ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
அதிலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும் சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல செளபாக்கியங்களையும் பெறலாம்.
சதுர்த்தியன்று அதிகாலை நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்கவேண்டும். முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிடலாம். சதுர்த்தி மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொள்ளவேண்டும்.
சிவபெருமானுடைய பிள்ளையானதால் மரியாதையாகப் பிள்ளையார் என்று கூறுகின்றோம். விநாயகரின் திரு உருவத்தில் பல தெய்வங்கள் உறைகின்றனர். அவரது நாபி பிரம்ம சொரூபத்தையும், முகம் விஷ்ணு சொரூபத்தையும், இடப்பாகம் சக்தி வடிவையும், வலப்பாகம் சூரியனையும், முக்கண்கள் சிவசொரூபத்தையும் குறிக்கின்றன.
ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் விதமாக மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ வடிவத்தில் பிரம்ம சுவரூபத்தையும் இணைத்துக்கொண்டு அற்புதமாக அவர் காட்சி தருகின்றார்.