தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக்காணப்படும்.
பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப்பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப்போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே, ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத்தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ஆடி பதினெட்டிற்கு பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள்.
ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர்.
இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக்கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப்பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.