Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - மகரம்!

Advertiesment
ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - மகரம்!
, வெள்ளி, 28 ஜூலை 2017 (13:03 IST)
அதர்மங்களைக் கண்டு அஞ்சாதவர்களே! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
இராகுவின் பலன்கள்:
 
   இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக பல வேலைகள் செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில விஷயங்களை சாதிப்பீர்கள். 
 
உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும். என்றாலும் களஸ்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை வந்துப் போகும். 
 
பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மறதியால் விலை உயர்ந்த ஆபரணங்கள், செல் போனை இழக்க நேரிடும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
  உங்களின் சஷ்டம-பாக்யாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் தந்தையாரின் ஆரோக்யம் மேம்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். 
 
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் ராசிநாதனும்-தனாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் அழகு, இளமைக் கூடும். சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். பணவரவு எதிர்ப்பார்த்த வகையில் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறமைக் கூடும். என்றாலும் உடம்பில் இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படக் கூடும். எனவே உணவில் பச்சை காய்கறிகள், கீரை, கனி வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்த்துவிடுங்கள்.   
 
உங்களின் தைரியஸ்தானாதிபதியும் - விரையாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் புது முயற்சிகள் பலிதாகும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். இளைய சகோதரம் வகையில் உதவிகள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.  
 
  மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கேள்விக்கு விடை எழுதும் போது முக்கிய கீ ஆன்சரை மறந்துவிடாதீர்கள். நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். 
 
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். முடி உதிர்தல், வயிற்று வலி, தோலில் அலர்ஜி, பசியின்மை வந்துப் போகும். 
 
அரசியல்வாதிகளே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். தகுந்த ஆதாரமின்றி எதிர்கட்சியினரை தாக்கி பேச வேண்டாம். 
 
கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்ன சின்ன வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
  வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். லாபம் மந்தமாக இருக்கும். புள்ளி விவரங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். 
 
கட்டிட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது. கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. 
 
உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்குள்ளாவாதீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துச் செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடி பெற வேண்டி வரும். 
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி இதமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் அமைதி திரும்பும். என்றாலும் கேது ராசிக்குள் அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். 
 
அலுப்பு, சலிப்பு, ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, அல்சர், அலர்ஜி, முடி உதிர்தல், காய்ச்சல், கெட்ட கனவுகளெல்லாம் வந்துச் செல்லும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுவது நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அரவே தவிர்த்து விடுங்கள். இரும்புச் சத்து குறைவு, ஹார்மோன் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 
 
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. 
 
சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள். நீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். தன்னம்பிக்கை குறையும். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
  27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் சுக-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் உங்கள் ராசியிலேயே கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். மூத்த சகோதரர் வகையில் அலைச்சல்கள் வந்து போகும். வீடு மனை வாங்குவதாக இருந்தால் தாய் பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். இக்காலக்கட்டத்தில் அவிட்டம் 1, 2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு விபத்து, சளித்தொந்தரவு வந்து போகும். 
 
  உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. இக்காலக்கட்டத்தில் திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். 
 
7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். ஆரோக்யக் குறைவு ஏற்படும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
 
வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்துக் கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். அவர்களை திருப்திபடுத்த முடியாமலும் போகும். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். உரிமையை தக்க வைத்துக் கொள்ள நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.
 
  இந்த ராகு-கேது மாற்றம் குடும்பத்தில் சலசலப்பையும், ஆரோக்ய குறைவையும் தந்தாலும் ஆன்மீக பலத்தால் ஒரளவு நிம்மதியை தரும்.
 
பரிகாரம்:
 
கும்பகோணம் - நன்னிலம் மார்க்கத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீமங்கள நாயகி உடனுறை ஸ்ரீவாஞ்சிலிங்கேஸ்வரரையும் இத்திருக்கோவிலின் இரண்டாவது ராஜகோபுரத்து வடபாகத்தில் வடக்கு நோக்கி உள்ள ராகுவும்-கேதுவும் ஒன்றாக உள்ளதையும் தரிசியுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி!