Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்!

Advertiesment
மிதுனம்
, வெள்ளி, 13 ஜூன் 2014 (13:46 IST)
பழைய கலைப் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கமுள்ள நீங்கள் நேர்மையை நேசிப்பவர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தினாரே!

எங்குச் சென்றாலும் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாரே! குடும்பத்திலும் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் இல்லாமல் செய்தாரே! எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்பட்டு புலம்ப வைத்தாரே! இப்படி பலவகையிலும் இன்னல்களை மாறி மாறி தந்து மனதில் அமைதியே இல்லாமல் நிலைக்குலையச் செய்த குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். 
 
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். அழகு, இளமைக் கூடும். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். 
 
தாழ்வுமனப்பான்மை, தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை விட்டு முழுமையாக விலகுவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனம், மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

இனந்தெரியாத கவலைகளால் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்யமும் சீராகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.  

குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு 8-ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்-. ஆயுள் கூடும். வேற்றுமதத்தினர் உதவுவார். குரு 10-ம் வீட்டை பார்ப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.       
   
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் சப்தம-ஜீவனாதிபதியான குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, வீண் அலைச்சல், கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம், எதிலும் பற்றற்ற போக்கு, மனைவிக்கு மருத்துவச் செலவுகள், உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்துப் போகும். உங்களைப் பற்றி சிலர் அவதூறு பேசுவார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, சொத்து வரிகளையெல்லாம் தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். வாகனம் பழுதாகி சரியாகும். 
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணம் வரத் தொடங்கும். வருமானம் உயரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தந்தையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வேற்றுமதத்தவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை உங்கள் ராசிநாதனும்-சுகாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. தோற்றப் பொலிவுக் கூடும். 
 
கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்துச் செல்லும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மனைவிவழியில் செலவுகள் அதிகமாகும். 
 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். என்றாலும் முன்கோபம், திடீர் பயணங்கள், கடன் பிரச்னைகள் வந்துச் செல்லும். ஷேர் மூலம் பணம் வரும்.     
 
வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். ரெட்டிப்பு லாபம் உண்டு. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் இனி ஒத்துழைப்பார்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். சொந்த இடத்திற்கு சிலர் கடையை மாற்றி அழகுப்படுத்துவீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவ பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார். 
 
உத்தியோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! சிறுசிறு அவமானங்களையும் சந்தித்தீர்களே! இனி உங்கள் உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். 
 
கன்னிப் பெண்களே! அலர்ஜி, வயிற்று வலி விலகும். உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமருவீர்கள். மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.     
  
மாணவ-மாணவிகளே! நினைவாற்றால் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.  
 
கலைத்துறையினரே! போட்டிகள் குறையும். திரையிட முடியாமல் தடைப்பட்டிருந்த உங்களது படைப்பு வெளியாகும். உங்களைப் பற்றிய வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும்.  
 
இந்த குரு பெயர்ச்சி தொட்டதையெல்லாம் துலங்க வைப்பதுடன் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதாக அமையும். 
 
பரிகாரம்
 
விழுப்புரத்திற்கு அருகிலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபனங்காட்டீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பூரம் அல்லது உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். 
 

Share this Story:

Follow Webdunia tamil