Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அபாரப் பந்து வீச்சு; ஒட்டுமொத்த ஆதிக்கம்; மேற்கிந்திய அணி வெற்றி

Advertiesment
அபாரப் பந்து வீச்சு
, திங்கள், 29 ஜூன் 2009 (11:18 IST)
கிங்ஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை 188 ரன்களுக்கு மட்டுப்படுத்திய மேற்கிந்திய அணி பின்பு கெய்ல் மற்றும் மார்ட்டனின் அதிரடியால் 35-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

PTI photographerPTI
களத்தில் ஓரளவு ஈரப்பதமும், மைதானத்தில் ஓரளவு நல்ல காற்றும் வீசியதால் ஃபீல்டிங் எடுக்க வேண்டிய தோனி பூவா தலையா வென்று முதலில் பேட் செய்வதாக தவறான முடிவெடுத்தார்.

தவறான முடிவு, தவறான பேட்டிங் அணுகுமுறையில் போய் முடிந்தது. ஆனால் டெய்லர், ரவி ராம்பால், டிவைன் பிராவோ ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பை உடைத்தனர்.

முதல் 20 ஓவர்கள் வரை பந்துகள் நன்றாக சுவிங் ஆனதோடு களத்தில் பந்துகள் சற்றே அதிகமாக எழும்பின. இந்த இரண்டும் சேர்ந்ததோடு, இதனைப் புரிந்து கொள்ளாமல் கவுதம் கம்பீர், ரொஹித் ஷர்மா, யுவ்ராஜ் சிங் ஆகியோர் உட்பட அனைவரும் ஆட்டமிழந்தனர்.

தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் எடுத்திருந்த போது டெய்லரின் பந்து ஒன்று லேட் ஸ்விங் ஆனது இதனால் பந்து மட்டையின் விளிம்பை அதுவாகவே தட்டிச் சென்றது, அது அபாரமான ஒரு பந்து மற்ற படி அனைவரும் ஆட்டமிழந்தவிதம் மோசமான ஷாட் தேர்வு என்பதில் ஐயமில்லை.

webdunia
webdunia photoWD
யுவ்ராஜ் சிங் மீண்டும் நல்ல இன்னிங்ஸிற்கான அடித்தளத்தை அமைத்து 35 ரன்கள் எடுத்து கடைசியில் மோசமான ஷாட் தேர்விற்கு டெய்லர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு தோனி மட்டும் ஒரு முனையில் நிற்க மறு முனையில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. எல்லா நம்பிக்கையும் தகர்ந்த நிலையில் 82/8 என்ற ஸ்கோரில் ஆர்.பி.சிங்கும் தோனியும் இணைகின்றனர்.

பிட்சில் தற்போது ஒன்றும் இல்லை என்பது போல் இருந்தது, ஆனால் மேற்கிந்திய வீச்சாளர்கள் தோனி 23-வது ஓவரில் பவர் பிளே எடுத்த போதும் கட்டுப்படுத்தினர். தோனி, ஆர்.பி.சிங்கிற்கு சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்தார். இதனால் 6 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் அவர் அடித்தார்.

webdunia
webdunia photoWD
ஆர்.பி.சிங் 75 பந்துகள் தாக்கு பிடித்து 1 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 23 ரன்கள் எடுத்தார். தோனியும், ஆர்.பி.சிங்கும் 9-வது விக்கெட்டுக்காக சேர்த்த 101 ரன்கள் 9-வது விக்கெட்டுக்காக 100 ரன்களுக்கு மேல் சேர்க்கப்பட்ட சாதனையில் 5-வதாகும்.

தோனி 2008- 09 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 9-வது முறையாக 100 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களுக்காக ஜோடி சேர்ந்து ஆடியுள்ளார். தோனி 130 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அபாரமான சதத்தை எடுக்கும் முன் ஆட்டமிழந்தார்.

இந்தியா 49-வது ஓவரில் 188 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

மேற்கிந்திய அணியில் ரவி ராம்பால் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் டெய்லர், பிராவோ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலக்கை துரத்தக் மேற்கிந்திய அணி களமிறங்கியது. பிரவீண் குமார் கிறிஸ் கெய்லுக்கு மைடன் ஓவர் வீசி எதிர்பார்ப்பை கிளப்பினார். ஆனால் அதற்கு பிறகு கிறிஸ் கெய்லுக்கு அவர் வீசிய பந்துகள் என்னவாக தெரிந்தது என்று தெரியவில்லை. தாறுமாறாக கிழித்தார். ஆர்.பி.சிங், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரது பந்து வீச்சிற்கும் கெய்ல் எந்த ஒரு மரியாதையும் கொடுக்க வில்லை.

நெஹ்ரா 4 ஓவர்களில் 36 ரன்களையும் பிரவீண் குமர் சுமாராக வீசி 7 ஓவர்களில் 37 ரன்களையும், ஆர்.பி.சிங் 3 ஓவர்கள் வீசி 15 ரன்களையும் கொடுத்தனர். 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 64 ரன்களை விளாசிய கெய்ல் கடைசியாக போனால் போகிறது என்று ரோஹித் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழக்கும்போது 30 ரன்களையே எடுத்திருந்த மார்ட்டன் அதன் பிறகு சிலம்பாட்டத்தை தொடர்ந்தார். எந்த ஒரு பந்து வீச்சாளரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது என்று நினைக்கும் அளவிற்கு வீசினார்கள். இதனால் மார்ட்டன் ஹர்பஜனின் வீசிய பந்தை மிகப்பெரிய சிக்சருக்கு தூக்க 35ஆவது ஓவரில் ஆட்டத்தை முடித்தார்.

அவர் 102 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நடுவில் விழுந்த ஒரே ஆறுதல் விக்கெட் சர்வாண் இவரும் ரோஹித் பந்தில் விளையாட்டாக ஆட்டமிழந்தார். நீண்ட நாளைக்கு பிறகு இந்திய அணிக்கு ஒரு மறக்கப்பட வேண்டிய ஒரு நாள் போட்டியாக இது அமைந்தது.

பிட்சையும், ஆட்டச் சூழ் நிலைகளையும் சரியாக கணிக்க முடியாத தோனியின் தவறான முடிவு, அந்த முடிவை சரியானதாக்கிவிருக்க வேண்டிய பேட்டிங் வரிசை சோடை போனது, எல்லாவற்றிற்கும் மேலாக பந்து வீச்சில் ஒரு போதும் விக்கெட்டுகளை வீழ்த்தவே மாட்டோம் என்று அடம்பிடித்தது என்று இந்திய வீரர்களின் பலவீனங்கள் அனைத்தும் வெளிப்பட்ட போட்டியாக இது அமைந்தது.

webdunia
webdunia photoWD
ஆனால் மேற்கிந்திய அணி இந்திய அணி மீது முழு ஆதிக்கத்தை செலுத்தி இந்த வெற்றியை சுலபமாக எட்டியது என்ற பாராட்டுக்குரிய அணியாக திகழ்ந்தது.

ஆட்ட நாயகனாக மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பால் தேர்வு செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil