ஒரு முடிவுடன்தான் இருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். கபாலி முதல் சி 3 வரை எல்லா படங்களும் நஷ்டம்தான் என்று அவர் போட்ட போடில் திரையுலகமே கலகலத்தது. திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் ஓடிக்கொண்டிருக்க, பைரவா படத்தால் 1.64 கோடி எனக்கு நஷ்டம் என்று இன்னொரு குண்டை வீசியிருக்கிறார்.
சி 3 படம் வெளியான சில தினங்களிலேயே படத்தின் வெற்றிக்காக இயக்குனர் ஹரிக்கு டொயோட்டா பார்ச்சுனர் காரை சூர்யா பரிசளித்தார். அதுதான் திருப்பூர் சுப்பிரமணியத்தை ஏற்றிவிட்டது. சி3 படத்தின் நஷ்டத்தால் விநியோகஸ்தர்கள் காரை விற்றுக் கொண்டிருக்கும் போது நீங்கள் படம் சக்சஸ் என்று காரை பரிசளிக்கிறீர்களா என்று குமுறினார். பைரவா படத்தின் போது விஜய் அதில் பணிபுரிந்தவர்களுக்கு தங்கச்சங்கிலி; பரிசளித்தார். அதைத்தான் இப்போது விளாசியிருக்கிறார்.
பைரவா படத்தின் கோவை விநியோகஸ்தரான எனக்கு பைரவா படத்தால் 1.64 கோடி நஷ்டம். நான் என்னுடைய தங்கச் செயினை நஷ்டத்துக்காக விற்கும்போது, பைரவா வெற்றி என்று தங்கச்சங்கிலி பரிசளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 7 விநியோகஸ்தர்கள் பைரவாவை வெளியிட்டார்கள். கேரளாவில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர், வெளிநாட்டு உரிமை ஒருவர். மொத்தம் பத்து பேர்.
எம்ஜிஆர் தனது படம் வெளியானால் கேன்டீன்காரரிடம்கூட லாபமா என்று விசாரிப்பார். அந்தளவு வேண்டாம். இந்த பத்து பேரிடமாவது நடிகர்கள் போன் போட்டு விசாரிக்கலாமே என்று கேட்டுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த அட்டாக்கிற்கு, பைரவா நாலு நாளில் 100 கோடி என்று அறிவித்த தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் மட்டும் சின்னதாக ஒரு மழுப்பல் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, விஜய் செயின் பரிசளித்தது பைரவா படத்தின் வெற்றிக்காக அல்ல. பைரவா படத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு விஜய் தனிப்பட்டமுறையில் தெரிவித்த பாராட்டே அது என்று கூறியுள்ளார். அவர் சொன்னதிலிருந்து, பைரவா வெற்றிப் படம் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டது தெரிய வருகிறது.
காலையில வெற்றி, நாலு நாளில் 100 கோடிங்கிறாங்க... சாயந்திரமானா அதுவந்துங்கண்ணா... வெற்றியெல்லாம் இல்லைன்னு பம்முறாங்க... என்னப்பா நடக்குது தமிழ் சினிமாவுல...?