பொதுவாக முருகக்கடவுளை சிவபெருமானின் மகன் என்றே மக்கள் வழிபட்டு வருகின்றனர். வேண்டுதல் வேண்டாமை அற்ற இறைவன் வானுறையில் இல்லற வாழ்க்கை நடத்தி வருகிறானா என்று பலருக்கும் கேள்வி உள்ளது.
இறைவனுக்கு அருவம், அருவுருவம், உருவம் என 3 வடிவங்கள் உள்ளன. அவற்றுள் அருவம் கண்ணுக்கு புலப்படாதது. அருவுருவம் கண்ணுக்கு புலப்பட்டாலும் அது மருவி நிற்கும் தன்மையினைக் கொண்டதாகும். உருவம் என்பது கண்ணால் கண்டு மனதால் இரசிக்கக் கூடியதானது. உருவமற்ற இறைவன் உயிர்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக உருவம் தாங்கி வருகிறான். அதில் இறைவன் அறிவே சொரூபமாக காட்சியருளும் கோலமே குமரக்கடவுளின் கோலமாகும்.
அறிவு என்றுமே முதிர்ச்சியடையாது என்பதைக் காட்டவே முருகன் என்றும் இளமையாக காட்சித் தருகிறான். சிவெபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன் முருகப்பெருமான். சிவபெருமானுக்கு சத்யோஜாதம், வாமம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்று ஐந்து முகங்கள் உண்டு. ஆறாம் முகமாக அதோ முகமும் சிறப்பாகக் கூறப்படுதுண்டு. இந்த ஆறு முகங்களுமே முருகனுக்கு ஆறுமுகங்களாக விளங்குவன ஆகும்.
முருகக் கடவுள் அறிவின் ஆதாரமாக விளங்குபவன். அதனால் உடலுள் உள்ளஆறு ஆதாரச் சக்கரங்களை முன்னிருத்தி முருகனுக்கு எல்லாமே ஆறு என்ற எண்ணின் அடிப்படையில் பூஜாமுறைகள் இருக்கும். ஆறாம் திதியான சஷ்டி, ஆறு கார்த்திகைப் பெண்கள், சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம், ஆறுபடைவீடுகள் என முருகனின் வழிபாடுகள் யாவும் 6 என்ற எண்ணினைக் குறிப்பன.
ஆறு ஆதாரச் சக்கரங்களைக் கொண்டு உயிரானது குண்டலினிச் சக்தியினை இயக்கப்பெற்று இறுதியில் இறைவனை அடையும். அதற்கு அறிவு நம்மை ஆட்டுவிக்கும் என்பது இதன் தத்துவம்.
அறிவு என்றும் நம்மை ஆசை மற்றும் செயலில் இருந்து கட்டுப்படுத்தும் என்பதைக் காட்டவே முருகன் வள்ளி (இச்சாசக்தி/ஆசை) தெய்வானை (கிரியாசக்தி/செயல்) உடன் நின்றுக் காட்சித் தருவான். அவன் ஞானசக்தியானவன். அதாவது அறிவின் சொரூபமானவன்.