கடந்த வருடத்தை விடவும் இந்த வருட படங்கள் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. சின்ன பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் படுதோல்வியை தழுவுகின்றன.
கௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் சென்னை சிட்டியில் 13.20 லட்சங்களுடன் காணாமல் போனது. அறிந்த நடிகரின் படத்துக்கே இதுதான் நிலை என்றால் மற்ற படங்களுக்கு...? சுமாரான இந்திப் படமான ரங்கூனே சென்னையில் 41 லட்சங்களை வசூலித்திருக்கும்போது நேரடித் தமிழ்ப் படங்கள் மண்ணை கவ்வுவது ஆயாசம் தரும் நிகழ்வு.
ஹரியின் சி 3 சென்ற வார இறுதியில் 5.03 லடங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 5.80 கோடிகள். இது ரெமோ வரவைவிட குறைவு. இவர்கள் எப்படி ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் என்று சொல்கிறார்கள்.
சென்ற வாரம் வெளியான சாந்தனுவின் முப்பரிமாணம் முதல் மூன்று தினங்களில் வெறும் 9.17 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸின் முதல் ஐந்து இடங்களுக்குள் வரவே இதனால் இயலவில்லை.
சென்ற வாரம் வெளியான இன்னொரு நேரடித் தமிழ்ப் படமான யாக்கை முதல் மூன்று தினங்களில் சென்னையில் 10.90 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட். கிருஷ்ணா, ஸ்வாதி என்று தெரிந்த நடிகர்கள்.
இந்திப் படமான கமான்டோ 2 (துப்பாக்கி வில்லன் நடித்தது) சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் சென்னையில் 11.12 லட்சங்களை வசூலித்து அசத்தியுள்ளது. விஜய் ஆண்டனியின் எமன் படம் சென்ற வார இறுதியில் 19.50 லட்சங்களை வசூலித்துள்ளது. முதல்வார இறுதியில் 1.12 கோடியை வசூலித்த படம் இரண்டாவது வார இறுதியிலேயே இவ்வளவு பெரிய சரிவை கண்டது துரதிர்ஷ்டம். முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல், 2.40 கோடிகள்.
22 வருடங்களுக்கு முன் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை வசூல் படைத்த பாட்ஷாவை சென்ற வாரம் மீண்டும் புதுப்படம் போல் வெளியிட்டனர். புதுப்படங்கள் பலவற்றை தாண்டி முதல் 3 தினங்களில் இப்படம் சென்னையில் 36.90 லட்சங்களை தனதாக்கியுள்ளது. இது நிச்சயம் சாதனைதான்.
ஆங்கில படமான லோகனுக்கு சென்னையில் நல்ல வரவேற்பு. சென்ற வாரம் வெளியான படம் முதல் 3 தினங்களில் சென்னையில் 52.30 லட்சங்களை தனதாக்கியுள்ளது. ஒரு ஆங்கிலப் படத்துக்கு இது அமோகமான ஓபனிங்.
அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய குற்றம் 23 சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 62.50 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.