Publish Date: Wed, 30 Mar 2016 (11:43 IST)
Updated Date: Wed, 30 Mar 2016 (11:53 IST)
சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
சென்னையில் இப்படம் முதல் மூன்று தினங்களில் 81 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பல முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள்கூட இந்த ஓபனிங்கை பெறுவதில்லை.
250 மில்லியன் டாலர்களில் பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ் படம் தயாரானது. 300, மேன் ஆஃப் ஸ்டீல் படங்களை இயக்கிய ஸாக் ஸ்னைடர் இயக்கம். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு. முதல் மூன்று தினங்களில் சுமார் 450 மில்லியன் டாலர்களை படம் வசூலிக்கும் என்று கணித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை யுஎஸ் உள்பட 66 நாடுகளில் படம் வெளியானது. யுஎஸ்ஸில் வெளியான அன்று 4,242 திரையரங்குகளில் இப்படம் 81.55 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இரண்டாவது நாள் 50.65 மில்லியன் டாலர்கள்.
மூன்றாவது நாள் ஞாயிறு 33.79 மில்லியன் டாலர்கள். மொத்தமாக முதல் மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் மட்டும் 166.007 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது. மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் படம் 150 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என கணித்திருந்தனர். அதனை படம் முறியடித்தது.
மூன்று தினங்களில் நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய ஆயிரம் கோடிகளை வசூலித்த படம், யுஎஸ் தவிர்த்த நாடுகளில் 256.50 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியது. இதில் 57 மில்லியன் டாலர்கள் சீனாவிலிருந்து கிடைத்தது.
சீனாவுக்கு அடுத்தபடி யுகேயில் இப்படம் 20 மில்லியன் டாலர்களையும், மெக்சிகோவில் 18 மில்லியன் டாலர்களையும் தனதாக்கியது. இந்தியாவில் 6.6 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வார்னர் பிரதர்ஸ் படங்களில் இதுவே இந்திய அளவில் அதிகபட்சம்.
உலக அளவில் முதல் மூன்று தினங்களில் 421 மில்லியன் டாலர்களை வசூலித்து வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள் பேட்மேனும், சூப்பர்மேனும். ஆனால், படம் எப்படி?
ஸாக் ஸ்னைடரின் மேன் ஆஃப் ஸ்டீல் அளவுக்கும் இந்தப் படம் இல்லை. சூப்பர் ஹீரோக்களை சரியாகப் பயன்படுத்தாததும், சுவாரஸியம் குறைவான திரைக்கதையும் ரசிகர்களை சோதிக்கின்றன.
அதேநேரம், சூப்பர் ஹீரோக்கள் மீதான உலக மக்களின் மயக்கம் படத்தையும், தயாரிப்பாளர்களையும் ஒருசேர காப்பாற்றியுள்ளது.