வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும். கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி அடைவர். “சகலகலாவள்ளி மாலை” சொல்லி இவ்வழிபாட்டைச் செய்யலாம்.
நெய்ப்பாயசம், வடை, வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். 48 நாட்கள் இவ்வழிபாட்டினைச் செய்த பிறகு, வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்தால் வழிபடுவோரின் நாவில் சரஸ்வதி தாண்டவமாடுவாள்.
துளசியாலும், தாமரையிதழ்களாலும் ஸ்ரீ சக்ரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தன ஆகர்ஷணமும், லக்ஷ்மி கடாட்சமும் நிறையும். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் மற்றும் தேன் நிவேதனம் செய்வது சிறப்பாகும்.
சிவப்பு அரளி மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் படைத்திட தொழில், உத்யோகம், அரசாங்க அனுகூலம் ஏற்படும்.
மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும், எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள் தீரும். ஸ்ரீ சக்ரத்தில் தேவியை ஸ்ரீ பாலா எனும் குழந்தை வடிவாக தியானித்து பால் அன்னம், தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு ஏற்படும்.
அமாவாசைக்கு அடுத்த தினமான பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால், தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குணமடைவர். நோயாளிகள் அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அர்ச்சித்து வர நோயிலிருந்து விடுபடுவர்.
ஸ்ரீ சக்ரத்தில் தாரம்பிகை மூல மந்திரத்தைக் கொண்டு ஆவாஹனம் செய்து வழிபட்டால் வெளிநாடு சம்பந்தபட்ட தொழில், உத்யோகம், வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் மகன், மகள், உற்றார், உறவினர் நலனுக்காகவும் இவ்வாறு வழிபடலாம். ஸ்ரீ சக்ரம் எங்கே இருக்கிறதோ அங்கே துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அனுகவே முடியாது. ஸ்ரீ சக்ரம் எந்த இல்லத்தில் உள்ளதோ அங்கு எவ்விதமான வாஸ்து தோஷங்கள் இருப்பினும் அவை கட்டுப்படும்.
பொது இடங்களாகிய ஆலயங்கள், திருமடங்கள், தியான பீடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லோரும் நலம் பெற வேண்டி “பிரஜா பிரதிஷ்டை” முறைப்படி ஸ்ரீ சக்ரம் அமைக்கபட்டால் ஒற்றுமையும், அமைதியும் அன்பும் உலகெங்கும் நிலவும்.