Publish Date: Thu, 20 Aug 2015 (08:56 IST)
Updated Date: Thu, 20 Aug 2015 (09:02 IST)
பீகாரின் சிறு கிராமத்தைச் சேர்ந்த தஸ்ரத் மான்ஜியின் கதையை, மான்ஜி தி மவுண்டன்மேன் என்ற பெயரில் படமாக எடுத்திருக்கிறார்கள். நாளை இந்தப் படம் திரைக்கு வருகிறது.
மான்ஜி அறிவாளியோ, கண்டுபிடிப்பாளரோ, திரைநட்சத்திரமோ, விளையாட்டு வீரரோ கிடையாது. கோடிக்கணக்கான சாதாரண மக்களில் மான்ஜியும் ஒருவர். அவரது கதையை படமாக்கும் அளவுக்கு அவரை முக்கியமானவராக மாற்றியது, மான்ஜியின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும்.
பீகாரின் கயா மாவட்டத்தில் கொலார் என்ற ஊரில் உள்ள மலைக்கு அந்தப்புறம் உள்ளது மான்ஜியின் கிராமம். தண்ணீர் எடுக்க, அடுத்த கிராமத்துக்கு செல்ல என எதற்கும் அந்த மலையை தாண்டித்தான் செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு என்றால் மலையைச் சுற்றி 80 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும்.
பின்தங்கிய பீகார் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய கிராமம் மான்ஜியுடையது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் யாருடைய கடைக்கண் பார்வையும் அந்த கிராமத்தின் மீது விழுந்ததில்லை. இந்நிலையில் 1959 -இல் மான்ஜியின் மனைவி பால்குனி தேவி தண்ணீர் எடுக்கச் செல்கையில் மலையிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைகிறார். 80 கிலோ மீட்டர்கள் சுற்றிக் கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது பால்குனி தேவி இறந்துவிட்டிருந்தார். அந்த மலை மட்டும் இல்லாமலிருந்தால், அதன் வழியே போக முடிந்திருந்தால் பால்குனி தேவி பிழைத்திருப்பார்.
அந்த எண்ணம் மான்ஜியின் கைகளில் சுத்தியலையும், உளியையும் ஏந்த வைத்தது. அவர் அந்த மலையை தனது சின்னஞ்சிறிய கருவியால் பிளக்க ஆரம்பித்தார்.
மலையை பிளக்க முயலும் மான்ஜியின் பைத்தியக்காரத்தனத்தை கண்டு ஊர் சிரித்தது. ஆனால் மான்ஜி மனம் தளரவில்லை. மனைவியின் மீதான காதல் அவரை செலுத்தியது. 22 வருடங்கள் முடிவில் அவரது முயற்சியின் முன்னே மலை பணிந்தது. மலையின் நடுவே மக்கள் செல்ல மலையை குடைந்து பாதை அமைத்தார் மான்ஜி. இப்போது 60 கிராமங்கள் மான்ஜியின் அர்ப்பணிப்பால் 80 கிலோ மீட்டர்களுக்குப் பதில் 13 கிலோ மீட்டர்கள் மட்டும் பயணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மான்ஜியின் இந்தக் கதையை படமாக்கியிருக்கிறார்கள். மான்ஜியாக நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். வழக்கமான சாதனையாளர்களின் படங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. நாளை இந்தப் படம் வெளியாகிறது.
தனது சாதனையை திரையில் பார்க்க மான்ஜி உயிருடன் இல்லை. 2007 -இல் புற்றுநோயால் அவர் மரணமடைந்தார். மான்ஜி குடைந்த மலை காதலுக்கும், விடாமுயற்சிக்கும் அடையாளமாக என்றென்றும் நிலைத்திருக்கும்.