கிரிக்கெட் வீரர்கள் குடிப்பது என்பது சகஜமான ஒரு விஷயம்தான். அதிலும் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து வீரர்கள் மது அருந்துவதை ஒரு தினசரிப் பண்பாடாகவே வைத்திருப்பவர்கள். இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் வரலாறு காணாத ஆஷஸ் இழப்பு தினத்துக்கு முதல் நாள் மைக்கேல் கிளார்க், துவக்க வீரர் பிலிப் ஹியூஸ் இருவரும் நள்ளிரவு வரை மதுபான விடுதியில் குடித்ததாக நேரடி சாட்சியங்கள் தெரிவிக்க கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா தர்ம சங்கடத்தில் நெளிந்து கொண்டிருக்கிறது.2005
ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை இழந்த போது தன்னுடைய பேட்டிங் ஃபார்மிலும் தடுமாறி வந்த ரிக்கி பாண்டிங் "குடி என்பது என்னிடம் ஒரு பிரச்சனைதான்' என்பதை நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளார்.ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் போட்டிகள் நடைபெறும் நாட்களில் கூட மதுபான விடுதிகளில் சென்று முட்ட முட்டக் குடித்ததாக செய்திகள் வெளியாகின. அது கடைசியில் அவரது கிரிக்கெட் வாழ்வையே சீர்குலைத்தது என்பதையும் நாம் அறிவோம்.பிளின்டாஃப் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது மேற்கிந்திய தீவுகளில் நன்றாகக் குடித்து விட்டு படகில் சென்று கடலில் விழுந்ததும் இந்த தொடர் சம்பவங்களில் ஒன்றாகும்.தற்போது மைக்கேல் கிளார்க், பிலிப் ஹியூஸ் இந்தச் சிக்கலில் உள்ளனர். ஆஷஸ் தோல்விக்கு முதல் நாளன்று மெல்போர்னில் உள்ள மதுபான விடுதியில் இருவரும் இரவு 12 மணி வரை குடித்ததாக நேரில் பார்த்த ஒரு நபர் 3AW என்ற வானொலியில் இதனை தெரிவிக்க ஆஸ்ட்ரேலிய வீரர்கள் மீது பொதுமக்களின் கோபம் தற்போது திரும்பியுள்ளது.மேலும் ஹியூஸும், கிளார்க்கும் இணைந்து ரசிகர்களுடன் அந்த மதுபான விடுதியில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் பத்திரிக்கைகளில் வெளிவந்தது.
இந்த நபர் ஹியூஸிடம் இந்த நேரத்தில் எங்கு இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு ஹியூஸ் ஆட்டம் முடிந்து விட்டது அவ்வளவுதான். என்றாராம்.
அவர் அவுட்டாகிவிட்டார் ஆனாலும் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு நாட்டின் அணியில் விளையாடுபவர் இவ்வாறு கூறலாமா என்று அந்த நபர் வானொலியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அதே மது பான விடுதியில் மேல்போர்னைச் சேர்ந்த இங்கிலாந்து பெண்மணி ஒருவரும் இருந்துள்ளார். அவர் கூறும்போது கிளார்க்கும், ஹியூஸும் வோட்கா அருந்தியதாகவும், மற்ற வீரர்கள் தங்களுடன் வராததற்கு அவர்களை "அறுவை" பிடித்தவர்கள் என்று கூறியதும் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த டீன் ஜோன்ஸ், பொதுவாக இதுபோன்ற உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்போது மதுபான விடுதிகளுக்கு வருவது அரிதுதான்.
இந்த அணியில் உள்ள இந்தப் பண்பாடுதான் அணியின் பிரச்சனைகளுக்குக் காரணமாகக் கருதுவதாக டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக குடிக்கும் காலம் இப்போது இல்லை என்று கூறுகிறார் ஜோன்ஸ். டேவிட் பூன் ஒருமுறை சிட்னியிலிருந்து லண்டன் வருவதற்குள் 52 பீர் பாட்டில்களைக் காலி செய்ததாகக் கூறப்படுவதுண்டு.
மற்றொரு 'குடி' சம்பவத்தில் ஆஸ்ட்ரேலிய முன்னாள் வீரர்கள் கேரி கில்மரும், டக் வால்டர்ஸும் இங்கிலாந்துக்கு எதிராக மறுநாள் பேட்டிங் செய்ய வேண்டிய நிலையிலும் வெற்றியைக் கொண்டாட ஒரு மதுபான விடுதியில் விடிய விடியக் குடித்ததாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் இதில் ஒருவர் மறுநாள் 254 ரன்களையும் மற்றொருவர் 116 ரன்களும் அடித்தனர்.
இப்போதுள்ள ஆஸ்ட்ரேலிய அணி அவ்வாறு தங்களது குடிப்பழக்கத்திற்கு நியாயம் கற்பிக்க இயலுமா என்பதே பலரது கேள்வி.
முன்னாள் கிரிக்கெட் மேதையான மேற்கிந்திய அணியின் கேரி சோபர்ஸ் பலமுறை மறுநாள் ஆட்டம் இருக்கும்போது இரவு முழுதும் குட்ப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த மேற்கிந்திய அணி வெற்றி அணியாயிற்றே!
எந்த ஒரு விஷயமும் அணி வெற்றி பெறும்போது ஒரு நல்ல பண்பாடாகப் பார்க்கப்படும். அதுவே தோல்வி தழுவினால் அதனால்தான் எல்லாம் போய்விட்டது என்றும் கூறப்படும். இது உலகியல் விதி.
எந்தப் பண்பாடாய் இருந்தால் என்ன முன்னேறிய வெள்ளை நாகரீகங்களிலும் குடி ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது என்பதுதான் இப்போது நமக்கு செய்தி.