இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிபலன் உண்டு. பால் நீண்ட வாழ்வையும், தயிர், புத்திர விருத்தியையும், நெய், மோட்சத்தையும், பஞ்ச கவ்யம், ஆன்ம விருத்தியையும் தரும்.
பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு. பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் வாசம் செய்வதால், பால் அபிஷேகம் செய்வது ஏழு சமுத்திரங்களைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்வதாக கருதப்படும்.
தினமும் பழனி முருகனுக்கு 6 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது. நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய 4 பொருட்கள் மட்டுமே அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. முருகன் கையில் வைத்திருக்கும் வேலுக்கு அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த தினத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர் அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமை சிவனுக்கும் , செவ்வாய்க்கிழமை முருகனுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும், சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம்.
அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாலும் , சிறிது பருகினாலும் பிரபஞ்ச சக்திகளை நாம் பெற முடியும். அது நம் உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.