பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தீபம் ஏற்றுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும், கடன் தொல்லைகள் விலகும்.
வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் சர்வ மங்களம் கூடும், செல்வம் பெருகும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும், பாவங்களும் கூடும். தம்பதிகள் மனமொத்து வாழவும், மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.
அதிகாலையில் 3 மணியிலிருந்து 5 மணி வரை தீபம் ஏற்றினால், வீட்டில் சர்வமங்களமும் பெருகும். பூஜை விளக்கைத் தானே அணைய விடக் கூடாது.
விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
மாலையில் விளக்கேற்றும் போது, கொல்லைப் புறக் கதவை மூடி விட வேண்டும். வெள்ளி ஜோதியை பூஜை அறையில் வைத்தால், ஒரு பித்தளைத் தட்டின் மீதுதான் வைக்க வேண்டும். விளக்கை வெறும் தரையில் வைக்கக் கூடாது.