்டின் கப்தில், ஜேமி ஹவ், பிரெண்டன் மெக்கல்லம், நேதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஜேகப் ஓரம், ரைடர், சவுத்தீ, ஸ்டைரிஸ், ராஸ் டெய்லர், கேன் வில்லியம்ஸன், லுக் உட்காக்

Share this Story:

Follow Webdunia tamil