இந்திய அணியிலிருந்து நீக்கியதால் யூசுப் பத்தான் ஆட்டம் மோசமடைந்ததா?
, புதன், 25 ஏப்ரல் 2012 (17:09 IST)
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பு எதையும் யூசுப் பத்தான் செய்யவில்லை. இதற்குக் காரணம் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இருந்தார் ஆனால் அதன் பிறகு காரணமில்லாமல் விலக்கப்பட்டார் இதனால் அவரது தன்னம்பிக்கை காலியாகிவிட்டது என்கிறார் கொல்கட்டா பயிற்சியாளர் வாசிம் அக்ரம்."
அவரை ஏன் அணியிலிருந்து நீக்கினார்கள் என்பது பற்றி நான் கூறமுடியாது, ஆனால் அதனால் விளைந்த பயன் என்னவெனில் அவரது தன்னம்பிக்கை பறிபோனது, இதுவே இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் மோசமாக ஆடுவதற்குக் காரணம். அவர் பெரிய ஆட்டங்களில் சிறப்பாக பரிமளிப்பவர் அதனால் அவர் நிச்சயம் மீண்டு எழுவார்"ஆனால் வாசிம் அக்ரம், இந்திய அணித் தேர்வாளர்களைக் குறைகூறுவது பொருத்தமற்றது என்றே தோன்றுகிறது. உலகக் கோப்பை போட்டிகளில் அவர் 6 போட்டிகளில் 74 ரன்களை 14.80 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.மேலும் அவரது அணுகுமுறை இந்திய அணித் தேர்வாளர்களிடையே அவர் மீது நம்பிக்கை ஏற்படுத்துமாறு அமையவில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.உலகக் கோப்பை ஆட்டத்தின் போது அவருக்குப் பதிலாக உள்ளே வந்த சுரேஷ் ரெய்னா காலிறுதி, அரையிறுதியில் முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடினார். இந்தியா இறுதிக்குள் நுழைந்தது. இதுவும் யூசுப் பத்தானின் ஆட்டத்தைப் பற்றி வெகுவாக குறைவான மதிப்பிடுதலுக்கு இட்டுச் சென்றது.நடப்பு ஐ.பி.எல். போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் 29 ரன்களை 5.80 என்ற சராசரியில் பெற்றுள்ளார். அவரது தினத்தில் யூசுப் பத்தான் எந்தப் பந்து வீச்சையும் கிழிப்பவர். ஆனால் இப்போதெல்லாம் அவர் வெகு சீக்கிரமே பெரிய ஷாட்களை ஆடச் சென்று விக்கெட்டை தூக்கி கொடுத்து விட்டு வருகிறார் என்று கொலக்ட்டா அணி நிர்வாகம் கருதுகிறது.யூசுப் பத்தானின் கிரிக்கெட் எதிர்காலம் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.அவரைப்போன்ற சிறப்புத் திறமையுடைய ஒரு வீரர் இவ்வளவு விரைவில் ஒழிந்து போவாரேயானால் அதனால் இந்திய அணிக்குத்தான் இழப்பு என்பதே இப்போது கவலை!