Publish Date: Sat, 12 Mar 2016 (10:34 IST)
Updated Date: Sat, 12 Mar 2016 (10:39 IST)
எந்த தேர்தல் வந்தாலும், ரஜினியிடம் சென்று ஆதரவு கேட்பார்கள். குறைந்தபட்சம், எதிரணிக்கு அவர் வாய்ஸ் தரக்கூடாது என்றாவது கெஞ்சுவார்கள். இந்தத் தேர்தலில் இதுவரை எல்லாமே பேரமைதியில் உள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன், இனி எந்தத் தேர்தலிலும் ரஜினியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று அவரது கிங் மேக்கர் இமேஜில் ஒரு கிளெஸ்டர் பாமை வீசியிருக்கிறார். ம்... பதிலேயில்லை.
கபாலி, 2.0 என இரு படங்களில் நடித்து வருவதால் தேர்தல் கமிஷன், தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிக்க விடுத்த அழைப்புக்கும் பதில் சொல்லாமல் தொடர்பு எல்லைக்கு வெளியே தன்னை வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் இந்தத் தேர்தலில் வாய்ஸ் கொடுப்பார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கே இல்லை. யார் வெற்றிபெறுவார்கள் என்று கணிக்க முடியாத தேர்தலில் யாருக்காவது வாய்ஸ் தந்து வம்பில் மாட்டிக் கொள்ள ரஜினிக்கும் விருப்பமில்லை.
சென்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு அணில் மாதிரி உதவி செய்த விஜய்யும் இப்போது சைலண்ட் மோடில்தான் உள்ளார். அணில் மாதிரி உதவியதுக்கு அம்மா அளித்த பதில் மரியாதையை விஜய்யாலும், அவரது தந்தையாலும் தாங்க முடியவில்லை. பிறந்தநாளுக்கு பப்ளிக்காக கேக் வெட்டக்கூட அனுமதிக்காமல் துரத்தி அடித்த விழுப்புண்ணை அவர்களால் அப்படி எளிதில் மறக்க முடியுமா? திமுக என்ற வாணலிக்குப் பயந்து அதிமுக என்ற அடுப்பில் விழுந்தவர், இந்தத் தேர்தலில் நான் மட்டுமில்லை என்னுடைய மக்கள் இயக்கத்தின் பெயரைச் சொல்லி யாரும் யாரையும் எதிர்க்கவும் கூடாது ஆதரிக்கவும் கூடாது என்று ரசிகர்களுக்கு ரகசிய கட்டளை பிறப்பித்திருக்கிறாராம். விஜய் இந்தத் தேர்தலில் மைக் பிடிக்க வாய்ப்பில்லை, விரலில் மை வைக்க வந்தாலே பெரிய விஷயம்தான் என்கிறார்கள்.
வடிவேலின் நிலை குறித்து சொல்ல வேண்டியதில்லை. அடிச்சது மூணு மணி நேரம், ரெஸ்ட் அரை மணி நேரமா என்று ஆக்ரோஷமாக கேட்கும் அவரது டயலாக்கிற்கு அவரே உதாரணமாகிப் போனதுதான் பரிதாபம். மூணு வாரம் செய்த பிரச்சாரத்துக்கு நாலு வருஷம் வனவாசம் அனுபவித்தார். திமுக விஜயகாந்துக்காக காத்திருந்த வேளையில் கண்ணீர்விட்ட ஒரே ஆள் வடிவேலாகத்தான் இருப்பார். திமுகவுக்காக விஜயகாந்தை துரத்தி துரத்தி வசைபாடினவராயிற்றே. இந்த தேர்தலுக்கு அடிச்சுகூட கூப்பிடுவாங்க, ஆனா வாயே திறக்கப் போறதில்லை என்று டிம்டியின் எக்ஸ்ட்ரா உறுதியுடன் இருக்கிறார்.
ஸ்டார் நடிகர்கள் இப்படி சைலண்ட் மோடுக்குப் போனால் தேர்தல் என்டர்டெய்ன்மெண்டுக்கு ஜனங்க எங்கத்தான் போவாங்க?