கேங்ஸ்டர் காதலியும் சில கேள்விகளும்
கேங்ஸ்டர் காதலியும் சில கேள்விகளும்
Publish Date: Mon, 07 Mar 2016 (13:20 IST)
Updated Date: Mon, 07 Mar 2016 (13:28 IST)
சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமியின் புதிய படம், காதலும் கடந்து போகும். விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியான் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.
இது தென்கொரிய படமொன்றின் தழுவல் என்பதை பலமுறை குறிப்பிட்டுள்ளோம். ஆனால், நலன் குமாரசாமியும் பிறரும் இதை ஒருமுறைக்கூட தவறியும் பதிவு செய்யவில்லை. ஆக, அதன் பின்னணி தகவல்களை சொல்வது நமது கடமையாகிறது.
சூதுகவ்வும் படத்தின் போதே, 2010 -இல் வெளியான தென்கொரியப் படமான, மை டியர் டெஸ்பரடோவின் தமிழ் தழுவல் உரிமையை 10 லட்சத்துக்கு வாங்கினார் நலன் குமாரசாமி. அந்தவகையில், கமல் பிரெஞ்சு படமான ஸ்லீப்லெஸ் நைட் படத்தின் உரிமையை வாங்குவதற்கு முன்பே வெளிநாட்டு படமொன்றின் உரிமையை முறைப்படி வாங்கியவர் என்ற பெருமை நலனுக்கு உரித்தாகுகிறது.
இந்தக் கதையை, எஸ்கிமோ காதல் என்ற பெயரில் சூர்யாவை வைத்து எடுக்க நலன் திட்டமிட்டார். மை டியர் டெஸ்பரடோ ஓரளவுக்கு நாயகி மையப்படம். அதில் நாயகன் ஓய்வு பெறும் நிலையிலிருக்கும் ஒரு கேங்ஸ்டர். புதுப்பையன்களிடம் அடி வாங்குகிறவர். சூர்யா தனது நாயக பிம்பத்துக்கு அந்தக்கதை சரிவராது என்று விலக, வேறு கதை தேட ஆரம்பித்தார் நலன். இந்த தேடல் பல வருடங்கள் நீடித்தது.
புதிய கதை எதுவும் செட்டாகாத நிலையில், தனது முதல்பட நாயகன் விஜய் சேதுபதியிடமே திரும்பி வந்தார். எஸ்கிமோ காதல், காதலும் கடந்து போகும் என பெயர் மாறியது. படமும் ரிலீஸுக்கு தயார்.
வெளிநாட்டில் - அது எந்த மொழியாக இருந்தாலும், சுடுவதற்கு தோதான கதை என்றால் இந்தியர்கள் விட்டு வைப்பதில்லை. ஒரே படத்தை நான்கு பேர் சுட்ட கதையெல்லாம் தமிழில் நடந்திருக்கிறது. மை டியர் டெஸ்பரடோவை 2013 -இல் இந்தியில் சுட்டனர். படம், ஜெயந்தா பாய் கி லவ் ஸ்டோரி.
விவேக் ஓபராய், நேகா சர்மா நடித்த இந்தப் படத்தை தோல்வி என்று சொல்வதைவிட, அட்டர் பிளாப் என்று சொல்லலாம். விவேக் ஓபராயின் ரசிகர்களுக்கே இப்படியொரு படம் வந்தது தெரிந்திருக்காது.
முறைப்படி உரிமை வாங்கி எடுத்த படத்தை, இன்னொருவர் காசு கொடுக்காமல் சுட்டால் கோபம் வருவதுதானே இயற்கை? வழக்கு போடுவதுதானே முறை? ஆனால், நலன் இன்னும் மௌனமாகவே இருக்கிறார். தனது படம் கொரிய படமொன்றின் தழுவல், அதனை தான் படமாக்கும் முன்பே இந்தியில் சுட்டுவிட்டார்கள் என்பது, தனது படத்துக்கே பின்னடைவாக அமையும் என்பதால் கம்மென்று இருக்கிறார். தவிர, யாருக்கும் தெரியாத இந்திப் படத்தை நாமாக சொல்லி தெரியப்படுத்த வேண்டுமா என்ற நியாயமான கேள்வியுடன், இந்தியில் டப்பாவான கதை, தமிழில் மட்டும் எடுபடுமா என்ற கேள்வி விநியோகஸ்தர்களிடம் ஏற்படவும் வழிவகுக்கும். ஆக, மௌனமாக இருப்பதுதான் ஒரேவழி.
ஒரு படத்தை முறைப்படி ரீமேக் உரிமை வாங்கி எடுப்பதிலும் எத்தனை சிக்கல்கள்? காதல் மட்டுமில்லை, நலனின் கஷ்டமும் கடந்து போகட்டும்.