விக்ரம் செய்தது சரியா...?
விக்ரம் செய்தது சரியா...?
Publish Date: Wed, 24 Feb 2016 (16:18 IST)
Updated Date: Wed, 24 Feb 2016 (16:22 IST)
கேரளாவில் நடந்த ஏஷியாநெட் திரைப்பட விருது விழாவில் நடந்த சம்பவத்தைதான் பலரும் வீடியோவாக பார்த்து சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாவல்களை மீறி தன்னை நெருங்கிய ரசிகனை பாதுகாவலர்களிடமிருந்து விக்ரம் மீட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு முத்தமும் தந்தார்.
விக்ரமின் கருணையை இணையம் எங்கும் சிலாகிக்கிறார்கள்.
அப்படி என்ன கருணையை காட்டிவிட்டாராம் விக்ரம்?
ஒரு வெறி பிடித்த ரசிகன் பாதுகாவலை மீறி அவரிடம் வந்து செல்பி எடுக்க முயன்றான். அதேபோன்று நாலு பேர் வந்தால் விழாவே நாசமாகும் என்றுதான் பாதுகாவலர்களை நியமித்திருக்கிறார்கள். அவர்களின் வேலையே இந்த வெறி பிடித்த ரசிகர்களை தடுப்பதுதான். அதைத்தான் அவர்கள் செய்தார்கள். அதில் என்ன தவறு?
கடை திறப்பு விழாவுக்கு ஆயிரக்கணக்கில் கூடும் ரசிகர்களிடமிருந்து இதே நடிகர்கள்தான் பாதுகாவலர்களின் உதவியோடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள். அப்போதும், ரசிகர்களை என்னிடம் வரவிடுங்கள், அவர்களை தடுக்காதீர்கள் என்று ஏசு கிறிஸ்து போல் கைவிரிக்க வேண்டியதுதானே?
அந்த ரசிகரிடம் விக்ரம் நடந்து கொண்டதைப் பார்த்து இன்னும் நாலு பேர் செல்பி எடுக்க வந்தால் விழா என்னவாகியிருக்கும்? விழாவில் விக்ரம் மட்டுமா இருந்தார்? மோகன்லால் உள்பட எத்தனையோ நடிகர்கள் இருந்தார்கள். அவர்களின் ரசிகர்களும் இதேபோல் செல்பி எடுக்க வந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்.
அந்த ரசிகன் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றவா பாதுகாவலர்களை தாண்டி வந்தார்? தனக்குப் பிடித்த நடிகரை போட்டோ எடுக்க. பொது இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது தெரியாத கூறுகெட்ட இந்த ரசிகர்கள்தான் நடிகர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறீர்கள். அதுபோன்ற ரசிகர்கள் நடிகர்களுக்கு தேவை. அவர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து செல்பி எடுப்பார்கள். அதுவும் மீடியாவில் செய்தியாகும். ஆனால், பார்க்கிறவர்களுக்கு எங்கே போனது புத்தி?
தனிமனித வழிபாட்டின் உச்சம்தான் அந்த ரசிகன் நடந்து கொண்டவிதம். அவன் வழிபடுவது விக்ரமை என்பதால் அவரும் அவனை கட்டியணைத்து உச்சிமோந்தார். இதில் எங்கே இருக்கிறது கருணையும் இரக்கமும்?
வீடியோவைப் பார்த்து சிலிக்கிறவர்களைப் பார்த்துதான் பரிதாப்பட வேண்டியிருக்கிறது.