தந்தையான ஈசனுக்கு, முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். எனவே மந்திர உபதேசம் பெற, உபநயனம் செய்ய, கலைகளில் தேர்ச்சி பெற, புதிய கலைகளைக் கற்க இம்மாதம் சிறப்பு வாய்ந்தது.
உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
பாதாளத்தில் இருந்த பூமியை, பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். இதனால் இந்நாள் ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாட்டிற்கும் சிறந்த நாளாக அமைகிறது.
மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.
சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.
இந்த தினத்தில் பல கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் தீர்த்தவாரி நடைபெறும்.
புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், இயன்ற வரை அன்னதானம் செய்தால், கோடி புண்ணியம் வந்து சேரும்.