Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய கிரிக்கெட் மேன்மை பெற என்ன செய்ய வேண்டும்? - இயன் சாப்பல் கருத்து

இந்திய கிரிக்கெட் மேன்மை பெற என்ன செய்ய வேண்டும்? - இயன் சாப்பல் கருத்து
, வியாழன், 25 ஆகஸ்ட் 2011 (13:58 IST)
FILE
நல்ல திறமையான, சவாலான இளம் கிரிக்கெட் திறமைகளை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கவேண்டும். நிறைய, வலுவான தலைமைக்கான வீரர்களை இந்தியா உருவாக்கினால் அந்த அணி எப்போதும் சிறப்பாகத் திகழும் என்று ஆஸ்ட்ரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

தனியார் கிரிக்கெட் இணையதளத்தில் நடந்த விவாதம் ஒன்றில் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர் கீழ் வருமாறு கூறினார்:

பி.சி.சி.ஐ. பணம் பண்ணுவதில் குறியாக உள்ளது, கிரிக்கெட்டை வளர்க்க முனைவதில்லை. மேலும் மூத்த வீரர்கள் கருத்திற்கு அதிக மரியாதைக் கொடுக்கிறது வாரியம் மேலும் அணித் தேர்வாளர்கள் தங்கள் கடமைகளை செய்ய தவறிவிட்டனர்.

எனக்கு தேர்வாளர்கள் தங்களுக்குள் இவ்வாறு கூறிக்கொண்டது போல் தோன்றுகிறது, அதாவது, 'இதுதான் இந்திய அணியின் மிகச்சிறந்த காலக்கட்டம் இதனைக் கொண்டு நாம் அதிகபட்சம் என்ன சம்பாதிக்க முடியுமோ அதனை ஈட்டி விடவேண்டும். அடுத்தகட்ட வீரர்களை நுழைத்தால் இப்போது சரிப்பட்டு வராது' என்று அணித் தேர்வாளர்கள் யோசிப்பது போல் எனக்குப் படுகிறது. எதிர்கால கிரிக்கெட்டிற்காக ஒன்றைக்கூட இவர்கள் திட்டமிட்டதாகத் தெரியவில்லை.

எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டமாக இருந்தாலும் வெற்றிக்கு ஆக வேண்டிய வழிமுறைகளைச் செய்தாகவேண்டும். நல்ல திறமையான வீரர்களை உருவாக்கி விட்டால் போதும் ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் என்று கவலைப்படவேண்டியதில்லை.

முதலில் ஒரு திறமையான பந்து வீச்சுக் குழுவை உருவாக்கவேண்டும். இந்தியா முதலிடம் பிடித்த போதே அவர்கள் இந்த நிலையை பிற நாட்டு மைதானங்களில் நீட்டிக்க இயலாது என்று நான் கூறினேன். மேலும் வயதான பேட்டிங் வரிசை பற்றி தேர்வுக் குழுவினர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்கள் ஃபீல்டிங் படு மோசமாக இருந்தது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஹர்பஜன் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒரு பந்து வீச்சாளராக இல்லை என்ற உண்மையை தேர்வுக்குழுவினர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கே?

வெற்றிபெறும் ஒரு அணி சோர்வடைந்து நான் பார்த்ததில்லை. சோர்வடைந்த அணிதான் தோல்விகளைச் சந்திக்கும். இந்தியா தற்போது தோல்விகளைப் பெற்று வருகிறது. பணம் சம்பாதிக்க வேண்டியதுதான் ஆனால் அதனை நிர்வகிக்க முடியவில்லையெனில் பணத்தால் பயனில்லை.

இருபது ஓவர் கிரிக்கெட்டில் வீரர்களை அதிகமாகப் பணம் சம்பாதிக்கவிட்டால் அவர்கள் எளிதான இந்த வழியையே தேர்வு செய்வர். எப்போதாவதுதான் திராவிடோ, டெண்டுல்கரோ, லஷ்மணோ உருவாக முடியும், அதாவது நல்ல டெஸ்ட் வீரர்கள் உருவாகிறார்கள். ஆனால் நிறைய வீரர்கள் சோம்பேறித்தனமான சுலபமான பணம் ஈட்டும் வழியையே தேர்வு செய்கின்றனர். இதனை மாற்றுவது பெருங்கடினம்.

