Publish Date: Wed, 13 Apr 2016 (10:23 IST)
Updated Date: Wed, 13 Apr 2016 (10:28 IST)
கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. கோடை வெயிலிலிருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் என்று மலையேறுகிறவர்களும், இளநீர், பழரசம் என்று தாகம் தீர்ப்பவர்களும், ஏசியை போட்டுவிட்டு வீட்டிலேயே பொழுதை கழிப்பவர்களும் தவறாமல் தஞ்சமடையும் இடம், திரையரங்குகள்.
கோடையில் படம் பார்க்கவரும் குழந்தைகளையும், குடும்பங்களையும் குறி வைத்து அதிக படங்கள் கோடையில் வெளியாகும்.
கோடை விடுமுறை தொடங்கும் முன்பே குழந்தைகளை குதூகலப்படுத்த, குங்ஃபூ பாண்டா 3 வெளியானது. படம் இந்தியாவில் நல்ல வசூலை பெற்றுள்ளது.
அதையடுத்து த ஜங்கிள் புக் வெளியாகி மிகுந்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வார இறுதியில் சென்னையில் த ஜங்கிள் புக் ஓடிய எந்தத் திரையரங்கிலும் டிக்கெட் இல்லை. அந்தளவு கூட்டம்.
வார நாட்களிலும் அரங்கு நிறைந்து ஓடுகிறது படம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் படம் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த கோடையில் குழந்தைகளும், குடும்பங்களும் தவறாமல் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கு சித்திரம், த ஜங்கிள் புக்.
தமிழக குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் அளவுக்கு பிடித்த ஹீரோ, விஜய். தெறியில் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார். அப்பா, மகள் சென்டிமெண்ட் படத்தில் அளவாக பிழியப்பட்டுள்ளது.
நாளை வெளியாகும் இந்தப் படத்தின் முதல் மூன்று நாள் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. குழந்தைகளும், குடும்பங்களும் ஒருசேர கொண்டாடும் படமாக தெறி இருக்கும்.
இந்த கோடையில் திரைக்கு வரும் இன்னொரு பொழுதுப்போக்கு திரைப்படம், சூர்யாவின் 24. படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும், இசையும், அட்டகாசமான இயக்கமும் இந்த கோடையின் சிறந்த என்டர்டெய்னராக இருக்கும் 24 இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
இவை தவிர ரஜினியின் கபாலி திரைப்படம் கோடை விடுமுறையின் இறுதியில் வெளியாகிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரஜினியின் வழக்கமான மாஸுடன் கிளாஸாக இப்படம் இருக்கும் என்ற எண்ணம் கபாலியை இந்த கோடையின் முக்கியமான படமாக்குகிறது.
இந்திப்பட ரசிகர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை ஷாருக்கானின் ஃபேன் வெளியாகிறது. இவை தவிர நயன்தாராவின் இது நம்ம ஆளு, கார்த்திக் சுப்பாராஜின் இறைவி உள்பட மேலும் பல முக்கிய திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க வரவிருக்கின்றன.
ஐபில் போட்டிகளுக்கு நடுவிலும் மேலே உள்ள படங்கள் ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும் தமிழகத்தின் மிக முக்கிய என்டர்டெய்ன்மெண்டான தேர்தல் நடைபெறவிருப்பதால் மே 10 முதல் 20 வரை எந்தத் திரைப்படமாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே திரையரங்குக்கு வரும்.
சவால், சவடால், அதிகாரம், போட்டி, பொறாமை, குதிகால்வெட்டு, நம்பிக்கை, நம்பிக்கை துரோகம், கடைசிநேர கால்வாருதல், பணப்பட்டுவாடா, பரிசளித்தல், பதுங்கி பாய்தல், கள்ள ஓட்டு, கன்னி ஓட்டு, கலவரம் என அனைத்து ரசங்களும் நிறைந்த ஒரே பொழுதுப்போக்கு தேர்தல். அதனை எந்தத் திரைப்படத்தாலும் முறியடிக்க முடியாது.