திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள் அற்புதமான நாள். கணவனின் தீர்க்க ஆயுள் வேண்டி பெண்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடும் நாள்.
கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் முழுநிலவும் இணைந்திருக்க, விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்த நோன்பு இருக்கின்றனர்.
திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மார்கழி மாத திருவாதிரை தினத்தில் சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். மாங்கல்யப் பலன் பெருகும்.
பாவங்கள் நீங்கும். அறிவும் ஆற்றலும் கூடும்.
மார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். நாள் முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம் ஆகும்.