முதல் தர கிரிக்கெட்டில் வீரர்களின் ஊதியத்தை அதிகரிப்பதன் மூலம் இந்தப் போக்கை மாற்றி விடமுடியாது. ஏனெனில் பணம் மட்டுமே ஊக்கப்பொருளாக இருந்தால் அது மீண்டும் பிரச்சனையில் கொண்டு போய் விடும்.

எனக்குத் தெரிந்த வரையில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் நன்றாக விளையாடியதன் மூலமே நல்ல சம்பளம் பெற முடியும் என்பதை உணர்ந்தவர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு சில நல்ல விஷயங்களைச் செய்துள்ளது. ஆனால் சிறந்த கருத்துக்களுக்கும் சரிவு ஏற்படும். இது இந்தியாவுடன் முடிந்து விடுவதில்லை. உலக கிரிக்கெட்டையே இந்த நோய் பீடித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சச்சின், திராவிட், லஷ்மண் ஆகியோர் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் அப்போது இளம் வீரர்களை அறிமுகம் செய்தனரா? இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சுரேஷ் ரெய்னாவை விட ரோஹித் ஷர்மா இருமடங்கு சிறந்த பேட்ஸ்மென். அவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்காதவராக இருந்திருக்கலாம். ஆனால் தேர்வாளர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. சில பேட்ஸ்மென்கள் மற்ற வீரர்களை விட டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தங்களை வேகமாக தகவமைத்துக் கொள்வர்.

ஒரு வீரரை கீழ் மட்ட கிரிக்கெட்டில் நீண்ட காலம் வைத்திருக்கக்கூடாது. இங்கிலாந்தில் கிரேம் ஹிக் இதற்கு சிறந்த உதாரணம். அவர் தரம் குறைந்த முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் நீண்ட காலம் விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அவர் வந்த போது அவரது தவறுகள் வெளிப்படையாகின. கிரேம் ஹிக் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முன்னமேயே வந்திருந்தால் அவர் தனது பலவீனங்களைச் சரி செய்து கொண்டிருப்பார். அவர் தனது தவறுகளைச் சரி செய்ய முயன்றபோது அவரது டெஸ்ட் வாழ்வே முடிந்து விட்டது. இதனால்தான் கூறுகிறேன், ரோஹித் ஷர்மாவை இப்போதே டெஸ்டில் நுழைக்கவேண்டும். அவர் எவ்வாறு விளையாடுகிறார் என்பதைப் பார்க்கவேண்டும்.

ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அணியை தேர்வு செய்யக்கூடாது. கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற அணியைத் தேர்வு செய்யவேண்டும். அடுத்த போட்டியில் வெல்லும் அணியைத் தேர்வு செய்யும்போது எதிர்காலத்திற்கும் சேர்ந்து திட்டமிடுவதாக அமையும்.

இந்திய அணியின் ஃபீல்டிங் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அராஜகமாக இருந்தது. ஆஸ்ட்ரேலியாவுக்கு வரும்போது இது இன்னும் மோசமாகவே ஆகும். ஏனெனில் அங்கு மைதானங்கள் பெரிது. திராவிட், சச்சின், லஷ்மணுக்கு சலுகை வழங்கலாம் ஆனால் இளம் வீரர்களுக்கு என்னவாயிற்று? அவர்கள் ஃபீல்டிங் சுத்த மோசம்.

பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையிலும் திணறினர். ஆஸ்ட்ரேலிய மைதானங்களில் இந்த அளவுக்கு பந்து வீச்சாளர்களுக்கு சப்போர்ட் இருக்காது. எனவே ஆஸ்ட்ரேலியா தொடருக்கு இந்தியா எந்த அணியுடன் வரப்போகிறது? இங்கிலாந்தில் பார்த்த அதே அணிதான் என்றால்... குட் லக்!"

இவ்வாறு இயன் சாப்பல் அந்த விவாதத்தில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil