அமிர்தமுண்டாகும்படித் தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத் தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலில் மூழ்க அதைக்கண்டு தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொண்டனர்.
விஷ்ணு வந்து ஆமையாகி மந்தரகிரி தன்முதுகில் நிற்கும்படித் தாங்கினார். இதனால் மமதை அடைய அவரின் மமதையை அடக்கும் பொருட்டு ஈசன் விநாயகரை அனுப்பிவைத்தார்.
விநாயகர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக் கடல் நீரையெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய் விட்டது. பின்பு விநாயகர் நீரைச் சிந்தினார்.
அந்த நீருடன் ஆமையும் வெளிவந்து விழுந்துக் கிடக்க, விநாயகர் அதன் ஓட்டினைத் தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக் காணிக்கையாகக் கொடுக்க தேவர்கள் வேண்டுதலினால் தலை மாலையுடன் அந்த ஆமையோட்டையும் மார்பில் தரித்துக் கொண்டருளினார்.