Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2016 -இல் கவனம் ஈர்த்த தமிழ்ப் படங்கள்

2016 -இல் கவனம் ஈர்த்த தமிழ்ப் படங்கள்
, புதன், 28 டிசம்பர் 2016 (10:13 IST)
2016 -இல் சுமாராக 200 படங்கள் வெளியாயின. அதில் கவனம் ஈர்த்த படங்களை இரண்டு கைவிரல்களுக்குள் அடக்கிவிடலாம்.  இதுவே கொஞ்சம் தாராளமான மதிப்பீடுதான்.

 
இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் சீனு ராமசாமியின் தர்மதுரை, அறிமுக இயக்குனரின் உறியடி, பாபி சிம்ஹா நடித்த  மெட்ரோ, ஒருநாள் கூத்து போன்ற படங்கள் வெளியான போது, விமர்சகர்கள் மத்தியில் சின்ன சலசலப்பு எழுந்தது. வருட  இறுதிவரைகூட அந்த சலசலப்பு நீடிக்கவில்லை என்பது முக்கியமானது.
 
பீட்சா, ஜிகிர்தண்டா படங்களின் மூலம் கவனம் பெற்ற கார்த்திக் சுப்பாராஜின் இறைவி திரைப்படம் ஏமாற்றத்தையே தந்தது.  பாத்திர படைப்புகளில் வெளிப்பட்ட செயற்கைத்தனமும், முற்போக்கு என்றால் என்ன என்பதில் அவரிடம் காணப்பட்ட குழப்பமும் இறைவியை அரைகுறை படைப்பாக்கியது. இன்னொரு முக்கிய இயக்குனரான பாலாவின் தாரை தப்பட்டை மிக  மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. பாலா மீதான நம்பிக்கைகள் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில் தாரை  தப்பட்டை அதன் இறுதி அத்தியாயத்தை எழுதியது.
 
சூது கவ்வும் நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும் கொரிய திரைப்படமான மை டியர் டெஸ்பரடோவின் அதிகாரப்பூர்வ  தழுவல். அந்தப் படத்தை தமிழில் அதன் கட்டுக்கோப்பு குலையாமல் நலன் இயக்கியிருந்தார். படத்தில் ஆழமான உணர்வுகளோ திடீர் திருப்பங்களோ இல்லாததால் சுமாரான படமாக அது தோற்றமளித்தாலும், காதலும் கடந்து போகும் திரைப்படம் நலன்  குமாரசாமியின் மீதான நம்பிக்கையை தக்க வைத்தது எனலாம்.
 
இந்த வருடத்தின் புதிய நம்பிக்கை சுதா கொங்கரா. இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் தமிழ் சினிமாவில் அதுவரை  திறக்கப்படாத ஒரு சாரளத்தை திறந்தது. படத்தில் அரசியல்ரீதியாக நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அதையும் மீறி படம் கவனத்தை கவர்ந்தது.
 
இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் காக்கா முட்டை மணிகண்டன். அவரது இயக்கத்தில் குற்றமே தண்டனை,  ஆண்டவன் கட்டளை என இரு படங்கள் வெளிவந்தன. குற்றமே தண்டனை படத்தின் அமைதியான திரைமொழி மணிகண்டன்  மீதான மரியாதையை தக்க வைத்தது. எனினும் படம் அரைகுறை பதார்த்தமாக திருப்தியளிக்கவில்லை. ஆண்டவன் கட்டளை  இன்னொருவரின் கதை. கமர்ஷியல் படம்தான். ஆயினும் ஒரு நிறைவை தந்தது. ஓரளவு நேர்த்தியுடனும், லாஜிக்குடனும் கமர்ஷியல் படம் எடுக்க முடியும் என்பதற்கு ஆண்டவன் கட்டளை உதாரணமாக அமைந்தது.
 
சுசீந்திரனின் மாவீரன் கிட்டு திரைப்படம் சாதிய படிநிலைகளை சாதிப் பெயர் குறிப்பிடாமலே விமர்சித்தது. இதுபோன்ற படங்கள்  வரவேற்கத்தக்கவை என்றாலும், சமகால சாதிப் பிரச்சனைகளிலிருந்து விலகி நின்று, அதேநேரம் சாதிப் பிரச்சனையை பேசுவதாலேயே கவனத்தை ஈர்க்கும் படங்களாக இவை நிலைபெற்றிருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியது.
 
இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட படங்களில் முக்கியமானது ஜோக்கர். ராஜு முருகனின் இந்தப் படம் சாமானியனின்  பார்வையில் இன்றைய அரசியலை நையாண்டி செய்தது. பிரச்சார நெடி தூக்கலாக இருந்தாலும் ஜோக்கர் இந்த வருடத்தின்  முக்கியமான வரவு. இதனை அடித்தளமாக வைத்து ராஜு முருகன் அடுத்தப் படத்தில் முன்னேறி செல்வார் என்று நம்பலாம்.
 
சந்தேகமில்லாமல் இந்த வருடத்தின் பெருமைக்குரிய படம், வெற்றிமாறனின் விசாரணை. போலீஸ் என்ற அதிகார அமைப்பின்  அத்துமீறல்களை, அடாவடியை தோலுரித்து காட்டிய படம். படத்தில் பல குறைகள் இருந்தாலும் விசாரணையின் வரவு  முக்கியமானது. ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டிருக்கும் விசாரணை ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்பதே  அனைவரின் விருப்பம்.
 
இவை தவிர தோழா, அப்பா, அம்மிணி போன்ற ஒருசில முயற்சிகளும் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும், நல்ல  படங்கள் என்று சுட்டக்கூடிய திரைப்படங்கள் இந்த வருடமும் தமிழில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி ராஜேந்தர்