திருக்கார்த்திகை என்பது கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை. அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும், கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
ஒவ்வொருவர் வீட்டிலும் மாலை நேரத்தில் தீப திருநாளையொட்டி, விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும்.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள். அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கு, சமையல் கூடத்தில் 1 விளக்கு, நடையில் 2 விளக்கு, வீட்டின் பின்புறம் 4 விளக்கு, திண்ணையில் 4 விளக்கு, மாட குழியில் 2 விளக்கு, நிலைப்படிக்கு 2 விளக்கு, சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.
27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிக்கும். எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடலாம். முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறு நாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றும் நேரம்: கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு ஏற்றுவது நல்லது.
சிவன் சக்தியின் அருள்: தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது. கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
வாழை இலை: தீபம் வைக்கும்போது கண்டிப்பாக ஒரு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.