Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ள நிவாரணம் - மக்களுக்கு நட்சத்திரங்களின் வேண்டுகோள்

Advertiesment
மழை
வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.


 

 
தன்னார்வலர்களை ஒன்றிணைத்தது, உதவித் தேவைப்படுவோரை கண்டறிந்து அவர்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்தது என நடிகர்கள் சித்தார்த்தும், ஆர்ஜே.பாலாஜியும் மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை.
 
நிவாரணப் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று களத்தில் இருக்கும் நசட்சத்திரங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நடிகர் விஷால், கட் அவுட் வைத்து பால் ஊற்றாதீர்கள், அந்தப் பணத்தில் நல உதவிகள் செய்யுங்கள் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

webdunia

 

 
அதேபோல் நடிகர் சித்தார்த், உணவுப் பொருள்கள் தேவையான அளவு உள்ளது, மக்களுக்கு இப்போது அடுத்தக்கட்ட உதவியான பாய், போர்வை, உடைகள், சானிடரி நாப்கின்கள் போன்றவற்றை தாருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
 
நடிகை சுஹாசினி, பழைய துணிகளை தராதீர்கள், புதுத்துணி வாங்கித் தாருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மனிதாபிமானம்.
 
அதையும் பாதுகாப்பாக உதவுங்கள். பீரோவில் அடைத்துக் கொண்டிருக்கும் பழைய உடைகளையோ, வீட்டில் தேவை இல்லாமல் இருக்கும் பழைய பொருட்களையோ கொடுக்க வேண்டாம்.
 
நீங்கள் பயன்படுத்திய உடைகள் நல்ல நிலையில் இருந்தால் அதை உங்கள் உறவினருக்கு கொடுக்கலாம். அதைவிட்டு அநாதையாக தவிப்பவர்களுக்கு அதை கொடுக்க வேண்டாம்.
 
120 ரூபாய்க்கு சேலை கிடைக்கிறது. எனவே உதவி செய்ய விரும்பினால் புதிய துணி, புதிய பொருட்களை வாங்கி கொடுங்கள். பழைய பொருட்களை கொடுக்கும் முன்பு சில நிமிடங்கள் யோசியுங்கள். உண்மையான நல்ல நோக்கத்துடன் உதவி செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.
 
அதேபோல் நடிகர் கார்த்தியும் மக்களுக்கு பல்வேறு வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். "தண்ணீரின் அளவு குறைய குறைய மக்களின் தேவை மாறிக் கொண்டேயிருக்கிறது, அதற்கேற்றார்போல நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
 
நானும் விஷாலும் வட சென்னைக்கு சென்று அங்கிருக்கும் நிலைமையை அறிந்து அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றவிதத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
 
எம்.ஜி.ஆர் நகர், போரூர் ஆகிய இடங்களில் ரமணாவும், சைதாப்பேட்டையில் சாந்தனு, ஈ.சி.ஆரில் சந்துருவும் இன்னும் பல இடங்களில் பல நடிகர்கள் நிவாரண உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
பொதுமக்கள் தற்போது பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உடனே பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் அருகில் இருக்கும் மருத்துவ முகாமிற்கு சென்று முன் எச்சரிக்கை ஊசியை போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 
முழுவதுமாக வெள்ளம் வடிந்தபின் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய், துணிகள் போன்ற பொருட்கள்தான் மிக மிக முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர இதுதான் அடுத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் தற்போது அதனை முழு வீச்சில் பேக் செய்து கொண்டிருக்கிறோம்" என கார்த்தி தெரிவித்துள்ளார்.
 
மேலும், நிவாரணத்தை பணமாக தர வேண்டாம் பொருள்களாக தாருங்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil