ஒரு சமயம், இயற்கை எழில் நிறைந்த வனத்தின் வழியே சிவபெருமானும், பார்வதி தேவியாரும் சென்றபோது தம் மெல்லிய கைகளால் பரமனின் திருக்கண்களை மறைத்தார். இதனால் பரமனின் இரு கண்களாக விளங்கும் ஞாயிறும் (சூரியனும்), திங்களும் (சந்திரனும்) மறைக்கப்படவே உலகத்தை இருள் கவ்வியது. அனைத்து இயக்கங்களும் முடங்கிவிட்டன. உயிரினங்கள் மயங்கி நின்றன.
இதுகண்ட தேவியார் தம் கைகளை விலக்கிக்கொள்ள, மீண்டும் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஈசன் அம்மையை நோக்கி அப்பாவம் நீங்க கேதாரத்திலும், காசியிலும், காஞ்சியிலும் தவம் மேற்கொள்ளுமாறு அருளினார்.
அன்னையும் கேதாரம், காசி, காஞ்சி, திருவண்ணாமலை ஆகிய தலங்களில் தவமியற்றினார். மங்கலப் பொருட்களால் லிங்க மூர்த்தியை எழுந்தருளச்செய்து முறைப்படி பூஜை செய்து ஒரு புரட்டாசித் திங்கள் வளர்பிறை அஷ்டமித் திதியில் கேதார கெளரி விரதத்தை அன்னையார் துவங்கினார்.
பார்வதி தேவியின் தவத்திலும், பூஜையிலும் மனமகிழ்ந்த சிவபெருமான், புரட்டாசித் திங்கள் தேய்பிறை சதுர்த்தியன்று அன்னை பார்வதிக்கு காட்சி கொடுத்து அம்மை விரும்பியபடி தம்முடைய இடப்பாகம் கொடுத்தருளினார்.
இக்கோலத்திலேயே சக்தியை தவிர்த்து தம்மை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவருக்கு, “சக்தி இல்லையேல் சிவன் இல்லை’ என உணர்த்தி அவரை ஆட்கொண்டருளினார்.
இந்த புராண சம்பவத்தை பிண்ணனியாகக் கொண்டு திகழும் இத்திருத்தலத்தின் மலைக்கோயிலில் கேதார அம்மன் (உற்சவ மூர்த்தி) கேதார கௌரி விரதத்தை அனுஷ்டிப்பதாக ஐதீகம். அவ்வாறே ஆலயத்தில் கேதார விரதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
“மகாளய அமாவாசை’யன்று உமாமகேஸ்வரன் உமையொரு பாகனாய் காட்சியருளும் நிகழ்வும் நடைபெறுகிறது. அன்று அர்த்தநாரீஸ்வரர் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், உற்சவர் உட்புறப்பாடும் நடைபெறுகின்றது.