ஒரு இந்து ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், இந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர்.
ஆதி மூலமான ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் - எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் ஆதி மூலமான ஒரு ஆணையும் சேர்த்து ஏழு தலைமுறைகள் வருகின்றது. இந்த ஏழு தலைமுறைகளுக்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் அல்லது இறப்பினாலும் அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
சுப காரியங்கள் தவிர்க்க வேண்டிய காலம்:
பஞ்சாங்கங்கள் ஒருவர் இறந்தபின் தவிர்க்க வேண்டிய சுப காரியங்கள் பற்றி சில பரிந்துரைகளை அளிக்கின்றன. இறந்தவர் மற்றும் குறிப்பிட்டவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள உறவுமுறைகள் தான் தவிர்க்க வேண்டிய சுப காரியங்களை மாதங்கள் மற்றும் ஆண்டு கணக்கில் பரிந்துரைக்கின்றன.
தந்தை / கணவன் இறந்தால் - ஒரு வருடம், தாய் / மனைவி இறந்தால் - ஆறு மாதம், பிள்ளைகள் இறந்தால் - ஐந்து மாதம், சகோதரன் , சகோதரி - மூன்று மாதம், தாத்தா / பாட்டி, நெருங்கிய உறவினர்கள் - ஒரு மாதம். இந்த தோஷ காலங்களில் தீர்த்த யாத்திரை, பண்டிகை, போன்றவை விலக்க வேண்டும்.