விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். "ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா" என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்.
அனுமன் வழிபாடு எப்போதுமே காரிய ஸித்திக்குத் துணை நிற்கவல்லது என்று போற்றுகிறார்கள் பெரியோர். எந்தவொரு குழப்பமோ பயமோ இருந்தாலும் ஆஞ்சநேய பகவானைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆத்மார்த்தமாக அவர் மேல் பக்தி செலுத்தினால், அந்தப் பக்தியால் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்கி அருள்வார் அனுமன் என்பது ஐதீகம்.
ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபடுவர். இதில் வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். ராவணனோடு யுத்தம் செய்த ராமர் முடிவில் வெற்றி பெற்றார். இச்செய்தியை அசோகவனத்தில் இருக்கும் சீதைக்குத் தெரிவிக்க புறப்பட்டார் ஆஞ்சநேயர். அந்தச்செய்தி சீதையின் காதில் தேனாகப் பாய்ந்தது. மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க விரும்பினாள்.
அவள் அமர்ந்திருந்த இடத்தில் வெற்றிலைக் கொடி படர்ந்திருப்பதைக் கண்டாள். அந்த கொடியைப் பறித்து விட்டு, 'நல்ல செய்தி சொல்லவந்த உனக்கு இந்த வெற்றிலை மாலையைப் பரிசாக அளிக்கிறேன்' ஏற்றுக் கொள் என்றாள். அன்னையின் கையால் கிடைத்த மாலையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். இதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.