Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கும்பம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Advertiesment
கும்பம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
, வியாழன், 29 டிசம்பர் 2016 (00:23 IST)
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.


 

நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். உங்களுடைய ராசிக்கு 12-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப் பார்க்கயிருப்பதால் முன்கோபம், வேலைச்சுமை, மனஉளைச்சல், சகோதர வகையில் டென்ஷன், பணத்தட்டுப்பாடு வந்துச் செல்லும். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரம், பட்டாவையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது.

26.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம், நாக்கில் வறட்சி, கை, கால் மரத்துப் போகுதல் வந்துச் செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கணவன்-மனைவிக்குள் மோதல்களெல்லாம் வந்துப் போகும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு(Fibroids) பிரச்னைகளெல்லாம் வந்துச் செல்லும். ஊறுகாய், லாகிரி, வஸ்துக்கள் மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.

ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் தன-லாபாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துப் போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். திடீர் திடீரென்று உணர்ச்சிவசப்படுதல் இவையெல்லாம் இருக்கும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டாகும். நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் தனித்திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.

14.12.2017 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துச் செல்லும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிலர் காரியம் ஆகும் வரை உங்களை பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறிவார்கள்.

ஆனால் வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர், மாற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார்.

வியாபாரத்தில் தொட்டதெல்லாம் நட்டத்தில் போய் நின்றதே! தொழிலை விரிவுபடுத்தக் கூட பணமில்லாமல் தடுமாறினீர்களே! இனி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேற்றுமொழி பேசுபவர்-வெளிநாட்டினர் மூலம் புதுத் தொழில் தொடங்குவீர்கள். போடிங், லாஜிங், ஃபைனாஸ், கன்சல்டன்சி வகைகளால் லாபமடைவீர்கள். செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலைக்கு கடையை மாற்றுவீர்கள்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். பாரபட்சமாக நடந்துக் கொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும்படி நிலைமை சீராகும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும் 10-ல் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். செப்டம்பர் மாதம் முதல் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

கன்னிப் பெண்களே! தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறினீர்களே! வீண் வதந்திகளையும், அவமானங்களையும் சந்தித்தீர்களே! இனி பெற்றோரின் அறிவுரையை ஏற்பீர்கள். கல்யாணம் கூடி வரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! செப்டம்பர் மாதம் முதல் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! ஜெயிக்க வேண்டும் என்னும் வெறியில் ஆர்வமாகப் படிப்பீர்கள். கிரகிக்கும் சக்தி அதிகமாகும். விடைகளை எழுதி பாருங்கள். மறதி, அலட்சியம் இனி உங்களை விட்டு விலகும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.

கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய இருந்த பணம் ரிலீசாகும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற வைத்தாலும் மையப்பகுதியிலிருந்து அதிரடி மாற்றங்களையும், வெற்றிகளையும் தருவதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகரம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்