முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று புறநானூறும் முருகனை புகழ்கின்றன.
முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி. இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.
பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் ஐதீகம், சிக்கலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் மகா கந்தசஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாள், சிக்கல் சிங்கார வேலர், அன்னை பராசக்தி வேல் நெடுங்கண்ணியின் சன்னதிக்குச் சென்று வேலைப் பெறுகின்றார்.
வேல் வாங்குதல் சிக்கலிலும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலும் உச்சநிலைச் சிறப்புகளுடன் நடைபெறுகின்ற காரணத்தினால், சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம் என்ற பழமொழி தோன்றியது.
முருகனது வேல் மகிமையும், மேன்மையும், தலைமையும், தெய்வீகத் தன்மையுடையது. எனவே, இது சிறப்பான வழிபாட்டிற்குரியது. முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.
சிலர் வேலின் நடுவில் சிவப்புக் கல்லைப் பதிக்கின்றனர். இப்படி பதிப்பது மிக நல்லது. முருகனை வழிபடுவதைப் போலவே வேலையும் வழிபட வேண்டும்.
சிலர் பரம்பரை பரம்பரையாக ஒரே வேலை பாதுகாத்து வழிபட்டு பக்திப் பெருமிதம் கொள்கின்றனர். வேலைத் தினமும் வழிபடுவது நல்லது. குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபடவேண்டும். மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்.