ஒவ்வொருவர் வீட்டிலும் துளசிச் செடி இருப்பது அவசியம். பல மருத்துவ குணங்கள் நிரம்பிய துளசிச் செடி, மகாவிஷ்ணுவிற்கு பிடித்தமான ஒன்றாகும்.
துளசியில் இரண்டு வகை உண்டு. அதில் கொஞ்சம் கருப்பாக இருக்கும் துளசியை கிருஷ்ண துளசி என்பார்கள். இதனை வீட்டில் இரட்டைச் செடியாக வளர்ப்பதே நல்லது. துளசியை வீட்டின் முன்பாகவோ, முற்றத்திலோதான் வளர்க்க வேண்டும்.
உங்கள் வீட்டில் துளசி மாடத்தை பிரதிஷ்டை செய்யும்போது, முதலில் சங்கை வைத்து விட்டு, அதன் மேல் மண்ணைப் போட்டு மூடி, தண்ணீர் தெளித்து, மூன்று துளசிச் செடிகளை ஒன்றாக நட்டு, துளசி மாடத்தை அமைக்க வேண்டும். அதாவது நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி என்பதற்கான அர்த்தம் தான் இது.
வீட்டில் துளசி மாடம் இருந்தால், தினம்தோறும் அதற்கு பூஜை செய்ய வேண்டியது அவசியம். அதாவது துளசி மாடத்தை சுற்றி சுத்தம் செய்துவிட்டு, அரிசி மாவால் கோலம் போட்டு, ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு பழமோ, அல்லது கற்கண்டையோ நெய்வேதியமாக வைத்து, பூஜை செய்ய வேண்டும்.
துளசி வழிபாட்டை காலை சூரிய உதயத்திற்கு முன்பு செய்வது மிகவும் நல்லது. அதாவது காலை 6 மணிக்கு முன்பாக துளசி மாடத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். துளசிச் செடிக்கு இனிப்பு பண்டங்களை நிவேதனமாக வைத்தால், சுக்கிர யோகத்தையும் அடைய முடியும்.
துளசிச் செடிக்கு தினமும், கடவுளின் பெயரைச் சொல்லி நீர் தெளித்து, வேரில் அளவோடு நீர் ஊற்ற வேண்டும். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால், எந்த சகுன பாதிப்பும் ஏற்படாது. வீட்டிற்கு திரும்பியபின், கை, கால் கழுவியபின், துளசியை வணங்கும்போது, தீய சக்திகள் எதுவும் நெருங்காது.
ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டில் இருந்து திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது, துளசிச் செடியை வழிபட்டு விடைபெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம், துளசிக்கு நீர் ஊற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வறுமை அகலும், திருமண வாழ்வு சுபிட்சமாக அமையும். சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.