ஹனுமனைப்போல ஒரு பக்தர் இருந்ததால்தான் ஸ்ரீராமர் அளப்பரிய வெற்றிகளைப் பெற்றார். எனவேதான் அனுமன் 'சொல்லின் செல்வர்' என்பதைத்தாண்டி 'செயல் வேந்தர்' என்ற புகழையும் பெற்றார்.
ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.
உலகியல் ரீதியாக இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டாலும், ஆன்மிகக் கருத்து வேறு மாதிரியானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது. வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அனுமன் முகம் கிழக்கு நோக்கி இருக்கும். இந்த முகத்திற்கு வாழைப்பழமும், கொண்டைக்கடலையும், தெற்கு நோக்கிய நரசிம்ம முகத்திற்கு பானகமும், நீர்மோரும், மேற்கு நோக்கிய கருட முகத்திற்கு தேன் படைக்க வேண்டும். வடக்கு பார்த்த வராக முகத்திற்கு சர்க்கரைப்பொங்கல், வடையும் படைக்க வேண்டும். மேல் நோக்கிய ஹயக்ரீவ முகத்துக்கு படையல் அவசியமில்லை.