Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரகசிய தடையால் அவதிக்குள்ளாகும் நடிகைகள்

Advertiesment
நடிகர் சங்கம்
துணி முள்ளில் விழுந்தாலும், முள் துணியில் விழுந்தாலும் கிழிவது துணி என்பது போல, எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சினிமாவிலும், சமூகத்திலும் பாதிப்புக்குள்ளாவது பெண்களாகவே இருக்கிறார்கள். 


 
 
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த மில்க் நடிகையும், அவரது இயக்குனர் கணவரும் பரஸ்பரம் பிரிவது என்று முடிவு செய்து, விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட என்ன காரணம் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. திருமண வாழ்க்கைக்கு அடிப்படையான நேர்மையும், நம்பிக்கையும் இல்லாமல் போனதாலேயே இந்த பிரிவு என்று இயக்குனர் கூறியதை நடிகை மறுக்கவில்லை. தனது தரப்பு விளக்கம் எதையும் அவர் அளிக்கவுமில்லை. 
 
காரணம் எதுவாக இருப்பினும் விவாகரத்து முடிவு இருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், இதனை காரணமாக வைத்து நடிகையை தமிழில் ஒதுக்குவதாக ஒரு நம்பத்தகுந்த செய்தி உலவுகிறது. இயக்குனர் தமிழில் பிரபலமானவர். அவரது தந்தையும் பிரபலமான தயாரிப்பாளர். நடிகையை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்தால் இவர்கள் இருவரின் மனம் புண்படுமோ, விரோதியாகிவிடுவோமோ என்ற அச்சத்தில் நடிகையை புறக்கணிக்கின்றனர். ஆனால், இயக்குனருக்கு எந்த பாதிப்பும் இல்லை. 
 
இப்படி நடப்பது முதல்முறையல்ல. நாட்டாமை நடிகர் ஒருகாலத்தில் மூன்றெழுத்து முக்காலா முக்காபுலா நடிகையுடன் நெருக்கமாக இருந்தார். தொடர்ந்து படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டபோது, நடிகை சென்னையில் நுழையவே அனுமதிக்கப்படவில்லை. படவாய்ப்புகள் அப்படியே நின்றுபோய் தமிழ் சினிமாவைவிட்டே அவர் வெளியேறுகிற நிலை ஏற்பட்டது. 
 
பிரச்சனைகள் வருகையில் நடிகையை கட்டம்கட்டி புறக்கணிப்பதை, சினிமாவின் கனவான்கள், கண்ணியவான்கள் என பெயரெடுத்தவர்களும் செய்கிறார்கள்.
 
சிறுத்தை நடிகர் தமன் நடிகையுடன் காதல் கொண்டபோது, சிறுத்தையின் குடும்பம் - முக்கியமாக சிறுத்தையின் தந்தை அதனை கடுமையாக எதிர்த்தார். நடிகை தமிழ்நாட்டிலிருந்தால் தனயன் கெட்டுவிடுவான் என்று நடிகைக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் தந்தை பார்த்துக் கொண்டார். சிறுத்தை தந்தையின் விருப்பப்படி சினிமாவுக்கு சம்பந்தமில்லாத பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகே - கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பிறகு - நடிகையால் தமிழ் சினிமாவில் நடிக்க முடிந்தது. 
 
பிரச்சனைகள் வரும்போது, சம்பந்தப்பட்ட நடிகையை மட்டும் ரகசியமாக கட்டம்கட்டும் இந்த திருப்பணியை நடிகர் சங்கம் முதல் எந்தத் திரையுலக சங்கங்களும் கண்டு கொள்வதில்லை என்பது கவலைக்குரியது.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உசைன் போல்ட்டுக்கும் ரஜினிகாந்துக்கும் போட்டி : வீடியோவை பாருங்க