Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடி அமாவாசை வழிபாடும் பூஜை முறைகளும்...!!

ஆடி அமாவாசை வழிபாடும் பூஜை முறைகளும்...!!
அமாவாசை நாளில் புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம்  மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல்,  வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி,  மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு  ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
 
பித்ரு பூஜை செய்வதால் முன்னோர்களின் ஆசியை பெறலாம். இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று  நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
 
ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம்.
 
அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள்  மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். 
 
அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடி மாத சிறப்புக்கள் நிறைந்த விரதங்கள் என்னென்ன....?