நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு உண்டு. ராகு கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ராகு-கேதுவுக்கு கிழமைகள் இல்லை. அப்படியென்றால் ராகு-கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல! ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது காலம் என்பது இல்லை என்று சொல்லக் கூடாது. அதனைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம்.
மற்ற கிரகங்கள் மேஷம், மீனம், கும்பம், என்று இடமாகச் சுற்றும். சூரியனும், சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு-கேது இடமாகச் சுற்றி வரும். ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.
ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு-கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார் கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம்.