கபாலி கட்டண கொள்ளை - பரபரப்பான பின்னணி தகவல்கள்
கபாலி கட்டண கொள்ளை - பரபரப்பான பின்னணி தகவல்கள்
கபாலி படத்தின் டிக்கெட்கள் அரசு நிர்ணயித்ததைவிட பல மடங்கு அதிக விலையில் திரையரங்கு கவுண்டரிலேயே விற்கப்படுகிறது.
சேலம் ரஜினி ரசிகர்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் கபாலி கட்டண கொள்ளை தொடர்பாக புகார்கள் குவிந்து வருகின்றன.
தமிழகம் தழுவிய அளவில் இப்படியொரு கொள்ளை நடப்பது அறிந்தும் அரசு எந்திரம் மௌனமாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த புகார்களின் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரிச்சலுகை பெறும் படங்களுக்கு, பார்வையாளர்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவையெல்லாம் கபாலி விஷயத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இவ்வளவு புகார்களுக்குப் பிறகும் இந்த கட்டண கொள்ளை கண்டு கொள்ளப்படாதது ஏன்...?
கபாலி படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்தே பிறர் படத்தை வாங்கியுள்ளனர். செங்கல்பட்டு ஏரியாவை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் வாங்கியிருப்பது போல. ஜாஸ் சினிமாஸின் பங்குதாரர்கள் ஆளும் கட்சிக்கு நெருக்கமான சசிகலாவும், இளவரசியும். திரையரங்குகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணம் ரஜினி, தாணு தொடங்கி ஜாஸ் சினிமாஸ்வரை அனைவருக்கும் செல்கிறது. அதன் காரணமாகவே கபாலி கட்டண கொள்ளை கண்டுகொள்ளப்படவில்லை என்கிறார்கள்.
முன்பு வேதாளம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸ் வாங்கியது. அந்தப் படத்துக்கும் கபாலி போன்று வரிச்சலுகை அளிக்கப்பட்டது. வேதாளத்துடன் வெளியான தூங்கா வனம் படத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்படவில்லை. அதேபோல், தூங்கா வனம் படத்தின் சிறப்புக் காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. வேதாளத்தின் சிறப்புக் காட்சிகள் தடையில்லாமல் நடத்தப்பட்டன.
வேதாளம் படத்தின் டிக்கெட்களை 500 ரூபாய்க்கு விற்பதாகவும், தமிழக முதல்வர் தலையிட்டு அதனை தடுக்க வேண்டும் என்றும் மதுரை அஜித் ரசிகர்கள் அப்போது போஸ்டர் ஒட்டினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கபாலி விஷயத்தில் அதேநிலைதான் - இன்னும் தீவிரமாக தொடர்கிறது.
இந்த பின்னணி அறிந்தவர்கள், அரசு தலையிட்டு கபாலி கட்டண கொள்ளையை தடுக்கும் என்று நம்ப தயாராகயில்லை. அவர்களின் அவநம்பிக்கைக்கேற்ப கட்டண கொள்ளை பெரும் ஊக்கத்துடன் தமிழகமெங்கும் தொடர்கிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்